Trending

Sunday 16 August 2015

வேட்டுவர் வெள்ளாளர் சமூக உறவு

சமீப காலமாக எங்கு பார்த்தாலும் வெள்ளாள கவுண்டர்கள் – வேட்டுவ கவுண்டர்கள் விரோதித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னென்னவோ காரணம் சொல்கிறார்கள். விரோதம் பாராட்ட ஆயிரம் காரணம் இருந்தாலும் விரோதம் தவிர்க்கவும் நினைத்துப் பார்க்கவும் நல்ல விஷயம் நாலு இருக்கத்தான் செய்கிறது.








1.தாராபுரம் தலையநாடு கன்னிவாடியில் கன்னகூட்ட கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பெண் போட்ட சபதம் நிறைவேற்ற உடனிருந்து உதவியவர்கள் வேட்டுவர்கள். கன்னிவாடி பட்டயம் வில் வேட்டுவர், விளக்கு வேட்டுவர், குன்னாடி வேட்டுவர், கரும்புளி வேட்டுவர், மாச்சாடி வேட்டுவர் போன்றோரை கன்ன கூட்ட வெள்ளாளர்களுக்கு பாதி பங்காளிகள் என்று சொல்கிறது. அந்த ஒற்றுமைக்கு சாட்சியாக வாழ்ந்தவர் கன்ன கூட்ட நல்லதம்பி கவுண்டர்.



2.தென்கரை நாட்டில் மக்களுக்கு தொல்லை கொடுத்த கொங்கராயனை, அவனை எதிர்த்து போராடிய கொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு வேட்டுவர்கள் துணை நின்றனர். கொங்கராயன் தங்கள் ஜாதியை சேர்ந்தவன் என்றாலும் வெள்ளாளர்களுக்குத் துணை நின்ற வேட்டுவர்களும் இருந்தனர். அப்போரில் காவில வேட்டுவர் பெரியதம்பி கவுண்டர் மகன் பெரியண்ணனும் அடங்குவார். வெள்ளாளரும், வேட்டுவரும் இணைந்து கொங்குராயனை கொன்று அங்கே தர்மத்தை நிலை நாட்டினர். அதேசமயம், கொங்குராயன் மற்றும் அவன் படையில் இருந்தொரின் குடும்பத்தாரை துன்புறுத்தாமல் போரின் பின் மரியாதையோடு அவர்கள் விருப்பப்படி செல்ல அனுமதித்தனர்.

3.விஜயநகர ஆட்சியில் கிருஷ்ணதேவராயர் உத்தரவுப்படி பருத்திப்பள்ளி செல்லன்கூட்ட கொங்கு வெள்ளாள கவுண்டர் உலகப்ப கவுண்டர் தாராபுரத்தில் அட்டூழியம் செய்தவர்களை அடக்க போர் தொடுக்கிறார். அவரது படையில் அவருக்கு பக்கபலமாக நின்று போராடியவர்கள் வேட்டுவர்களுமாவர். இதனால் பருத்திப்பள்ளி பட்டக்காரராக உலகப்ப கவுண்டர் பட்டம் பெறுகிறார். அதேபோல பருத்திப்பள்ளியில் வெட்டப்பட்ட ஏரி நிற்க நரபலி கொடுக்கவேண்டியிருந்ததால் அப்போது வெள்ளாளர் வெட்டிய ஏரி என்று வேற்றுமை பார்க்காமல் வேட்டுவர் ஒருவர் தனது குழந்தையை நரபலி கொடுக்கிறார். அதனால் பருத்திப்பள்ளி வளம் பெற்றது. வேட்டுவர் வெள்ளாளர் ஒற்றுமைக்கு பருத்திப்பள்ளி சிறந்த உதாரணம்.


4.கொங்கு வெள்ளாள கவுண்டரில் வெண்டுவன் கூட்டம் கூடலூர் பண்ணை கூட்டத்தில் பெண்ணை கட்டி அங்கே நடந்த பிரச்சனையில் வெண்டுவன் கூட்டத்தாருக்கு துணையாக வேட்டுவர்கள் இருந்து மணநாடு பெற உதவினார்கள்.

5.பரமத்தி பகுதியில் ராஜ வாய்க்காலை அல்லால இளையா நாயக்கர் என்ற வெட்டுவ பட்டக்காரர் வெட்டினார். திருசெங்கோட்டிலும் திருப்பணிகள் செய்தவர். அவரை இன்றளவும் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் மரியாதையோடு நினைத்துப் பூஜிக்கவும் செய்கிறார்கள். அவரது வம்சாவழியை சேர்ந்வரும் சமீபமாக காலமானவருமான இளையா நாயக்கர் வம்சாவழியைச் சேர்ந்த பட்டக்காரருக்கு அவரது கடைசி காலம் வரை இணக்கமாகவும் துணையாகவும் இருந்துள்ளனர் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள்.






6.தென்னிலைப் பட்டயங்கள் மூலமாக பல காணிகள் மற்றும் எல்லைகளை வேட்டுவர்களும்-வெள்ளாளர்களும் தீர்மானம் செய்து கோயில் மற்றும் நிர்வாகப் பணிகள் பிழையின்றி நடக்குமாறு பிரித்துக் கொள்கிறார்கள். குடிகளின் பல்வேறு பிரச்சனைகளை ஒன்றாக நின்று தீர்த்துவைக்கிறார்கள்.

7.தீரன் சின்னமலை தீர்த்தகிரி கவுண்டர் தன் வீரர்களுக்கு போற்பயிற்சி கொடுக்க பட்டாலியில் நிலத்தை கிரையம் கொடுத்தது வேட்டுவர்; கிரையம் பெற்றவர் தீர்த்தகிரி கவுண்டரின் மச்சினன்.



8.முத்தூரில் உரிமைப்போராட்டம் நடந்தபோது அங்கு கொங்கு வெள்ளாள கவுண்டர்களோடு சேர்ந்து போரிட்டு சிவசமுத்திரத்தில் சிறை சென்றவர்களில் வெங்கச்சி வேட்டுவர் சரவண கவுண்டருமாவார்.

9.மோளப்பாளையம் பகுதி வேட்டுவ கவுண்டர் தர்மம் தவறாதவர்கள் என்று இன்றளவும் அந்த வட்டார வெள்ளாள கவுண்டர்கள் அவர்களை மதித்துப் போற்றுகிறார்கள். அதுபோல கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பட்டக்காரர்களாக உள்ள பகுதிகளில் அந்தந்த பட்டக்காரர்களின் நியாயத்திற்கு கட்டுப்பட்டு வேட்டுவக் கவுண்டர்களும் நடந்தார்கள்; நடக்கிறார்கள்.

10.இன்றும் ஏராளமான காணியாச்சி கோயில் விழாக்களில் வேட்டுவர் வெள்ளாளர் இருவருக்கும் உரிமை இருக்கும். அந்த கோயில்களில் பெரும்பாலும் எந்த பிரச்னையும் இன்றி ஒற்றுமையாக இவ்வளவுகாலம் தெய்வ காரியங்களை நடத்திக் கொண்டுதான் வருகிறார்கள்.

11. வேட்டுவர் தலைவர் அப்பச்சிமார் அவையில் வெள்ளாள குலத்தில் பயிர கூட்டம் மற்றும் சாத்தந்தை கூட்ட மக்கள் இடம்பெற்றிருந்த செய்தி அப்பச்சிமார் காவியத்தில் உள்ளது.

12. சிவகிரியில் இருந்த கண்ணப்பர் பஜனை மடத்தில் கண்ணப்பர் குருபூஜை விழாவில் வேட்டுவர் வேண்டுகோளுக்கிணங்க, வேளாளர் சமுதாய புலவரான திரு. தெய்வசிகாமணி கவுண்டர் கண்ணப்பர் அம்மானை இயற்றிப் பாடிக் கொடுத்துள்ளார்.

13. வேட்டுவர் சமுதாய ஆவணங்கள் என்ற அறிய வரலாற்று ஆவணங்களின் தொகுப்பையும், அப்பிச்சிமார் காவியத்தையும் எழுதி வெளியிட்டவர் சாத்தந்தை கூட்ட கொங்கு வேளாளர் புலவர் ராசு அவர்கள். 

மேலே சொன்னவையல்லாது இன்னும் ஏராளமான சம்பவங்கள் உதாரணமாக சொல்லலாம். ஒரு வட்டாரத்தில் வாழும் இரு சாதிகளுக்குள் சண்டை வருவது இயல்பு. கொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கும் பிற ஜாதிகளுக்கும் எவ்வளவு பிரிவினைகள் வந்ததோ, அதைவிட, கொங்கு வெள்ளாள கவுண்டர்ளுக்குள்ளேயும் வந்துள்ளது. அதுபோல, வேட்டுவர்களுக்கும் பிறருக்கும் எவ்வளவு சண்டை வந்துள்ளதோ அதைவிட அதிகமாகவே வேட்டுவ கவுண்டர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுள்ளனர். எனவே ஜென்ம பகைப்போல இரு ஜாதிகளையும் வர்ணிப்பது தகாது.

யார் முதலில் வந்தார்கள்;யார் பின்னால் வந்தார்கள்; யார் யாரை ஆண்டார்கள் போன்ற விவாதங்ளுக்கு முடிவே கிடையாது. முடிவை எட்டினாலும் யாரும் யாரையும் அழிக்கவோ விரட்டவோ இயலாது. வரலாறு நாம் நன்றாக வாழ வழிகாட்டத்தானே ஒழிய அடித்துக் கொண்டு சாவதற்கல்ல.

இத்தனை நூற்றாண்டுகளாக நம் இரு சமூகத்துக்கும் வாழ்வளித்து காத்துவந்த கொங்கதேசமும், இங்குள்ள மலைகளும், ஆறுகளும், எல்லா சமூக பெண்கள், கலாசாரம், கிராமங்கள், கோயில்கள், மதமாற்றம் என்று அனைத்தும் கடும் அச்சுறுத்தல் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ளன. அலுமினியம் என்று கொல்லிமலை மற்றும் பிளாட்டினம் என்று பரமத்தி வட்டாரம் முழுக்க சுரண்டப் போகிறார்கள். தோல் மற்றும் சாய விஷங்களால் நதிகள் விஷமாக ஓடிக்கொண்டிருக்கிறது, அந்த தண்ணீரும், அந்த நீரில் விளைந்த உணவும் லட்சக் கணக்கானோரை கொன்றுகொண்டிருக்கிறது. பஞ்ச காலங்களில் எல்லாருக்கும் சோறு போட்ட கொங்கதேசம் இன்று காவேரி மூலம் விஷத்தை அனுப்பிக் கொண்டிருக்கிறது. கேன்சர், குழந்தையின்மையில் இந்தியாவில் முதலிடத்தில் கொங்கதேச மக்கள் சாகிறார்கள். காதல் என்னும் பேரால் பெண்கள் நாசமாகிறார்கள்; பல்வேறு வெளிநாட்டு சக்திகளால் தூண்டப்படும் முற்போக்கு சூழ்ச்சிகளால் கலாச்சாரமும், கிராமங்களும், ஜாதியும் நலிவுற்று வருகிறது. நம் முன்னோர்கள் காத்து வளர்த்த கோயில்களை இன்று அறநிலையத்துறை சூறையாடி வருகிறது. உயிர் கொடுத்து வெட்டி வைத்த ஏரி, குளங்கள் எல்லாம் இன்று சீரழிந்தும், பிளாட் போட்டும் விற்கப்பட்டு வருகிறது. இதானால் கொங்கதேசமே பஞ்சத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. உயிர்த்தியாகம் செய்து போற்றிக் காத்த நாட்டுப்பசுக்கள் இன்று நம் கண்முன்னால் வெட்டப்படுகிறது. கொங்கதேசத்தின் குடிகள் அல்லாது பிற ஜாதிகள், பிற மதத்தவர்களின் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது;இதனால் கொங்கு குடிகளின் உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட மோசமான நிலையில் கொங்கினை காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாகும். சோற்றில் விஷம், தண்ணீரில் விஷம், பெண் தன் குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பால் கூட விஷமாகும் அளவு காலம் மோசமாகவுள்ளபோது எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்?. இந்த அடிப்படை பிரச்சனைகளுக்கு கொங்கதேசக் குடிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கக் கூடாது என்றுதான் பகைமை தூண்டிவிடப்படுகிறது. வேட்டுவர் - வெள்ளாளர் - அருந்ததியர் -பறையர் - வன்னியர் போன்ற பகையுணர்ச்சி பரவலின் பின்னணி இதுவே. சமுதாயப்பணி என்பது தனது சமுதாயத்தை எந்த அளவு ஆக்கபூர்வமாகவும், தர்ம வழியிலும் வழிநடத்திச் செல்கிறோம் என்பதில் இருக்கிறது. இன்னொரு சமுதாயத்தின் மீது வெறுப்புணர்ச்சியை வளர்த்துவிட்டு, அதனால் வரும் சண்டைகளுக்கு ஆள் சேர்த்துக் கொண்டு அழிவு வேலைகளைச் செய்வதல்ல சமூகப்பணி. பல ஜாதிகளிலும் இதுபோன்ற சண்டைக் கோழிகளை வளர்த்து விட்டு ஜாதிகளின் நல்லிணக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அந்த சந்தில் தங்களது காரியத்தை வெளிநாட்டு-அரசியல்-மதவாத சக்திகள் சாதித்துக் கொள்கின்றன.

ஒற்றுமையில்லா பூனைகள் குரங்கை நாட்டாமைக்கு அழைத்து தங்கள் ரொட்டியை இழந்த கதையாகத்தான் தற்கால கொங்கதேச குடிகளின் போக்கு இருக்கிறது. 

தங்கள் ஜாதி-குடும்ப வரலாறு பற்றியே சொல்லித்தராத இன்றைய சூழலில் பெரும்பாலான கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் குடும்பங்களில் வேட்டுவர்-வெள்ளாளர் பகைமை பற்றி சொல்லப்படுவதில்லை; வேட்டுவ நண்பர்கள் தகவல்படி அவர்கள் இல்லங்களிலும் இதே நிலைதான். ஆக இந்த பகையுணர்ச்சி இன்றளவும் அணையாமல் பார்த்துக் கொள்வது வெளிப்புற சக்திகளே தவிர அடிமட்டத்தில் பெரும்பான்மையாக இல்லை. கொங்கதேசம் தனிமாநிலமாக அமைந்தால், கொங்கு குடிகள் செழிக்கும், தற்போதிருக்கும் அரசியல்வாதிகள் பிழைப்பில் மண் விழும். வேட்டுவர்-வெள்ளாளர் பகைமையை வளர்த்து குளிர் காய நினைக்கும் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள், மதமாற்றும் நிறுவனங்கள் & கட்சிகளின் பின்புலத்தில் இயங்கும் சில அரசியல்வாதிகளும், வேட்டுவர் வெள்ளாளர் பகைமையால் நன்மையடைய நினைக்கும் பிற மதத்தவரும், ஜாதியினரும், தங்கள் பணம், மற்றும் செல்வாக்கின் மூலம் வேட்டுவர்-வெள்ளாளர் வெறுப்புணர்ச்சி அழியாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இதனால் நிஜத்தில் பாதிக்கப்படுவது கிராமங்கள் தான். முன்பும் சரி, இன்றளவும் சரி, நட்புக்கு உதாரணமாக பழகிவரும் வேட்டுவர்-வெள்ளாளர் ஏராளம். இந்த அரசியல் விளையாட்டுக்களால் கடுமையாக பாதிக்கப்படுவது கீழ்மட்டத்தில் கிராமங்களில் வாழும் வெள்ளாள-வேட்டுவ மக்கள் மட்டுமல்ல, கொங்கதேசமும், தர்மத்தை போற்றி நின்று வாழ்ந்த இருதரப்பு முன்னோர்களின் மரியாதையும்தான்.

இரு தரப்பிலும் யாரேனும் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். இது முழுக்க முழுக்க சமூக ஒற்றுமை மற்றும் கொங்கதேச நலன் கருதி எழுதப்பட்டது


4 comments:

  1. சொன்னதெல்லாம் மிகவும் சரியாகும்
    ஆனால் கடைசியில் சிவார்ப்பணம் என்று சொல்லி விட்டீர்கள் அதனால் கருத்துக்களை கவனமாக எழுத வேண்டி உள்ளது

    ReplyDelete
  2. சொன்னதெல்லாம் மிகவும் சரியாகும்
    ஆனால் கடைசியில் சிவார்ப்பணம் என்று சொல்லி விட்டீர்கள் அதனால் கருத்துக்களை கவனமாக எழுத வேண்டி உள்ளது

    ReplyDelete
  3. very good for think but both are diffrent mind

    ReplyDelete
  4. அட அருமையான பதிவு

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates