Trending

Tuesday 15 April 2014

குடியான சாமிகள்: தம்பிக்கலை ஐயன் கோயில் வரலாறு

ஈரோடு -சத்யமங்கலம் ரோட்டில் செல்லும் பாதையில் ஈரோட்டில் இருந்து இருபது கிலோ தொலைவில் உள்ளது தங்கமேடு என்ற கிராமம். அங்கு உள்ள தம்பிக்கலை ஐயனின் ஆலயம் பற்றிய வரலாறு இது.



காஞ்சி கோவில் பகுதியில் தம்பி கவுண்டர் என்ற குடியானவர் இருந்தார்.  அவரிடம் பல மாடுகள் இருந்தன. அவற்றை மேய்பதற்கு அவருடைய சகோதரர் நல்லய்யன் என்பவர் அழைத்துச் செல்வார். ஒரு நாள் அந்த கால்நடைகளில் ஒரு பசுவின் மடியில் பால் சுரக்கவில்லை என்பதை நல்லயன் கண்டார். அடுத்த நாள் அதை கண்காணித்தார். அது ஒரு புதருக்கு அருகில் சென்று ஒரு பாம்பு புற்றின் மீது நின்று கொண்டது. அதில் இருந்த நாகப் பாம்பு அதன் பாலை குடித்துக் கொண்டு இருந்தது. அதை தனது சகோதரர் தம்பி கவுண்டரிடம் நல்லாயன் கூறினார். அதை நம்பாத தம்பி கவுண்டர் அவனை நன்றாக அடித்து உதைத்தார். மற்றவர்கள் அவர் அடிப்பதை தடுத்து நிறுத்தி மறுநாள் அனைவரும் தம்பி கவுண்டரின் தம்பியான நல்லயனுடன் அது உண்மையா என பார்க்கச் சென்றனர். அங்கு நடந்த காட்சியைக் கண்டு பிரமித்தனர். தம்பி கவுண்டர் அநியாயமாக தனது தம்பியை அடித்து விட்டேனே என வருந்தினார். அவரை மற்ற உறவினர் தேற்றினார்கள். அன்று இரவு தம்பி கவுண்டரின் கனவில் அந்த பாம்பு தோன்றி அந்த இடத்தில் தனக்கு ஆலயம் அமைத்து வழிபடுமாறும், அப்படி செய்தால் அவருடைய வருங்கால சந்ததியினரை தான் பாதுகாப்பதாக உறுதி கூறியது. ஆகவே அன்றுஇரவே தம்பி கவுண்டர் அந்த புற்றின் அருகில் சென்று அமர்ந்து கொண்டார். அந்த இடத்தில் இருந்து வெளிவர மறுத்தார். அவருக்கு அங்கு பல அற்புதங்கள் நிகழ்ந்தன.






அவரை கேலி பேசிய ஒரு மலையாள மந்திரவாதி அவர் சிஷ்யரானார். அது போல ஒரிஸ்ஸாவை ஆண்டு வந்த விஜய கர்ணா என்ற மன்னன் அவர் சிஷ்யரானார். ஒரிஸ்ஸாவில் இருந்து ஒரு வணிகர் தன்னுடைய பேச முடியாத மகளை அங்கு அழைத்து வர அவள் பேசத் துவங்கினாள். அவந்தியில் இருந்து வந்த ஒரு பிராமணக் குருடனுக்கு கண் பார்வை தந்தார். பல காலம் பொறுத்து தம்பி கவுண்டர் இறந்து போக அவரை தெய்வமாகக் கருதி அவரை தம்பி கலை ஐயன் என அழைத்து அவருக்கு ஆலயம் அமைத்தனர். இவர் சித்தக்கலைகளில் ஒன்றான "தம்பணக்கலையில்" வல்லவரானதால் இவர் பெயரும் தம்பிக்கலை அய்யன் என மருவி பெயர் காரணம் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.






தம்பிக்கலை அய்யன் திருக்கோவில் சித்தர் பீடமாக அமைந்துள்ளது. தம்பிக்கலை அய்யன் பல சித்தர் கலைகளை கற்று அவரைத்தேடி வந்த பக்தர்களுக்கு அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்து பல நன்மைகள் செய்து வந்தார். தங்கமேடு எனும் இடத்தில் அமைந்துள்ள அன்னபூரனி உடனமர் நீலகண்டேஸ்வரர் தரிசனம் செய்து அங்கேயே வாழ்ந்த சித்தராவார். ஈஸ்வர வழிபாட்டில் மூழ்கிய அவர்க்கு பல்வேறு ஞானங்கள் ஏற்பட்டது. 

மருத்துவம், ஆன்மிகம் போன்றவற்றில் தெளிவான அறிவுரைகள் ,நோய் தீர்த்தல் போன்றவற்றில் வல்லவராவார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இவ்விடம் Thampikkalai ayyan forest (தம்பிக்கலை அய்யன் பாரஸ்ட்) என பதிவு செய்யப்பட்டுள்ளதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இங்கு 108 சித்தர்கள் நாக வடிவுடன் இன்றும் சூட்சம தம்பிக்கலை அய்யன் உடன் வசிப்பதாகவும் சொல்லப்படுகிறது. நாகசர்பங்கள் வாழும் பகுதியாகவும், நாகதோஷம், கால சர்ப்ப தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் தம்பிக்கலை ஐயன் சன்னதி விளங்குவது சிறப்பாகும். 



நாகவனமாக இவ்விடம் இருந்தபோது அம்பிகை ஸ்ரீ நாகேஸ்வரியாய் அவதரித்து ஈசனை வழிபட்ட இடம். சிவலிங்கம் மீது நாகேஸ்வரி அமர்ந்து அருள் பாலிப்பது அற்புதமான ஒன்றாகும்,இங்கே பலகாலம் முன்பு பெரிய பாம்பு புற்றுகள் இருந்த தாகவும் இறைவியின் வாக்குப்படி அங்கு நாகேஸ்வரி ஆலயம் எழுப்பபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.இன்றும் இச்சன்னதி அருகில் நல்ல பாம்புகள் பக்தர்களுக்கு காட்சி தருவதுண்டு . தம்பிக்கலை அய்யனே சூட்சம நிலையில் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவதாக சொல்லப்படுகிறது.நாகேஷ்வரி ஆலயம் முடித்து சென்றால் வேப்பில்லையால் அடித்து திருநீரு மந்திரித்து தீர்த்தம் வரும் பக்தர்களுக்கு தரப்படுகிறது. 

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தம்பி கலை ஆலயத்துக்கு நிறைய மக்கள் வருகின்றார்கள். பங்குனி உத்திரத்தின் முன் வரும் செவ்வாய் கிழமையில் இருந்து அடுத்த ஞாயிற்றுக் கிழமை வரை அந்த ஆலயத்தில் திருவிழா நடைபெறும். விழாவின் ஆரம்பத்தில் உற்சவர் சிலைகளை பவானி ஆற்றில் இருந்து கொண்டு வரும் நீரால் முதல் நாள் அபிஷேகம் செய்கின்றனர். அடுத்த ஆறு நாட்களும் பொங்கல் படைகப்படுகின்றது. கருப்பச்சாமி ஆலயத்தில் மட்டும் ஆடு பலி தரப்படுகின்றது. பெரிய மாட்டுச் சந்தையும் நடைபெறுகின்றது. கார்த்திகை தினத்தன்று ஒரு லட்ச தீபங்கள் ஏற்றப்படுகின்றன.


தேவி கருமாரிதாசர் என்னும் இறையடியார் தம்பிக்கலைஐயன் சன்னதியே கதி என்று தங்கிவிட்டவர். வெளியூர்க்காரரான இவர் ஆன்மீக ஆய்வுகளில் ஞானமுடையவர். தம்பிக்கலை ஐயன் கோயில் விஷேசங்களை தஞ்சை நூலகத்தின் மூலமாக கண்டறிந்து வெளிக்கொணர்ந்தவர் என்று அறியப்படுகிறார். அருள்வாக்கு கூறிவருகிறார். தற்போது முதுமை காரணமாக அதிகம் அலைவதில்லை.

கோயில் திருவிழாவின் போது மிகப்பெரிய மாட்டு சந்தை நடந்து வந்தது. அந்த மாட்டு சந்தைக்கு வரும் பசுக்களுக்கு குடிநீருக்காகவே பல நீர்தொட்டிகள் இருப்பது இன்றும் உள்ளது. தற்போது சந்தையின் பிரபல்யம் குறைந்துவருகிறது.

தம்பிக்கலைஐயன் காஞ்சிக்கோயில் செம்பன் கூட்டத்தைச் சேர்ந்தவராக அறியப்படுகிறார். காஞ்சிக்கோயில் செம்பன் கூட்டத்தவர்களே பூஜைப்பணியிலும் இருந்துள்ளனர். தம்பிக்கலை ஐயனை சில நவீன வரலாற்று விஷமிகள் பட்டக்காரர் என்று பரப்பி வருகிறார்கள். கால விசாரணையில் காஞ்சிகோயில் நாட்டு குலகுருக்கள், வரலாற்று அறிஞர்கள் மற்றும் உள்ளூர்/கோயில் பிரமுகர்கள் கூறிய செய்தி - காஞ்சிக்கோயில் கிராமங்கள் அனைத்திலும் பட்டக்காரர் என்றோ பட்டக்காரர் குடும்பம் என்றோ யாரும்  இருந்ததில்லை என்றும் பட்டக்காரர் என்றால் பழையகோட்டை பட்டக்காரர் அல்லது உள்ளூர் தொட்டிய நாயக்கர் சாதி பட்டக்காரர்களையே நினைவூட்டுவதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

வெள்ளையர் காலத்தில் பழையகோட்டை பட்டக்காரர்கள் விரோதத்தால் இரவோடு இரவாக எழுமாத்தூர் விட்டு வெளியேறிய பனங்காடை கூட்டத்தார் வடகரை நாடு பவானியில் காணி பெற்று பின்னர் பிழைப்பு தேடி செட்டிபாளையம் குடிவந்தனர். அப்படிக் குடிவந்தவர்களில் முத்துக் கவுண்டர் என்ற பெரியவர் தம்பிக்கலை ஐயன் கோயில் பூஜைகளில் ஈடுபடலானார். ஆனால் தம்பிக்கலைஐயன் அவர் கனவில் தோன்றி உனக்கு இது வேலையல்ல என்று கூறிவிட்டபடியால் கோயில் பூஜைகளில் ஈடுபடுவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். பின்னாளில் அவர் நிலங்களின்பேரில் வட்டிக்குப் பணம் கொடுத்து வந்தவர் என்ற தகவலும் அவரது வம்சத்தார் மூலமும் அக்கால பத்திரங்கள் மூலமும் அறிய முடிகிறது. அவர் மந்திரித்துக் கொடுப்பது பாடம் போடுவது போன்ற வேலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை மக்கள் பூசாரி கவுண்டர் என்றும் அவரது வம்சாவளியினர் சுமார் எட்டு தலைமுறை இன்றும் பூசாரி கவுண்டர் குடும்பம் என்று இருக்கிறார்கள். தற்போது காஞ்சிக்கோயில் கன்னன் கூட்டத்தார் பூஜை சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோயில் புனரமைப்புப் பணிகளும் கன்னன் கூட்டத்துப் பிரமுகர் தலைமையிலேயே நடந்தது. பழையகோட்டை பட்டக்காரர், பொள்ளாச்சி திரு.மகாலிங்கம் மற்றும் பல அரசு பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கோவிலில் தம்பிகலை ஐயன் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம் இன்றும் வாய்மொழியாக உலவுகின்றன. கோயிலில் வந்து முரண்டு செய்து கொண்டிருந்தான் ஒருவன். சாமி சிற்பங்களை தாண்டுவது, இடையே புகுந்து செல்வது என்று குறும்பு செய்யத் துவங்கவே அன்று இரவே அவனது கண் பார்வை போய்விட்டது. கோயிலில் வந்து அழுது புலம்பி மன்னிப்பு கேட்டு தெண்டனிட்டு பார்வை திரும்பப் பெற்றானாம்.

இக்கோயிலில் உருவாரங்கள் செய்ய உரிமை பெற்ற குயவர் குடும்பம் இன்றுமுண்டு. அவர்கள் தம்பிக்கலை ஐயன் மீது மிகவும் பக்தி சிரத்தை மிக்கவர்கள். விரதமிருந்து தங்கள் கடமையை தெய்வ காரியமாக எண்ணி செய்வர். ஆனால் கோயில் பெரிதாகவே சம்பாதிக்கும் எண்ணத்தோடு இந்தப் பணியை பறிக்க நினைத்து எடுத்தவர் அகால மரணமடைந்தார்.

இக்கோயிலுக்கு முதன் முதலில் மின்சார இணைப்பு கொடுக்க வந்த என்ஜினியர் ஏளனமாக பேசிவிட்டு கோயிலுள்ள தங்கமேட்டுக்கு செல்கையில் அங்கே படம் எடுத்துக்கொண்டு அவர்மீது மட்டும் நாகம் சீறவே, விழுந்தடித்து ஓடி முதன்வேளையாக கனக்சனை கொடுத்தாராம்.

இன்றளவும் தீராத நோய்கள, தோல்வியாதிக்காரர்கள் மருத்துவர்களால் கைவிடப்பட்ட பலரும் இங்கு வந்து தங்கி தங்கள் நோய் நீங்கப் பெறுகிறார்கள். விஷ ஜந்துக்கள் தீண்டியவர்கள் இங்கே கோயிலில் கொண்டு வந்து இறைவன் சந்நிதி முன் போட்டு இருபது நிமிஷம் கோயிலை விட்டு அனைவரும் வெளியேறிவிடுகிறார்கள். சிறிது நேரத்தில் பாதிக்கப்பட்டவர் தாமாகவே எழுந்து வெளியே வந்துவிடுகிறார். மருத்துவமனைகள் இல்லாத அக்காலத்தில் ஏராளமான உயிர்கள் இப்படி காக்கப்பட்டிருக்கிறது. சுற்றுவட்டாரத்தில் யாருக்கு பாம்புக்கடி என்றாலும் உடனடியாக இக்கோயிலுக்குத் தூக்கி வந்துவிடுவர். இன்றும் இவ்வழக்கம் தொடர்ந்துவருகிறது. விஞ்ஞானம் விளக்க இயலாத அற்புதங்களில் தம்பிக்கலை ஐயன் அருளும் ஒன்று.

கள ஆய்வு விசாரணை மற்றும் அங்கீகாரம்:
கொங்கு வரலாற்று ஆய்வாளர் புலவர் ராசு ஐயா அவர்கள்
கொங்கு குலதெய்வ கோயில்கள் ஆய்வாளர் கொங்குகுரல் பி.கே.சின்னசாமி அவர்கள்
காஞ்சிகோயில் காணியாளர்கள் குலகுரு - சிவகிரி ஆதீனம் ஸ்ரீ பாலமுருகன் சுவாமிகள்
காஞ்சிகோயில் எழுகிராம பரம்பரை ஸ்தானிக குருக்கள் ஸ்ரீ.பிரகாஷ்
தம்பிகலைஐயன் நற்பணி மன்றம், காஞ்சிகோயில்
தம்பிக்கலைஐயன் கோயில் பூஜைப் பணியாளர்கள் (கன்ன கூட்டத்தார்)
ஸ்ரீ தேவிகருமாரிதாசர் சுவாமிகள்
தீரன் பாசறை காஞ்சிக்கோயில் திரு.துளசிமணி அவர்கள்

1 comment:

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates