Trending

Monday 23 December 2013

நாட்டு கவுண்டர் விளக்கம்

பழங்குடி என்பது பிற சமூகங்களோடு இணையாமல் தனிக்குழுவாக வாழ்பவர்கள். பெரும்பாலும் ஓரிடத்தில் நிலைத்து வாழ தேவையான சமூக வாழ்வாதார கட்டமைப்பை ஏற்படுத்திக்கொள்ள தெரியாதவர்கள். 

சாதி என்பது பழங்குடியின் மேம்பட்ட-பண்பட்ட-முறைப்பட்ட வடிவம். இங்கு பல சாதிகள் ஒன்றிணைந்து தங்களுக்குள் வேலைகளை பிரித்துக்கொண்டு, விதிமுறைகள், நெறிமுறைகள் ஏற்ப்படுத்தி, பிணக்கின்றி வாழும் முறை. இதை ஒரு வரியில் சொல்லிவிட்டாலும், ஒரு சமூகத்தை கட்டமைப்பது மிகப்பெரிய பணி. வாழ்வாதாரம், நாட்டுப்பசுக்கள், வனங்கள், பெண்கள்,  நீராதாரம், வரிவசூல், சாதி உரிமைகள், கோயில்கள், கல்விசாலைகள், போக்குவரத்து, பொருளாதாரம், பாதுகாப்பு, சமூக சட்டங்கள், நிர்வாக முறை என கணக்கில் அடங்கா பணிகள் இதில் உள்ளன. நம் நாட்டை பொறுத்தவரை சாதி என்பது ஒரு சமூக சொத்து. 

இப்படியான சமூகத்தில் தொழில் கலாசார அடிப்படையில் சாதிகள் பிரிந்தன. அது மேலும், வட்டாரம் பொறுத்து மேலும் தனித்துவம் பெற துவங்கின. (உதாரணம்: கொங்கு சாதி -படத்தை காண்க)




இப்படியான சமூகத்தில் நிர்வாக பணிகளை பிரிக்க கொங்கதேச நிர்வாக அமைப்பின்படி (படத்தை காண்க) பிரிக்கப்பட்டதே பட்டக்காரர் என்னும் அமைப்பு. 

பட்டக்காரர் என்பது அரசு நிர்வாகப் பொறுப்பு.  அரசன் பார்த்து நியமிப்பது. அரசனின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது, வரிவசூல், தானிய-விதைநெல் இருப்பு, நீராதாரம், ஆண்-பெண் விகிதாச்சாரம் எல்லை பாதுகாவல் போன்றவை கடமைகள். ஒரு நாட்டின் பட்டக்காரர் என்றால் அவர் அந்நாட்டின் எல்லா மக்களுக்குமே தலைவர்; அரச பிரதிநிதி போல. விசுவாசம், ஒழுக்கம், தர்மம் தவறும் பட்சத்திலோ, அரசன் பார்த்து மாற்றும் வரையிலோ வம்ச பரம்பரையாக பதவி சென்று கொண்டிருக்கும். இந்த பதவி தனி ஜாதியல்ல. கொங்க தேசத்திற்கு மொத்தம் 24 நாடுகள் ஒவ்வொரு நாட்டுக்கும் பட்டக்காரர் உண்டு, நாடுகளுக்குள் உப நாடுகளும் சமஸ்தானங்களும் இருப்பதால் ஒரே நாட்டிற்கு ஒன்றிற்கு மேற்ப்பட்ட பட்டக்காரர் வகையறா ஏற்படும். இங்கு பட்டக்காரர் என்பவர் பதவிக்குரிய ஒருவர் மட்டுமே

கீழ்க்கரை பூந்துறை/ராசிபுர நாட்டு பட்டகாரர் வம்சங்கள் அனைவருமே அக்கரையில் இருந்து திருசெங்கோட்டு பகுதிக்கு பஞ்சம் பிழைக்க வந்து அரசர்களின் ஆதரவால் பட்டக்காரர் பதவி பெற்ற, கொங்கு வெள்ளாள கவுண்டர் ஜாதியைச் சேர்ந்த குடியானவர்கள் ஆவர். 

பட்டக்காரர் என்பது அரசு நிர்வாகப் பதவி என்பது போல, நாட்டார்-நாட்டுக் கவுண்டர் என்பது சமூக நிர்வாகப் பதவியாகும். அக்காலத்தில் ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி ஜாதி நிர்வாக அமைப்புகளும் அதற்கு தலைவர்கள் உண்டு.வெள்ளாள ஜாதி நிர்வாக சபையை சித்ரமேழி சபை என்பார்கள். சித்ரமேழி என்பது வெள்ளாளர் ஜாதிக்கொடி. பொன்மேழி என்றும் சொல்வார்கள். தங்க கலப்பை பொறிக்கப்பட்ட கொடி. இந்த சித்ரமேழி சபை ஒவ்வொரு ஊரிலும் உண்டு. காணியளவிலும் உண்டு. நாட்டு அளவிலும் உண்டு (பூந்துறைநாட்டு சபை பற்றிய வெள்ளோடு கல்வெட்டு). கொங்கதேசம் முழுமைக்கும் ஒரு பெரிய நாட்டு சபையும் உண்டு. இந்த நாட்டு சபையில் ஒவ்வொரு நாட்டின் கவுண்டர்கள் சார்பில் பிரதிநிதியாக செல்பவர் நாட்டார் எனப்படுவார். நாட்டார்கள் கூடும் சபைக்கு நாட்டார் சபை என்று பேர். இந்த நாட்டார் பதவி என்பது ஜாதி பிரதிநிதியாக மக்களால் தேர்ந்தெடுக்கபடுபவர்களாவர் (இதுபற்றி சர்க்கார் கேஜட்டிலும் குறிப்புண்டு).

மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் நாட்டாராக நாட்டு சபையில் பங்கேற்பார். ஒரு கட்டத்தில் மக்கள் செல்வாக்கு என்பது அரச பதவி வகித்தவர்களிடம் மிகுந்திருப்பது எதார்த்தம் என்பதால் பட்டக்காரர்களே நாட்டாராகவும் இருந்தனர். இதை வைத்துக் கொண்டு பட்டக்காரர் மட்டுமே நாட்டார் என்பது தவறு. கன்னிவாடி பட்டயத்தில் நாட்டார் வேறு பட்டக்காரர் வேறு என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. பல பட்டயங்களில் பட்டக்காரர் அல்லாதவர்கள்தான் பெரும்பான்மையாக நாட்டார் சபையில் பங்கெடுத்துள்ளனர். கொங்கதேசம் போல தொண்டை மற்றும் சோழ மண்டலங்களிலும் அங்குள்ள வெள்ளாளர்கள் சித்ரமேழி சபை நடத்தியுள்ளனர்.  எனவே சித்ரமேழி சபை என்பது வெள்ளாள ஜாதியின் சபை.

கொங்கில் பேரரசுகள் நிலையற்று இருந்த காலகட்டத்தில் தேசத்தின் பிரச்சனைகளையும் மக்களையும் இந்த சித்ரமேழி சபையைச் சேர்ந்த வெள்ளாள கவுண்டர்களே கவனித்து வந்தனர். அதனால் பேரரசுகள் மாறினும் இந்த சித்ரமேழி சபையின் பலம் மாறவில்லை.

ஜாதி நிர்வாகப் பதவியான நாட்டார் என்றாலும் சரி, அரச நிர்வாகப் பதவியான பட்டக்காரர் என்றாலும் சரி, அது ஒருவரை மட்டுமே குறிக்கும். அவரின் உறவின்முறை வட்டத்தை சேர்ந்தோர் நாட்டார் ஒரம்பறை (உறவின்முறை)/வகையறா/வம்சாவழி எனப்பட்டனர். நாட்டார் உறவினர் பங்காளிகள் எல்லாரும் நாட்டார் என்று அழைக்கக்கூடாது. இது வரலாற்று பிழையாகும்.

நாட்டாரே ஒரு நாட்டின் பெண்களுக்கும், நாட்டுப்பசுக்களுக்கும் பொறுப்பு. அவர் அனுமதியின்றி பசுக்களோ பெண்களோ நாட்டை தாண்டி போகக்கூடாது. அதன்பொருட்டே கல்யாணத்தில் நாட்டுக்கல் சீர் பின்பற்றப்படுகிறது. தாலி என்பதும் கூட நாட்டார் எழுதி தரும் கல்யாண சான்றே. இன்றும் பல ஊர்களில் நாட்டுக்கல் நடப்பட்டுள்ளது. குடும்ப வழக்கு, சொத்து தகராறு, கோயில் உரிமைகள், சாதி பிணக்குகள் என்று ஒரு நாட்டின் பேரும் பொறுப்பை நாட்டார் கவனித்தார். குலகுருவின் வழிகாட்டுதல், பயிற்சி போன்றவற்றால் இத்தனை காரியங்களும் செய்தனர்.


நாட்டுக்கல் 
இந்த நிர்வாக முறைதான் கொங்கதேசம் முழுக்க இருந்தது. ஆனால் கீழ்க்கரை பூந்துறையின் உப நாடுகளான மோரூர், மொளசி, மல்லசமுத்திரம், பருத்திப்பள்ளி, ஏழூர்; மற்றும் ராசிபுரம் நாட்டின் நாட்டார் பிறந்த கோத்திரங்கள்-[மோரூர் கன்ன கோத்திரம்; மொளசி கன்ன கோத்திரம்; மல்லை விழியன் கோத்திரம்; பருத்திப்பள்ளி செல்லன் கோத்திரம்; ஏழூர் பண்ணை கோத்திரம் மற்றும் ராசிபுரம் விழியன் கோத்திரம் (திண்டமங்கலம், வீரபாண்டி மற்றும் மாவுரெட்டி காணிகள் தான் அவற்றை நாடுகள் என்று சொல்லலாகாது)] மட்டும் தற்கால சூழலில் நாட்டுக்கவுண்டர் என்று சர்க்காரால் தனிப்பிரிவாக வகைப்படுத்தப்பட்டனர். இங்கே நாட்டாரின் உறவின்முறையார் அனைவரையுமே நாட்டுக் கவுண்டர் என்று வகைபடுத்தியது சரித்திர பிழையே. அது இன்று நாட்டு கவுண்டர் - வெள்ளாள கவுண்டர் என்று சாதிக்குள்ளேயே பிரிவினையை உருவாக்கி விட்டது. 

இந்த நாட்டார் அமைப்பு இன்றளவும் கொங்கின் பிற பகுதிகளிலும் காணலாம் [படம் காண்க: ஈரோடு சென்னிமலை கோயில் கல்வெட்டு; பூந்துறை வெள்ளோடு எழுமாத்தூர் நசியனூர் ஆகிய நான்கு நாட்டு (அதாவது, நாடுகளின்) கவுண்டர்களால்  கும்பாபிசேகம் செய்யப்படுகிறது]. 



ஆனால் அவர்கள் நாட்டு கவுண்டர் என்று வகைப்படுத்தாமல் கொங்கு வெள்ளாள கவுண்டர் என்றே இன்றளவும் சர்க்காரால் வகைப்படுத்தப்பட்டனர். இன்று நாட்டு கவுண்டர் என்று சர்க்காரால் சொல்லப்படுவோர், ஒரு காலத்திற்கு பின் ஆற்றிற்கு மேற்கே பெண் கொள்வினை கொடுப்பினை நின்றது எனவே இந்த தனித்துவம் நிலைத்தது. 

கல்யாண முறையைப் பொறுத்தவரை எல்லா கவுண்டர்களும் அவரவர் உறவின்முறை வட்டத்துக்குள் பெண் எடுத்து கட்டினர். உறவின்முறை வட்டம் என்பது நாட்டாராகவும்-காணியாளராகவும்-குடியானவராகவும் இருக்கலாம். நாட்டார் காணியாளர் கல்யாணங்களும் பல இடங்களில் அக்காலம் தொட்டே நடந்துள்ளது. பதிவைக் கொண்டு கல்யாண உறவுகளைப் பிரிப்பது இல்லை. உறவின்முறை வட்டமே கணக்கு. இன்று கொங்கு வெள்ளாள கவுண்டர் வகையறாவில் உள்ள சித்தாளந்தூர் கன்னர், ஆனங்கூர் கன்னர், தகடப்பாடி-மண்டபத்தூர் கன்னர் எல்லாம் மோரூர் நாட்டின் முதல் பட்டக்காரரான சூர்ய காங்கேயனின் உடன் பிறந்த சகோதரர் வம்சாவழியினர். 

கால்வாய் வெட்டிய காளிங்கராயர் அப்புச்சி/மனைவி அனுமன்பள்ளி பண்ணை கூட்டத்தை சேர்ந்தவர். அனுமன்பள்ளி பண்ணையில் இருந்து பிரிந்ததே கீழ்க்கரை நாட்டு ஏழூர் பண்ணை கூட்டமாகும். மோரூர் கன்னகூட்டத்தைச் சேர்ந்த கிழாம்பாடி கன்னர்கள் இன்று சர்டிபிகேட் நாட்டு கவுண்டர் வகையில் இல்லை. அதுபோல மொளசி கன்ன கூட்டத்தை சேர்ந்த காஞ்சிக்கோயில் கன்னனும் இல்லை. மோரூர், மொளசி நாட்டார் உட்பட இங்கு உள்ள அனைத்து காணியாள கன்ன கூட்டத்தாருக்கும் ஆதி பூர்வீகமான தலைய நாடு கன்னிவாடி பட்டக்காரரும் இன்று சர்க்காரால் நாட்டுக்கவுண்டர் என்று கூறப்படவில்லை. ராசிபுரம்/மல்லை/திண்டமங்கலம் விழியன், ஏழூர்/கல்யாணி பண்ணை, பருத்திப்பள்ளி செல்லன், வீரபாண்டி மணியன் போன்ற கீழ்க்கரை பூந்துறை-ராசிபுர நாட்டார் வகையறாவில் ஆதி காணிகள் அனைத்தும் காணியாள/குடியான கவுண்டர் வகையராதான்.

இன்றைய சர்டிபிகேட் நாட்டு கவுண்டர்களும் அவர்களின் பூர்வீகமும்:

மோரூர்/மொளசி/வெண்ணந்தூர்/மாவுரெட்டி கன்னன் - பூர்வீகம்: தலைய நாடு கன்னிவாடி 
(மணலூர் செல்லாண்டியம்மன்-சிவசெல்வியம்மன் கோயில்)

ராசிபுரம்/மல்லை/திண்டமங்கலம் விழியன் - பூர்வீகம்: காங்கயம் நாடு பரஞ்சேர்வழி காணி (கரியகாளியம்மன் கோயில்)

ஏழூர்/கல்யாணி பண்ணை - பூர்வீகம் மேல்கரை பூந்துறை நாடு-அனுமன்பள்ளி காணி 
(சின்னம்மன்-பெரியம்மன் கோயில்)

பருத்திப்பள்ளி செல்லன் - பூர்வீகம் மேல்கரை பூந்துறை நாடு-அனுமன்பள்ளி காணி 
(சின்னம்மன்-பெரியம்மன் கோயில்) இலுப்புலியே முதல் காணி என்று சொல்வாரும் உண்டு. செல்லன்கூட்டத்தாரின் ஏழு கரைகளில் பருத்திப்பள்ளி தவிர மற்ற ஆறு செல்லனும் இன்று கொங்கு வெள்ளாள கவுண்டர் (காணியாள கவுண்டர்) வகையறாவில் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருதாய் வயிற்று மக்கள்.

வீரபாண்டி மணியன் - பூர்வீகம் காங்கயம் நாடு முத்தூர் காணி 
(அத்தனூர் அம்மன்;செல்லக்குமார சாமி; குப்பண்ண சாமி)

மேலே உள்ள அனைவருமே பூர்வீகத்தில் எந்த பதவியும் வகிக்காத குடியானவர்களாவர். மோரூர் சூரிய காங்கேயனும் கூட, காடை குல பட்டயத்தில் ஆதி கன்ன கூட்டத்தை சேர்ந்தவர் என்றே குறிப்பிடப்படுகிறார். கன்னிவாடி பட்டயத்தில் ஆதி நாட்டார் பிரிவு தனியே பிரிந்து சென்றதாக குறிப்புண்டு. அந்த ஆதி நாட்டார் குடும்பம் காங்கேயம் அருகே கண்ணபுரம் சென்று குடியமர்ந்ததாக கன்னிவாடி பட்டயம் சொல்கிறது. பட்டக்காரர் பிரிவு தனியாக செல்கிறது.  மொளசி கன்ன கூட்டம் இளையபெருமாள் கோயில் விழாவில் முதலில் "அண்ணார் கட்டளை" என்று கொளாநல்லி கன்ன கூட்டத்திற்கு (கொங்கு வெள்ளாள கவுண்டர்கள்) மரியாதை அளித்து விழாவைத் துவக்கிறார்கள். மொளசி கன்ன கூட்டத்திற்கு கொளாநல்லி கன்ன கூட்டம் அண்ணன் முறையினர். மோரூரில் பங்காளிகளில் இருந்து பிரிவாக மொளசி பிரிந்தது என்பதை சரிபார்க்க வேண்டும்.

வீரபாண்டி மணியர், வெண்ணந்தூர் கன்னன் (சாகாடை) & திண்டமங்கலம் விழியன் காணியாள கவுண்டர்களாவர்; அவர்கள் நாட்டார் பதவி வகிக்காதவர்கள். சேலம் கேஜட்டிலும் நாட்டு கவுண்டர் பிரிவில் திண்டமங்கலம், வீரபாண்டி மணியன் கூட்டம் சேர்க்கப்படவில்லை. வம்சாவழி வரலாறுகள் ஏராளமானவை திண்டமங்கலம் விழியன் கூட்டம் என்றே சொல்கையில், திண்டமங்கலம் விழியன் ஆந்தை கூட்டம்தான் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. திண்டமங்கலம் ஆந்தை கூட்டத்தார்தான் மோரூரில் இருந்து மோரூர் கன்ன கூட்டத்தால் விரட்டப்பட்டோர் என்ற கூற்றுக்கு ஆதாரம் எதுவுமில்லை. அப்படியே ஆயினும், அவர்கள் பல நூற்றாண்டுகளாக வாழவந்தி நாட்டில் காணியுரிமையோடு மட்டுமே வாழும் காணியாளர்களாவர். வீரபாண்டி மணியன் கூட்டம் முத்தூர் மணியன் கூட்டத்தில் இருந்து பிரிந்தவர்கள். முத்தூர் மணியன் இன்றளவும் காணியாளர்கள். வீரபாண்டி மணியன் கூட்டத்துக்கும் திண்டமங்கலம் விழியன் கூட்டத்துக்கும் நாடோ/நாட்டுரிமையோ கிடையாது.

மேலே உள்ள குடிகள் எல்லாரும் தங்களுக்குள் மட்டுமே மண உறவு வைத்துக்கொள்ளும் உறவின்முறை வட்டத்தை சேர்ந்தவர்கள். இந்த மரபு காக்கப்பட வேண்டியது, ஆனால் இதற்கு நவீன ஆய்வாளர்கள் சொல்லும் காரணம் கண்டிக்கத்தக்கது. நவீன கொங்கு ஆய்வாளர்கள் சிலர், நாட்டார் நாட்டாருக்குள் மட்டுமே கல்யாணம் செய்வார்கள் என்று சொல்கிறார்கள். ஏற்கனவே பார்த்தது போல நாட்டார் என்பவர் நாட்டுக்கு ஒருவரே. மேலும், இந்த உறவின்முறை வட்டத்திலும் காணியாளர்கள் இருக்கிறார்கள். இங்கு மட்டுமின்றி கொங்கதேசத்தின் பல பட்டக்காரர் குடும்பங்களிலும் காணியாளர்களுடன் இன்றளவும் கல்யாணம் நடக்கிறது. கன்னிவாடியிலும் சரி, மோரூரிலும் சரி ஆந்தை கூட்டத்தோடு கல்யாணம் செய்தே வம்சம் தழைத்துள்ளது. 

மோரூர், மொளசி, மல்லை, பருத்திப்பள்ளி, ஏழூர் ஆகிய 5 நாடுகள் பூந்துறை நாட்டின் உப நாடுகள் தான். அதாவது இந்த நாடுகளின் நாட்டார் சின்ன நாட்டார் ஆவார். இவர்கள் அனைவரும் மேல்கரை கீழ்க்கரை இணைத்த முழு பூந்துறை நாட்டின் பெபூந்துறை காடை கூட்ட நண்ணாவுடையாருக்கு கட்டுப்பட்டவர்கள். நண்ணாவுடையார் குடும்பமும் இன்று கொங்கு வெள்ளாள கவுண்டர் என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே சாதி என்பதில் அனைவருமே வெள்ளாளர் தான் (மோரூர் திருமலை அத்தப்ப நல்லதம்பி காங்கேயர்-திருசெங்கோட்டு மலை திருப்பணி கல்வெட்டில் தனது பெயரை மோரூர் வெள்ளாள கன்னர்களில் என்று தான் குறிப்பிட்டுள்ளார்[படத்தை காண்க])


அதுப்போல மோரூர் நாட்டின் முதல் பட்டக்காரர் சூர்ய காங்கேயனும் பாண்டியன் அவையில் தன்னை 'தயிர்முட்டி சுமக்கும் வெள்ளாளன்' என்றே குறிக்கிறார்[படத்தை காண்க]). சூர்ய காங்கேயன் பெண் காட்டியதே இன்று கொங்கு வெள்ளாள கவுண்டர் லிஸ்டில் இருக்கும் ஆந்தை கூட்டத்தில் தான். ஆனால் அவர்களே அன்று மோரூர் நாட்டின் பட்டக்காரர்களாவர்.


இன்று சர்டிபிகேட் நாட்டு கவுண்டர் பிரிவை சேர்ந்தோர் முன்னோரான சூரிய காங்கேயன் தனது தம்பியாகிய ஆதி கன்ன கூட்டத்தை (இன்று கொங்கு வெள்ளாள கவுண்டர் பிரிவில் இருக்கும் தலைய நாட்டு பட்டக்காரர்) சேர்ந்த முத்துசாமி கவுண்டருக்கு நல்லராண்டி பண்டாரம் பல சகாயங்கள் செய்யவே, அந்த நன்றிக்காக ஆண்டிக்கு பல பரிசுகள் கொடுத்து தனது பட்டமான காங்கயன் என்ற பட்டத்தையும் கொடுப்பதாக செப்பேடு போட்டு கொடுக்கிறார். அந்த பட்டயத்தில், தனது பங்காளிகள் 60 காங்கேயர் என (இன்று வெள்ளாள கவுண்டர் பட்டியலில் உள்ள திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த) கன்ன கூட்டத்தை சேர்ந்தவர்களை குறிப்பிடுகிறார். அவர்கள் அனைவரும் சேர்ந்தே அந்த தர்மத்தை நடப்புவிக்கிறார்கள். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் திருமாலை கட்டளை, பணிமலைக் காவலர் வைகாசி பூசை போன்றவற்றை மோரூர் மொளசி கன்ன கூட்டத்தார் உட்பட கொங்கதேச கன்னகூட்டத்தார் அனைவரும் சேர்ந்து நடப்புவிக்கிறார்கள். படி மண்டபத்தில் மொரூருக்கு உரிய இரண்டு மண்டபங்களில் ஒன்று அனைத்து கன்னகூட்டத்தாருக்கும் உரித்தானது. ஆனால் பஞ்ச காலகட்டத்தில் பிற கன்ன கூட்டம் வராததால் அதை மோரூர் கன்ன கூட்டத்தார் மட்டும் நடப்புவித்தனர். கால ஓட்டத்தில் நாட்டார் என்னும் பதவியை குடும்ப உறவுகளுக்குள் உள்ள அனைவரையும் குறிக்கும்படி புகுத்தியதால் நாட்டார்-வெள்ளாளர் என்று வேறுபாடு திருசெங்கோடு பகுதியில் மட்டும் தோன்றியது. அதைத் தொடர்ந்து நாட்டு கவுண்டர் என்ற பதவியின் பேரால் தனி சாதி போன்று வரலாற்றுப் பிழை தோன்றிவிட்டது. இன்று பல இடங்களில் இந்த வேற்றுமை பகையாக வளர்ந்து நிற்கிறது.

உழவுதான் குலத்தொழில். நிர்வாக முறையில்தான் வேறுபாடு தோன்றுகிறது. பட்டக்காரர் என்று மூத்த மகனுக்கு பட்டம் சூட்டிய பின், அவரின் தம்பிகளுக்கு பூமியை கொடுத்து அனுப்பி வைப்பார்கள். இதை தீரன் சின்னமலை வரலாற்றிலும் கூட காண முடியும், தீரனின் தந்தை பட்டக்காரரின் தம்பியாதலால் அவருக்கு ராஜ்யத்தில் பதவி உரிமை இன்றி வெளியே செல்ல வேண்டியதாயிற்று. அதுபோலவே இன்றும் நாட்டு கவுண்டர் லிஸ்டில் உள்ள அனைவருமே அவர்கள் நாட்டின் தலைநகர்களான மோரூர், மொளசி, ராசிபுரம் என்று இருக்கவில்லை. சுற்றியுள்ள காணிகளில் குடியேறி வாழ்கிறார்கள். அந்த காணியில் உள்ள காணியாச்சி அம்மன் கோயில்களை தங்கள்  வழிபடும் அம்மன்களாக இன்றளவும் வழிபடுகிறார்கள். உதாரணமாக உஞ்சனை காளியம்மன், பட்லூர் செல்லாண்டியம்மன் போன்று. 

வெள்ளைக்காரன் வரும்முன்னர் வரை ஒழுக்கமாக இருந்த நாடும், நாட்டார் மரபும், பட்டக்காரர் மரபும் அவர்கள் வருகையின் பின் ஏற்படுத்திய நிர்வாக மாற்றத்தால் குழப்பம் ஏற்ப்பட்டது. வெள்ளையருக்கு ஒத்துவராத-எதிர்த்த பட்டக்காரர் பலரும் கொல்லப்பட்டனர்-விரட்டியடிக்கப்பட்டனர். நாட்டார் சபையும் அதன் தனித்தன்மையை இழந்தது, நாட்டார்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அவர்களுக்கு இணக்கமாக இருந்தொருக்கு ஜமீன் உரிமை வழங்கப்பட்டது. நாட்டு கவுண்டர் என்று சர்டிபிகேட் பெற்று இன்றும் சொல்லிக் கொள்வோருக்கு அவர்கள் பட்டக்காரர் யார் என்று தெரியவில்லை. ஆனால், கொங்கின் பிற பகுதிகளில் பெரும்பாலான நாடுகளில் பட்டக்காரர்கள் யார் என்று அறிந்து பின்பற்றி வருகிறார்கள். தென்கரை நாட்டு பட்டக்காரருக்கு இன்றளவும் பட்டாபிஷேகம் முதற்கொண்டு அனைத்து அதிகாரம் உரிமை இருந்து வருகிறது.[http://konguvenadar.org].

அன்றைய நாளில் கொங்கதேச பிரச்சனைகள், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பிரச்சனைகள், சாதி முறைமைகள், உரிமைகள் குறித்த பிரச்சனைகளை 24 நாடுகளின் நாட்டார்கள், பட்டகாரர்கள் மற்றும் மக்கள் செல்வாக்குள்ள கவுண்டர்கள் சேர்ந்தே தீர்த்துள்ளனர். அதற்கு பல செப்பேடு பட்டயங்கள் ஆதாரமும் சொல்கிறது. 24  நாடுகளிலிருந்து வந்த கவுண்டர்கள் என்ற அர்த்தத்தில்தான் கொங்கு 24 நாட்டார் என்று கூறுகின்றனர்; இது நாட்டுரிமை பெற்ற பட்டக்காரர்களை மட்டுமே குறிக்கும் என்று எண்ணுவது தவறானது. காரணம், முக்கிய முடிவுகளின் கையொப்பத்தில் பாரம்பரிய பட்டக்காரர்கள் மட்டுமின்றி அந்தந்த காலகட்டத்தே மக்கள் செல்வாக்கு பெற்ற காணியாள கவுண்டர்களும் இடம்பெற்றனர். இவர்களே பின்னாளில் வாய்ப்பமையும்போது பட்டக்காரர் பதவியும் பெறுகிறார்கள்.

உதாரணம்: கொங்கு புலவர் பட்டயம். இங்கே பட்டக்காரர்கள் மட்டுமல்லாது,  அவர்கள் பங்காளிகள் மற்றும் நாட்டுரிமை இல்லாத பிற கூட்டத்து கவுண்டர்களும் (பொங்கலூர் நாட்டில் செகங்கூட்டம், பூந்துறை நாட்டில் புரளந்தை கூட்டம், தென்கரை நாடு ஆந்தை கூட்டம்) கையொப்பமிட்டுள்ளனர்.



மதுக்கரை பட்டயம்: 



ஆக, அனைத்து கொங்கு வெள்ளாளர்-காணியாளர்-பட்டக்காரர் வகையறாவினர் அவரவர் நாடு எது, நாட்டின் உண்மையான பட்டக்காரர் யார் என்பதை அறிந்து வைத்திருத்தல் அவசியமாகும். மக்கள் செல்வாக்கு பெற்ற நல்லோர்களை புதிய நாட்டார்களாக தேர்ந்தெடுத்து சித்ரமேழி சபை அமைக்கப்பட வேண்டும். நம் சாதிக்குள் வெள்ளையன் ஏற்படுத்திய குழப்பங்களை தவிர்த்து, உண்மை உணர்ந்து கொங்கதேசம் செழிப்புற பாரம்பரிய வழியில் வாழ வேண்டும்.

6 comments:

  1. மோரூர் மற்றும் மொளசி கிராமங்கள் அல்ல.. அவை கீழ்க்கரை பூந்துறை நாட்டிற்குட்பட்ட மோரூர் மொளசி சமஸ்தானங்கள்... மோரூர் பதினாறு காணி, மொளசி பதினாறு காணி.. ஒவ்வொரு காணிக்குள்ளும் சில கிராமங்கள் உண்டு.. உங்கள் விமர்சனம் என்ன என்பதை தெளிவாக சொல்லவும்.. சந்தேகம் என்றால் தெளிவுபெற்றபின் விமர்சனம் சொல்லலாம்..

    ReplyDelete
  2. மோரூர் கன்னன் கூட்டத்தினர், கீழ்க்கரை பூந்துறையில் அவர்கள் ஓரம்பரை வட்டத்துக்கு ஆணிவேர் போன்றவர்கள். மோரூர் கன்ன கூட்டத்தின் வீச்சு மற்றும் வீரியத்தாலேயே இந்த ஓரம்பரை வட்டம் உருவாகியது, இன்றளவும் சிறப்பாக இருக்கின்றது. அவர்கள் சொந்தங்களிடம் அவ்வப்போது கடுமையாக இருந்தாலும், தங்கள் கடுமையான உழைப்பால் தங்கள் மொத்த உறவுகளையும் கைதூக்கி விட்டுவிடுவர். அவர்களின் கடுமைக்கு காரணம், இயற்கையிலேயே கன்ன கூட்டம் செயல்வீரம் மற்றும் வீரியதுக்கு பேர் போனது; மேலும் மோரூர் கன்ன கூட்ட சூர்ய காங்கேயன் தனது சொந்த மாமனாரால் அவமானப் பட்டு வெறுப்புற்று மதுரைக்கு சென்று பாண்டியனிடம் சேவகம் செய்து பின்னர் நாட்டைப் பிடித்தவர். அதனால் அவர் வழிவந்தவர்களிடம் அவ்வப்போது அந்த கடுமை இருப்பது இயல்பு.

    ராசிபுரம் கைலாசநாதர் கோயிலிலோ, மல்லை சோழீசர் கோயிலிலோ, பருத்திப்பள்ளி ஈஸ்வரன் கோயிலிலோ மற்ற எந்த மாமன்-பங்காளி கூட்டத்து கோயிலிலும் தங்கள் ஒரம்பரைகளுக்கு மரியாதை உண்டே தவிர "உரிமைகள்" கொடுத்தது இல்லை. ஆனால், மோரூர் கன்ன கூட்டம் தங்கள் நாட்டில் இருக்கும் ஸ்ரீ அர்த்தநாரீசர் கோயிலில் தங்கள் உறவினர் அனைவருக்கும் உரிமைகள் கொடுத்துள்ளனர். தங்கள் வம்சத்தில் வந்த மொளசி கன்ன கூட்டத்துக்கு அவர்கள் விரும்புகிறார்கள் என்று, தங்கள் நாட்டில் பாதியை தாங்களே அரசனிடம் கேட்டு பிரித்து கொடுத்தவர்கள். கொங்கதேச வரலாற்றில் சில சூழல்களில் தங்கள் மாமன் மச்சினனுக்கு காணி-நாடு கொடுத்துள்ளனர், ஆனால் பங்காளிகளுக்கு நாடு விட்டு கொடுத்தது மோருர் கன்னனே..

    இன்றளவும், தொழில் துறையிலும் சரி, சமூக நிர்வாகப் பணிகளிலும் சரி, முதல் ஆளாக வந்து நின்று, காரியத்தில் வீரியமாக இருந்து, வெற்றியை கொண்டு வந்து சேர்ப்பவர்கள் மோரூர் கன்ன கூட்டத்தினர் என்றால் மிகையல்ல. உதாரணமாக, மாதொருபாகன் நாவல் விவகாரத்தில் அவர்கள் உறவின்முறை வட்டத்தின் சார்பில் முன்னின்று ஒப்ராடி,வழக்கு நடத்தி மீடியாக்களின் கடுமையான ஏச்சு பேச்சுகளுக்கு ஆளானோர் மோரூர் கன்னன்தான்.

    இப்படி மொத்த சமூகத்துக்கும் அரணாகவும், கவசமாகவும் இருந்து வரும் மோரூர் கன்னகூட்டத்துக்கு நன்றிக்கடனை நினைக்காவிட்டாலும்கூட பரவாயில்லை, அவர்களை தவறாக விமர்சிக்காமல் இருக்க வேண்டும்..

    ReplyDelete
  3. காெங்கு என்பது இந்த நாட்டால் நமக்கு வந்த பெயர் அல்ல, நம்மால் இந்த நாட்டுக்கு வந்த பெயர், கங்கா குலமே நம் குலம் அதுவே மறுவி கங்கன்(கங்கா குலத்தவண்) என்றும் பின்னாலில் காெங்கன் என்றும் ஆனது, அக்காெங்கர்கள் ஆண்ட பகுதி ஆதலால் அது காெங்கன் நாடு, காெங்கு நாடு என்று ஆனது, இதையே நம் பசுக்களின் பெயரிலும் காணலாம், காங்கேயன்(காெங்கன்) வீட்டு பசு ஆதலால் நம்மவர் அதையும் காங்கேயன் என்றே அழைத்தனர்,மேலும் காெங்க மாடு என்றும் அழைக்கப்படுவதுண்டு, இவ்வாறாக நாம் வாழ்ந்த பகுதியில் இருந்து ஏர் தாெழில் செய்ய உதவிய பசு வரை அணைத்திர்க்கும் நம் குலப் பெயரை வைத்து பெருமை பட்டவர்கள் நம்மவர்கள், ஆதலால் இந்த நாட்டால் நமக்கு இந்த பெயர் வந்தது என்பது சரியல்ல.

    ReplyDelete
  4. தமிழர் நிலத்தில் நீங்கள் எந்த நிலம் எந்த திணை

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. காராளர் என்ற இனம் பல பகுதிகளில் பிரிந்து வாழ்கிறது நண்பா...இது குறிப்பாக கார்காத்த வேளாளர்க்கு உரிய பெயராக இருக்கிறது..மலையில் இருக்கும் வேளாளர்கள் தங்களை காராளர் என்று தான் கூறுகிறார்கள்.நில பகுதியில் இருக்கும் வேளாளர்கள் தங்களை காராளர் என்று தான் கூறுகிறார்கள்...கார்காத்த வேலாளர்களும் தங்களை காராளர் என்று தான் கூறுகிறார்கள்...அனைவரின் பூர்வீகமும் காஞ்சியாக தான் இருக்கிறது...ஒரு கூட்டம் பலவாறாக பிரிந்து இருக்கிறது...

      Delete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates