Trending

Tuesday 6 December 2016

தோக்கவாடி வேலாத்தாள் கோயில்

திருச்செங்கோட்டில் தோக்கவாடிக்கு அருகே வேலாத்தா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. தோக்கவாடி காணி கன்னன், வெண்டுவன், காடை கூட்டத்தாரின் காணியாச்சி. இங்குள்ள காணியாச்சி தெய்வம் காகத்தில், (காகம் கன்னகுலத்தார் காணி) இருந்து தலைச் சுமையாக வந்த ஸ்ரீகாகத்தலையம்மன். இங்குள்ள வெண்டுவன் கூட்டத்தார் கன்ன கூட்டத்தாருக்கு பெண் கொடுத்து பெண் எடுத்த விதமாக தோக்கவாடியில் காணியுரிமை பெற்றவர்கள். இந்த வெண்டுவன் கூட்டத்தின் ஆதி கொங்கூர், அப்புறம் கூடலூர் சென்று காணிவாங்கி பின்னர் கன்னிவாடி கன்ன கூட்டத்தோடு கல்யாண உறவு கொண்டனர். கன்ன கூட்டம் கன்னிவாடி-தலையநாட்டை விட்டு வெளியேறி திருச்செங்கோடு வந்தபோது அவர்களோடு வந்த உறவினர் வகையராவாக வந்தவர்கள். ஆதி கன்னிவாடி கன்ன கூட்டத்துக்கும் கீழ்க்கரை பூந்துறை நாடு (திருச்செங்கோடு) வந்துவிட்ட கன்ன கூட்டத்தினருக்கும் நீண்டகால உறவு இருந்துவந்ததை கன்னிவாடி பட்டயத்தின் மூலம் அறியலாம்.

இந்த தோக்கவாடி வெண்டுவன் கூட்டத்தில் நாளும் கிழமையுமா வேலாத்தாள் என்னும் பெண் அவதரித்தார். வெண்டுவன் கூட்டத்தினர் ராசம்மா என்றும் வேலாத்தா என்றும் பேர்களை தங்கள் பெண் குழந்தைகளுக்கு அதிகமாக சூட்டுவது அவர்கள் பாரம்பரியம். ஆத்மசக்தியோடு பிறந்த பெண். பிறப்பிலேயே தெய்வீக தன்மையோடு ஒளி பொருந்திய அந்த குழந்தையை நன்முறையில் வளர்த்தனர். சிறுவயது முதலே சிறந்த சிவபக்தையாக வளர்ந்தார் வேலாத்தா கவுண்ச்சி. சமய இலக்கியங்கள், பக்தி இதிகாசங்கள் அனைத்தையும் கற்றார்.

வீர விளையாட்டுகள், போற்பயிற்சிகள், குதிரையேற்றம், சிலம்பம் என போர்க்கலைகளை கற்று குடியானப் பெண்களுக்கே உரிய வீரத்தின் சாட்சியாக வளர்ந்தார். சிறந்த மதிநுட்பம், கல்வி கேள்விகளில் வல்லமை, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் துணிச்சல், அதேநேரம் பாரம்பரிய பண்புகள், பெரியவர்களுக்கு மரியாதை, சுய ஒழுக்கம், அயராத விவசாயப் பணிகள் என்று அனைத்திலும் சிறப்பான முத்திரை பதித்தார்.



அந்த சமயத்தில் கொங்கதேசத்துக்கு மிலேச்சர்கள் அதிகமாக படையெடுத்து தொந்தரவு செய்து கொண்டிருந்தனர். பூந்துறை நாடும் விதிவிலக்கின்றி பாதிக்கப்பட்டது. திருச்செங்கோடு வட்டத்திலும் அடிக்கடி திடீர் படையெடுப்பு, ஆடுமாடு கொள்ளை, திருட்டு, வழிப்பறி, கொலை, வீடுகள் எரிப்பு என்று அந்த அந்நியர்கள் பெரும் தொந்தரவு செய்தனர். நாட்டுத் தலைவர்கள் பட்டக்காரர்கள் எல்லாம் பல முறை படையெடுத்து சென்றும் அவர்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

பல பெண்கள் தாலி இழக்கவும், குடி சாதிகள் உயிர் காக்க அபயம் கேட்டும் நின்றனர். காக்க வேண்டியவர்களோ கைவிரித்து விட, தனது குடிகளின் அன்றாட ஓலங்களை காணச் சகியாது இனி குடிகளைக் காக்க நாமே களத்தில் இறங்குவது என வெகுண்டெழுந்தார் வேலாத்தா கவுண்ட்சி. ஏற்கனவே போர்க்கலை மற்றும் நியாய விவகாரங்களால் புகழடைந்திருந்த வேலாத்தா போருக்கு அழைக்க பெரும்படை குறுகிய காலத்தில் திரண்டது. புழுதிக் காடுகள் போர்ப் பயிற்சிப் பட்டறைகளாயின. இந்த தகவல் ஏற்கனவே படைகொண்டு சென்று தோற்று திரும்பியவர்களை எட்டியது.

"நாங்களே நேர்ல போயும் ஜெயிக்க முடீல; நீ கூட்டஜ் சேத்திகிட்டு தோக்கவாடி போற" (தோக்கவாடி-தோற்று வருவதற்கா டி என்ற அர்த்தத்தில்) என்று இளக்காரம் பேசினார்கள் பட்டக்காரர்கள். சொற்கள் சுரீர் என்று குத்தியது. இதையே சவாலாக எடுத்துக் கொண்டு தங்கள் பங்காளிகள், மாமன் மச்சினன் வீட்டார் என அனைவரையும் சேர்த்துக் கொண்டு படைகட்டினார். மேட்டுக காட்டு வெள்ளாமை செய்து உடல் இறுகி போயிருந்த குடியானவர்களை போருக்கு தயாராக்கினார். வேகமும், வீரமும் கொண்டு ஆவேச உரை நிகழ்த்தி படைகளுக்கு தெம்பூட்டினார். எதிரிகளின் பலம், பலவீனம், இருப்பிடம் எல்லாம் உளவறிந்து போர் வியூகம் வகுத்து படை நடத்தி சென்றார்.


படைகள் வளைத்து வளைத்து தாக்கியது. வேலாத்தா கவுண்ட்சியின் வியூகம் நன்றாக வேலை செய்தது. போர்க்களத்தில் துர்க்கையைப் போல சுற்றிச் சுழன்று போரிட்டார். அவரது ஆக்ரோஷமும் வேகமும் கண்ட வேலாத்தாவின் படையினர் உற்சாகமடைந்தனர். அக்னிஜ்வாலையாக களத்தில் வேலாத்தா கவுண்ட்சி பேரொளி வீசி ஜொலித்தார். வேலாத்தாளின் வீச்சுக்கு எதிரிப்படைத் தலைவன் தலை உருண்டது. எதிரிப்படைகள் சிதறின. தப்பி ஓடும் வழிகள் அடைபட்ட நிலையில் பலர் கைதாயினர். சாதிக்க முடியாத செயலை இந்த தெய்வப்பெண் குடியானவர் படை கொண்டு சாதித்துக் காட்டினார். "தோக்கவாடி போற!" என்று பரிகாசம் செய்தும் ஜெயித்துக் காட்டிய வேலாத்தாளின் ஊருக்கு அன்றுமுதல் "தோக்கவாடி" என்றே பேர் வந்துவிட்டது.

"தோக்கவாடி போற னு பட்டக்காரன் கேட்டும் இந்த பிள்ள போய் ஜெயிச்சுகிட்டு வந்துருச்சே, என்ன ஒரு தாட்ரிக்கம்,சாமர்த்தியம்..", என்று கீழ்க்கரை பூந்துறை நாட்டில் காடு மேடு, பட்டி தொட்டி, கிணத்தடி, கோயில் என்று எங்கெங்கும் வேலாத்தா கவுண்ட்சியின் வீரம் எதிரொலித்தது.

தன் பெண்ணுக்கு இப்படி ஒரு புகழ் பரவுவது அவர் தந்தைக்கு மகிழ்ச்சி. வேலாத்தா கவுண்ட்சி மீண்டும் தனது விவசாயம், சிவ பக்தி பூஜை என்று அன்றாட வாழ்க்கைக்கு திரும்பினார். அவரது ஆன்மீக ஈடுபாடு குடும்ப வாழ்க்கைக்கு இடையூராகிவிடுமோ என்று பயந்தார் தந்தையார். அதேமாதிரிதான் இருந்தது. தனக்கு கல்யாணம் வேண்டாம் என்று அடம் பிடித்தார் வேலாத்தா. இல்லற வாழ்க்கை ஆன்மீக வாழ்க்கைக்கு இடையூறாக அமையும் என்று கருதினார்.

பெரியோர்கள் கூடி உரிய உபதேசங்கள் செய்தனர். இல்லற வாழ்வே ஆன்மீக வாழ்வையும் பூரணமாக்கும் என்றனர். பல உத்தம பெண்மணிகளின் வாழ்க்கையை உதாரணமாக காட்டியும், பதிபக்தி பரமனின் பக்தியை விடவும் மேலானது என்றும் எடுத்துரைத்து நல்வழி கூறினர். வேலாத்தாவும் நல்ல மனமாற்றம் அடைந்தார். அவர் கற்ற நூல்களும் அதே கருத்தையும் வலியுறுத்தியதை உணர்ந்தவராக மனத் தெளிவு பெற்றார். பெரியோர்கள் கூறுகிறார்களே என்றில்லாமல், முழு ஈடுபாட்டுடன் பதி-பத்தினி யாக, சம்சார வாழ்வின் மூலம் அற வாழ்வில் ஈடுபட்டு செய்யவேண்டிய கடமைகளைச் செய்து, சிவனருளைப் பெற எண்ணினார்.

வேலாத்தாவுக்கு தகுந்த மணமகனோடு நல்ல பொழுதில் கல்யாணமும் நிச்சயமாகியது. முகூர்த்த நாளில் எல்லா சீர்களும் செய்து தோக்கவாடியில் கொங்கு முறைப்படி பெண்வீட்டில் கல்யாணம் நடந்தது. கட்டியங்கள், பறை, கொம்பு, சங்கு, மேளதாளங்கள் முழங்க, அருமைக்காரர் முன்னின்று கல்யாணத்தை நடத்தி வைத்தார். மங்கள வாழ்த்து நாவிதன் ஓத, கம்பர் வாழ்த்தை புலவனார் ஓத கல்யாணம் இனிதே நிறைவுற்றது. எங்கும் மகிழ்ச்சி, சிரிப்பு. படை கட்டி போர் நடத்திய பெண் மணமாலை சூடி வெட்கம் கலந்து பூரித்து நின்றார்.

கல்யாணக் கோலம் களையாது மாப்பிள்ளையும், பெண்ணுமாக ஊர்கோயில் சென்றுவர போய்வரும் வழியிலேயே பூநாகம் தீண்டி மாப்பிள்ளை உயிர்நீத்தார். சொல்லவொணா துயரில் ஊரே மூழ்கியது. ஒளி பொருந்திய தெய்வப்பெண் வேலாத்தா உடனே எழுந்து, தான் தனது கணவனோடு வீரமாத்தி இறங்கப்போவதாக சொன்னார். வேலாத்தாவின் மீது உயிரையே வைத்திருந்த ஊராரும் உறவினர்களும் இதை அனுமதிக்கவே மாட்டோம் என்று கறாராக மறுத்தனர். ஆனால், தனது கருத்தில் உறுதியாக இருந்த வேலாத்தா, இது தனது உரிமை என்று கூறி, அரசனிடம் சென்று அனுமதி வாங்கி வந்து, தனது ஊரிலேயே தனது கணவனோடு சேர்ந்து வீரமாத்தி இறங்கி தெய்வநிலை அடைந்தார். தெய்வப் பெண்ணின் ஒளி அந்த வட்டாரத்தையே நிறைத்தது. அவ்விடத்தில் வேலாத்தாவின் பரம்பரையினர் கோயில் கட்டி விழா நடத்தி வழிபட்டு வருகின்றனர்.



இன்றளவும், வேலாத்தா சக்திவாய்ந்த பெண் தெய்வமாக தோக்கவாடி வெண்டுவன், கன்னன், காடை கூட்டங்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சாமானிய பெண்ணான வேலாத்தா கவுண்ட்சியின் வீர வரலாறு எங்கேயும் பதிவாகவில்லை. வாய்மொழி வழக்காகவே இன்றளவும் உள்ளது. இன்றைய கொங்கு பெண்களுக்கு வழிகாட்டியாகவும், போலி பெண்ணியம் பேசி மரபுகளையும் வரலாற்றையும் இகழ்ந்து வரும் முற்போக்குவாதிகளுக்கு சாட்டையடி கொடுப்பதாகவும் வேலாத்தா கவுண்ட்சி வரலாறு அமைகிறது.








All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates