Trending

Tuesday 15 April 2014

நல்லிணக்கமான கொங்கு உறவுகள்




தமிழகம் மட்டும் இன்றி பாரதம் முழுக்கவே ஒரு புதிய கலாசாரம் பரவி வருகிறது. உறவினர் என்றாலே பகைவர் என்பது. விழுந்த இடத்தை உறவினர்களிடமும், எழுந்த இடத்தை நண்பர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று பழமொழி கூறும் அளவு வளர்ந்துள்ளது வேதனைக்குரியது.


இதற்கு நம் கொங்கதேச குடியானவர்கள் சமூகமும் விதிவிலக்கல்ல. 


குறிப்பாக நம் கொங்கு சொந்தங்களில்.. மமதையால் யாரோ ஒருவர் மட்டம் தட்டுவது/சுயதம்பட்டம் என ஆரம்பிக்கும் இந்த ஈகோ பிரச்சனை ஒருவரை மாறி ஒருவர் மட்டம் தட்டுவதில் தொடங்கி, நம் உறவுகளுக்குள் பொறாமை, புறம பேசுவது, காழ்ப்புணர்ச்சி, பழிக்கு பழி என்று கடைசியில் உறவினர் என்றாலே எதிரிகள் என்னும் மனோ நிலைக்கு தள்ளி விடுகிறது. காலப்போக்கில் இந்த பகையுணர்வு குடும்ப பிரச்சனையாக பின்னர் குடும்ப சொத்தாக அடுத்த தலைமுறைக்கும் செல்கிறது. நம் கொங்கு சமுதாயத்தில் ஒற்றுமை குறைபாட்டிற்கு இது ஒரு முக்கிய காரணம். யாருக்கு தெரியும் முன்னாளில் இந்த ஈகோ பிரச்சனையை தொடங்கியது நம் குடும்ப பெரியவர்களில் ஒருவராகவும் இருக்கலாம்.



கொங்கு சமுதாயம் வாழ்வது மகிழ்ச்சிக்கு என்பதை விட மரியாதைக்கு என்பதே சரி. மரியாதையை கெடுத்து நீங்கள் கொட்டி கொடுத்தாலும் அந்த உறவு அவர்களுக்கு இனிக்காது. நட்பில் உதவுவது என்பது "பெருமை". உறவுகளில் உதவுவது என்பது "கடமை". உறவினர்களிடம் நண்பர்கள் போல் பழகுவோம். ஈகோ, மட்டம் தட்டுதல், பெரியதனம் (சுயதம்பட்டம்) போன்றவற்றை விடுப்போம். நம்மில் ஆரம்பிக்கும் இந்த மாற்றம் நாளைய தலைமுறைக்கு நல்ல உறவுகளை ஏற்படுத்தி தரட்டும். சொத்தோடு நல்ல மனிதர்களையும் நம் பிள்ளைகளுக்கு கொடுப்போம். 

முற்காலங்களில் மரபு நெறிகளை பின்பற்றிய கவுண்டர்களிடம் இந்த ஈகோ யுத்தம் பெரிய அளவில் இல்லை. தற்போது வசதி வாய்ப்பு பெருகிய பின்னரே இந்த சீரழிவு. உறவினர்களால் அன்பும், ஆதரவும், பாதுகாப்பும் நம் சமூகத்துக்கு கிடைக்கிறது. நம் சுற்றங்களின் மூலமே நமது கலாசாரம், மாண்புகள் நம்மை பிணைத்து காக்கிறது. உறவுகளை கொண்டாடுவோம். உறவுகள் பிரிந்து மாநகரங்களில் தனித்தீவாக இருப்பதால் சமொஊக்க குழுவாக வாழும் நிலை மாறி "Individualism" தலைதூக்குகிறது. இது உலகமயமாக்கலின் இன்னொரு பாதிப்பு என்றே சொல்லலாம். உறவினர்கள் இருந்தால்தான் நாம் தனிமநிதநல்ல ஒரு தேர்ந்த பண்பட்ட சமூகம் என்னும் எண்ணம் நம் பிள்ளைகளுக்கு உண்டாகும். அப்படி உண்டானால்தான் பண்பு தவறாது நல்ல வழியில் பிள்ளைகள் வளரும். திருமண விசெசங்களுக்கு குடும்பத்தோடு சென்றால் தான் அதெல்லாம் நம் பிள்ளைகளுக்கு போய் சேரும். 

'இன்று' ஈகோ பிரச்சனையால் பகைமை பாராட்டும் ஒரு உறவினரை அழைத்து பேசுங்கள். உங்கள் உறவுகளை மீட்டெடுங்கள்.



தினமும் ஒருவேளை உணவாவது குடும்பத்தோடு சேர்ந்து உண்ணுங்கள். வாரம் ஓரிரு முறையாவது குடும்பத்தோடு வீட்டில் குடும்பத்தோடு சாமி கும்பிடுங்கள். மாதம் ஒரு முறையாவது குடும்பத்தோடு கோயிலுக்கு சென்று வாருங்கள். மாதம் ஒருமுறையேனும் நெருங்கிய உறவினர்களை வீட்டிற்கு அழைத்தோ-அல்லது நீங்கள் சென்றோ சந்தித்து வாருங்கள். சந்திக்கும்போது ஒன்றாக சமைப்பது, கோயிலுக்கு போவது, கூட்டாஞ்சோறு எளிய விளையாட்டுக்கள் என்று இனிமையாக செலவிடுங்கள். 



வருடம் நான்கு முறையாவது காணியாச்சி கோயிலுக்கு சென்று வாருங்கள். வருடம் இரண்டுமுறை குலகுருவை சந்தியுங்கள். இரண்டு நிமிடமாவது தினமும் நாட்டுப்பசுவோடு நேரம் செலவிடுங்கள். வருடத்தில் இரண்டு நாட்களாவது சமுதாயத்திற்காக ஒதுக்குங்கள். நம் உறவுகளின் அனைத்து விஷேசங்களுக்கும் குடும்பத்தோடு, குழந்தைகளை அழைத்துச் செல்லவேண்டும். லீவே போடக்கூடாது என்று விரதம் கடைபிடிக்க வேண்டாம். சமூக நிகழ்சிகளில் குழந்தைகளை பங்கெடுக்க செய்ய வேண்டும். பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். பெருசு என்றும் கிழடு என்றும் சினிமாவில் பெரியவர்களை பிற்போக்குவாதிகளாக ஏதும் தெரியாதவர்களாக சித்தரிப்பதை கண்டு மதியாமல் இருப்பதை தவிர்க்க வேண்டும்; பெரியவர்கள் அவமதிக்கப்படும் வீட்டில் பெருமைகள் இருக்காது. 



உறவுகளும், குடும்பப் பாசமும் பிடிப்பும் இல்லாத குழந்தைகளுக்கு சாதிப் பற்றோ கலாச்சாரப் பிடிப்போ, ஒழுக்கத்தின் முக்கியத்துவமோ எதுவுமே இருக்காது. பின்னாளில் பெற்றோர்களைக் கூட கைவிட்டுவிடுவர். 


இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக எழுத்தாளர் சுஜாதா எதிர்கொண்ட சம்பவம் ஒன்று கீழே,


நாளைக்காக மட்டும் வாழமுடியுமா?

சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. வழக்கம்போல வாசகர் எழுதியதல்ல, வாசகரின் தந்தை எழுதியது. தன்னை அறிமுகம் செய்துகொண்டார் அவர். மத்திய அரசில் ஆரம்பநிலை அதிகாரியாக இருந்தவர். இரண்டாம்நிலை அதிகாரியாக ஓய்வு பெற்றார். இரு பிள்ளைகள். இருவருமே நன்றாகப்படித்து அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலுமாக வேலை பார்க்கிறார்கள். இவர் திருச்சியில் மனைவியுடன் வாழ்கிறார்.

அவரது பிரச்சினை தனிமைதான். மனைவிக்கு கடுமையான கீல்வாதம். ஆகவே குளிர்நாடுகளில் சென்று வாழமுடியாது. அவருக்கு ஆஸ்துமாபிரச்சினை உண்டு. பிள்ளைகள் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழ்கிறார்கள். அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைகூட ஊருக்கு வருவதில்லை என்பதே அவரது மனக்குறை. வந்தால் அதிகபட்சம் ஐந்துநாட்கள். உடனே கிளம்பிவிடுகிறார்கள். அந்த ஐந்து நாட்களிலும் மொத்தமாக ஐந்துமணிநேரம் பெற்றோரிடம் செலவழித்தால் அதிகம். ‘உங்கள் நூல்களை இங்கே வரும்போது என் இரண்டாவது மகன் கட்டுக்கட்டாக வாங்கிச்செல்கிறான். நீங்கள் ஏன் இதை அவனிடம் பேசக்கூடாது? நீங்கள் பேசினால் அவன் கேட்பான்’ என்றார் அவர். இம்மாதிரி குடும்ப விஷயங்களில் தலையிடக்கூடாதென்பது என் கொள்கை. ஆனால் அவர் மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியபோது அதை அவரது மகனுக்கு அப்படியே திருப்பி விட்டேன்.

அவர் மகன் ஒருவாரம் கழித்து மிகநீளமான ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். என்னை பலகோணங்களில் சிந்திக்கவைத்த கடிதம் அது. ‘நான் திருச்சியில் இருபத்திரண்டு வருடம் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் திருச்சியுடன் எனக்கு மானசீகமாக எந்த உறவும் இல்லை. இருபத்திரண்டு வருடம் அப்பா அம்மாவுடன் வாழ்ந்தேன். ஆனால் அவர்களைப்பற்றி ஒரு நல்ல நினைவுகூட இல்லை’ என்றார் அவரது மகன். அவரது தந்தை அவரை ஒரு பொறியியலாளராக ஆக்கவேண்டும் என்பதைப்பற்றி மட்டும்தான் சிந்தனை செய்தார். அதுவும் அவர் எல்.கெ.ஜியில் சேர்வதற்கு முன்னதாகவே.

ஒவொருநாளும் அவரே காலையிலும் மாலையிலும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார். அதைத்தவிர அவர்களின் அன்னையும் பாடம் சொல்லிக்கொடுப்பதுண்டு. பள்ளிக்கூடப்படிப்பு, வீட்டில் படிப்பு தவிர இளமை நினைவுகள் என்று எதுவுமே இல்லை. ஞாயிற்றுக்கிழமைகள், விடுமுறைநாட்களில் முழுக்கமுழுக்க பாடங்கள்தான். கோடைவிடுமுறை முழுக்க ஆங்கில மொழியறிவுக்கும் கணிதத் திறமைக்கும் வகுப்புகள். தீபாவளி, பொங்கல் தினங்களில்கூட கொண்டாட்டம் இல்லை. படிப்புதான்.

‘சிலசமயம் இரவில் படுத்து சிந்திப்பேன். இளமைக்காலத்தைப்பற்றிய ஒரே ஒரு மகிழ்ச்சியான நினைவாவது மனதில் எஞ்சியிருக்கிறதா என்று. எவ்வளவு நினைத்தாலும் ஒரு சிறிய நிகழ்ச்சிகூட நினைவுக்கு வரவில்லை. பின்பு ஒருமுறை எண்ணிக்கொண்டேன். சரி, ஒன்றிரண்டு துயரமான நினைவாவது இருந்தால் நன்றாக இருக்குமே என்று. அந்த நினைவுகள் வழியாகக்கூட என் வீட்டுடனும் ஊருடனும் மானசீகமாக தொடர்புபடுத்திக்கொள்ளலாமே என்று. அப்படியும் ஒரு நினைவு கிடையாது. படிப்பு படிப்பு படிப்புதான்’.

‘வீட்டைவிட மோசம் என் பள்ளி’ என அவரது மகன் எழுதியிருந்தார். ’தனியார் பள்ளி அது. மிக உயர்மதிப்பெண்கள் பெற்றுத்தரும் செலவேறிய பள்ளி. அங்கே பிள்ளைகளைச் சேர்க்க mm நிற்பார்கள்.பள்ளிக்கு உள்ளே நுழைந்த கணம் முதல் வெளியே செல்லும் கணம் வரை கூடவே ஆசிரியர்கள் இருப்பார்கள். பேசவோ சிரிக்கவோ விளையாடவோ அனுமதி இல்லை. படிப்பு மட்டும்தான்’.

அந்தப்படிப்பிலும் எந்த சுவாரசியமும் இல்லை. ‘பள்ளிப்படிப்புக்கு வெளியே நான் எதையுமே வாசித்ததில்லை. யாருமே எனக்கு இலக்கியத்தையோ கலைகளையோ அறிமுகம் செய்ததில்லை. நானறிந்த படிப்பு என்பது புத்தகத்தில் உள்ளதை அச்சு அசலாக திருப்பி எழுதுவதற்கான பயிற்சி மட்டும்தான்’ என்று எழுதியிருந்தார்.

அப்படியே பொறியியல் படித்து வேலைக்காக அமெரிக்கா சென்றபோதுதான் அவருக்குத் தெரிந்தது மனிதவாழ்க்கை என்பது எவ்வளவு மகிழ்ச்சிகள் கொண்டது என்று. பயணங்கள், நண்பர்களுடனான சந்திப்புகள், இலக்கியவாசிப்பு, இசை. அவர் எழுதினார் ’ எந்த இடத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ அந்த இடத்தில் நம் மனம் படிந்துவிடுகிறது. அதுதான் நமது ஊர் என்று நினைக்கிறோம். எனக்கு அமெரிக்காவின் நகரங்கள்தான் பிடித்திருக்கின்றன. திருச்சி எனக்கு அன்னிய ஊராகத் தெரிகிறது. ஒருநாளுக்குள் சலித்துவிடுகிறது’.

‘என் பெற்றோர் மீது எனக்கு மரியாதையும் நன்றியும் உண்டு. அவர்களை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அவர்களுடன் அரைமணிநேரம் என்னால் பேசிக்கொண்டிருக்க முடியாது. இருபத்திரண்டுவருடம் படி படி என்று மட்டுமே சொன்ன இரண்டு வயோதிகர்கள் அவர்கள். அவ்வளவுதான். அவர்களை நான் நேசிக்கவேண்டும் என்றால் அவர்களை எனக்கு தெரிந்திருக்கவேண்டும். அவர்களின் மனம் எனக்குப்புரிந்திருக்கவேண்டும். எனக்கு அவர்கள் அன்னியர்கள்போல தெரிகிறார்கள்’.

‘இருபத்திரண்டு வருடம் அவர்கள் எங்களிடம் பொதுவாக எதையும் உரையாடியதே இல்லை. படிப்பையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலைகளை கொட்டிக்கொண்டே இருப்பார்கள். இப்போது அவர்கள் பேசநினைத்தாலும் பேசுவதற்கான தொடர்பு இல்லை. இப்போதுகூட நீ என்ன சம்பளம் வாங்குகிறாய், என்ன மிச்சம் பிடித்தாய் என்று பயம்காட்டமட்டுமே அவர்களால் முடிகிறது. புத்தகம் வாங்காதே, பயணம்செய்யாதே என்று அவர்கள் வாழ்ந்ததுபோல என்னை வாழச்சொல்கிறார்கள்’.

‘நீங்களே சொல்லுங்கள், அரைமணிநேரம்கூட பேசிக்கொள்ள பொதுவாக ஏதும் இல்லாதவர்களிடம் நாம் எவ்வளவுதான் செயற்கையாக முயன்றாலும் பேசிக்கொண்டிருக்கமுடியுமா? முற்றிலும் அன்னியமாக தெரியும் ஓர் ஊரில் எவ்வளவுநாள் வாழமுடியும்? மரியாதைக்காகவோ நன்றிக்காகவோ ஐந்துநாள் இருக்கலாம். அதற்குமேல் என்ன செய்வது?’ என்று மகன் கேட்டார் ‘என் இளமைப்பருவம் முழுக்க வீணாகிவிட்டது என்றுதான் நினைக்கிறேன்’.

அந்தக்கடிதத்தை அப்படியே அவரது தந்தைக்கு அனுப்பினேன். ’இதைவிட தெளிவாக எதையும் நான் சொல்லிவிடமுடியாது’ என்றேன். அவர் புரிந்துகொள்ளாமல் ‘நன்றிகெட்டதனம். பொறுப்பற்றத்தனம்’ என்று மகனை வசைபாடி ஒரு கடிதம் அனுப்பி எனக்கும் பிரதி அனுப்பியிருந்தார். மேலும் ஒருமாதம் கழித்து ‘இந்த தீபாவளிக்கு அவனை வரச்சொல்லமுடியுமா?’ என்று கேட்டு ஒரு மின்னஞ்சல் எனக்கு அனுப்பினார்,
‘தீபாவளி என்பது இளமையில் கொண்டாடவேண்டிய ஒரு பண்டிகை. அன்றுதான் அந்த உற்சாகம் இருக்கும். வளர்ந்தபின் அந்த நினைவுகளைத்தான் கொண்டாடிக்கொண்டிருப்போம். உங்கள் மகனுக்கு நினைவுகளே இல்லை என்கிறார். நீங்கள் அவருக்கு உரிமைப்பட்ட பண்டிகைக்கொண்டாட்டங்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டுவிட்டீர்கள் என்கிறார்’ என நான் பதில் எழுதினேன். அவர் மீண்டும் பதில் போடவில்லை.

வாழ்க்கை என்பது எதிர்காலத்துக்கான போராட்டம் அல்ல. வாழும் தருணங்களை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வதுதான். அதற்காகவே பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் நம் முன்னோரால் உருவாக்கப்பட்டுள்ளன.

"

மேலும் படிக்க,


2 comments:

  1. 50 வருடங்களுக்கு முன்பு எனது அப்பாரும் அவர்களது அண்ணன் தம்பிகளும் தன் பெரியப்பா மகன்களிடம் தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து கால்நடையாகவே கோவை சூலூர் அருகே உள்ள இராவத்தூரிலிருந்து பேரூர் அருகே உள்ள இராமசெட்டிபாளையத்திற்கு கால்நடையாகவே வந்து சேர்ந்தார் தன் தந்தை மாரப்ப கவுண்டருடன்... அப்படி இராமசெட்டிபாளையம் வந்தவர்கள் பஞ்சம் பிழைக்க இங்கு வந்தபோது பங்காளிகள் (ஒரே கூட்டம், தூரன் கூட்டம், இதற்கு முன் பார்த்ததுகூட கிடையாதாம்) என்ற காரணத்திற்காக தன் தோட்டத்தில் சில பகுதிகளை 5 ஆண்டுகளுக்கு குத்தகை வாங்காமல் இலவசமாய் குத்தகைக்கு கொடுத்தும் வீடு கட்ட ஊருக்குள் 3 சென்ட் நிலமும் கொடுத்தார்கள் இன்றைய மூலதோட்டத்து மாரப்பக் கவுண்டர் (பெரிய அப்பாரு, இவங்க வேற) அப்பாரும் அவரது மகன் வேலுச்சாமி கவுண்டரும் (பெரிப்பா, அப்ப வயசு 18)...
    இன்று இவர்களது சொத்துக்கள் சுருங்கியது... ஆனால் மனமோ சுருங்கவே இல்லை... இதுவரை இவர்கள் எங்களுக்கு கொடுத்த இடம் பற்றி பேசியதுகூட கிடையாது எப்பேற்பட்ட சூழ்நிலையிலும்... பெரிப்பா, பெரியப்பாரு தற்போதில்லை... ஆனால் வேலுச்சாமி கவுண்டரின் மனைவி கற்பகம் (பெரிமா) தன் மகனை போலவே எங்களையும் காண்கிறார். பெரியண்ணன் கார்த்திகேயன், நங்கையார் பவித்ரா, சின்னண்ணன் மாணிக்கம் ஆகியோரும் அப்படியே...
    அந்த இடம் தற்போது வேறுவிதமாக ஊசலாடுகிறது... எனினும் அதற்கும் இவர்களுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை என்பதை ஊரறியும்...
    எங்கள் அத்தை திருமணத்திற்கு வருகை தந்து நடபித்த 4 பங்காளி குடும்பங்களில் 1, எங்கள் அப்பா வகையறா சித்தப்பாக்கள் எவ்வளவு அடித்து கொண்டாலும் இங்கு கூடுவர்... நல்லது கெட்டது அனைத்திற்கும்... பஞ்சாயத்தும் சிலநேரங்களில் நடக்கும்... இவர்கள் பேச்சுக்கு அனைவருமே கட்டுபடுவர்... பேச்ச தட்ட முடியாது என்பதற்காகவே இங்கே சிலரும் வரமாட்டார்கள்... பெரிய செத்தப்பன் சினுக்கா என்ற நட்ராஜ் அப்டிதாங்க... எங்க பெரிப்பா, பெரிமா, அண்ணன்கள், அண்ணி, அக்கானா உயிர்ங்க, எத்தனயோ பேரு பழகினாலும் உதவமாட்டாங்க, இவங்க யார்னே தெரியாதப்ப எங்க பரம்பரக்கி பலவிதமா உதவிருகறாங்க... இன்னொரு ஜென்மத்துல இவங்க குடும்பத்துலதா பொறக்கனும்...

    ReplyDelete
  2. சிலர் பேச்சைப் பார்த்தால்.. தன்னைத் தவிர எல்லாரும் நன்றிகெட்டவர்கள்.. சொந்தக்காரர்களே சூழ்ச்சிக்காரர்கள்.. என்பதுபோலத்தான் இருக்கும்.. போகிற போக்கில் வீசி செல்வது.. நாம கஷ்டப்படும்போது நமக்கு உதவி செஞ்சவங்களை நாம நல்லாருக்கும்போது திரும்பிப் பார்க்கரமா நு உங்களை நீங்க சரிபாருங்க, போதும்.. எப்பவும் சமுதாயத்து மேல ஒரு கசப்பையும் வெறுப்பையும் ஏன் பரப்பனும்.. நம்மைப் போன்றவர்கள் சேர்ந்தது தான் சமுதாயம்.. நாம சரியா இருக்காராம் நியாயமா யோசிக்கரம்னா எல்லாருக்கும் அந்த உணர்வு இருக்கும்தானே.. அவரவர் சூழல், வளர்ந்தவிதம் பொருது கொஞ்சம் கூட குறைய அவ்வளவுதான்.. இப்படி பரப்பிட்டு சாதிக்குள்ள ஒற்றுமை இல்ல நு புலம்பினா வேங்காயத்துல இருந்தா ஒற்றுமை வரும்??
    இப்படி எப்பவும் வெறுப்புணர்வை பரப்புவதால்தான் இளம்தலைமுறை "எனக்கு எல்லாமே பிரண்ட்ஸ் தான்.. சொந்தக்காரங்க வந்தா நான் வீட்ட விட்டு வெளிய போயிருவேன், பேசவே பிடிக்காது" என்று சொல்வதை ஸ்டைலாவே ஆக்கிவிட்டன. இதையெல்லாம் பரப்புவது, பல சமுதாயங்களுக்குள் இருக்கும் குடும்ப-உறவு பந்தங்களை பலவீனப்படுத்தும் சூழ்ச்சிதான்.. சினிமாக்கள் பல காலமாக இதை திறம்பட செய்துவந்திருக்கின்றன.. "பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன உறவுக்கேல்லாம் கவலைப் பட்ட ஜென்மம் நானில்லே.. பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே" புரிகிறதா?? நண்பர்களோட மொன்னையானா அனுசரிச்சு போறவனுக்கு உறவுகள் கிட்ட மட்டும் ஈகோ முட்டிக்கிட்டு நிக்கும். ரத்த சம்மந்தமான உறவுகளை அறுத்துவிட்டு, சமுதாய உறவுகளை வளர்த்துக்கொள்ள காசு கொடுத்து லயன்ஸ் கிளப், ஜெசீஸ் கிளப நு சுற்றவேணுமா??
    எதை செய்கிறோமோ அதுதான் திரும்ப வரும்.. நல்லதைப் பரப்புவோம்..

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates