Trending

Tuesday 8 March 2016

பொன்னேர் பூட்டும் வைபவம்

பொன்னேர் பூட்டும் விழா, பொன்னேர் கட்டுதல் என்று குறிப்பிடப்படும் விழா நம் தொன்மையான விழாக்களில் ஒன்று. தற்காலத்தில் ஏறக்குறைய நாம் மறந்துவிட்ட பண்டிகை. அதென்ன, பொன்னேர் கட்டுதல்..?? தைப்பொங்கல் என்பது அறுவடை முடிந்தபின் நடக்கும் பண்டிகை போல, பொன்னேர் கட்டுவது என்பது சித்திரை மாதம் விதைக்கும் பருவத்தில் விவசாயத்துக்காக நிலத்தை உழுவதற்கு முன் கொண்டாடப்படும் குடியானவர் பண்டிகை. பாரத தேசம் முழுதுமே இப்பண்டிகை கொண்டாடப்பட்டது. தேசத்தின் அரசர் முதல் கிராமத்தின் ஊர் கவுண்டர்கள் வரை தங்கத்தால் செய்த கலப்பை கொண்டு (அல்லது சிறிது தங்க ஆபரணம் கொண்டு அலங்கரித்த கலப்பை கொண்டு) நிலத்தை உழுது உழவை துவக்கி வைப்பார்கள். தற்காலத்தில் கொங்குப் பகுதியில் அருகிப் போயிருந்தாலும் பாரதத்தின் பிற பகுதிகளிலும், பாரத ராஜ்யம் ஏற்பட்ட வெளிநாடுகளிலும் இன்றளவும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கொங்குப் பகுதியில் எண்பது வயது தாண்டிய பெரியவர்கள் அவர்கள் சிறு வயதில் இப்பண்டிகை கொண்டாடட்டத்தை நினைவுகூறுகிறார்கள்.




புராண இதிகாசங்கள் முதல் சங்ககாலம் முதல் பொன்னேர் பூட்டும் நோம்பி பற்றிய குறிப்புகள் உள்ளன. 

ஸ்ரீ ராமாயணம்
ஸ்ரீ ராமாயணத்தில் மாதா சீதை, ஜனக மகாராஜாவுக்கு தெய்வ அனுக்கிரஹத்தால் கிடைத்த குழந்தை. அவர் பொன்னேர் பூட்டி ஒரு திருநாளில் உழுத போதுதான் நிலத்தடியில் சீதை கிடைக்கிறார். சீதை என்ற பேரே ஏர்கலப்பை நிலத்தில் உழுது செல்லும் பாதையை குறிப்பதாகும். ஏர்க்கலப்பையில் பாதையில் கிடைத்த குழந்தை எனவே சீதை என்று பேர் வைத்தார்கள்.



வேங்கட புராணம்
வெங்கடேச புராணத்தில் பத்மாவதி தாயார், அவரது தந்தைக்கு கிடைத்ததும் இதுபோன்ற பொன்னேர் பூட்டும் வைபவத்தில் தான்.

சிவமஹாபுராணம்
சிவமஹாபுராணத்தில் நந்தீஸ்வரர் சிலாத முனிவருக்கு பொன்னேர் பூட்டி ஓட்டிய போது மாணிக்கப்பெட்டியில் கிடைத்தார்.

சத்ரபதி சிவாஜி

சிலப்பதிகாரம்

"கொழுங்கொடி யறுகையுங் குவளையுங் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்" - (சிலப்.10:13:2-5)

என்னும் சிலப்பதிகார நாடுகாண் காதையடிகட்கு, "செந்நெற் கதிரோடே அறுகையும் குவளையையும் கலந்து தொடுத்த மாலையை மேழியிலே சூட்டிப் பாரை இரண்டாகப் பிளப்பாரைப் போலப் போற்றுவார் தொழப் பொன்னேர் பூட்டி நின்றோர் ஏரைப் பாடும் ஏர் மங்கலப் பாட்டுமென்க" என்று அடியார்க்குநல்லார் உரை வரைந்துள்ளார். அடியார்க்கு நல்லார் கொங்கதேசத்தில் கன்னகூட்ட பொப்பண்ண காங்கேயன் ஆதரவில் வாழ்ந்தவராவார். அவர் உரை இல்லாவிடில் இசைத்தமிழ் என்ற துறை இன்று இல்லை. ஆக, கொங்கதேசத்தைச் சேர்ந்த அடியார்க்கு நல்லார் உரையில் கொடுக்கபப்டும் விளக்கம், சிலப்பதிகார காலத்திலோ அல்லது அடியார்க்கு நல்லார் வாழ்ந்த (12 நூற்றாண்டு) காலத்திய கொங்கு வழக்கம் என்பதில் மாற்று கருத்தில்லை.

சங்க இலக்கியங்கள்

களமர்கள் பொன்னேர் பூட்டித் தாயர்வாய்க் கனிந்த பாடற்
குளமகிழ் சிறாரி னேறு மொருத்தலு முவகை தூங்க
வளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற
அளமரு பொறிபோ லேவ லாற்றவாள் வினையின் மூண்டார்.
(திருவிளையாடற்புராணம்)

உழவர்கள் பொன்னேரை பூட்ட எருதுகளும், எருமைக் கடாக்களும் மகிழ்ச்சியுடன் வர, அவை அன்னையரின் வாயினின்று வரும் பாடலுக்கு மனம் மகிழ்கின்ற சிறுவர்களை போல் மருதப்பண்  பாட்டுக்கு மகிழ்ந்து உழவர் சொல்லுக்கு இணங்க உளவு தொழில் செய்தன என்பார்.பல வண்ண எருதுகளை பூட்டி வழிய கால்களை உடைய உழவர்,பூமியில் உழவு செய்ய பூமியின் அங்கம் கிழித்து செந்நெல் பயிர்கள் செழித்து அசைந்து ஆடின என்பார். 

கார் நாற்பது

கருங்குர னொச்சிப் பசுந்தழை சூடி
இரும்புனம் ஏர்க்கடி கொண்டார் பெருங்கௌவை
ஆகின்று நம்மூ ரவர்க்கு.

ஏர்க்கடி கொள்ளுதல் - புதிதாய் ஏருழத் தொடங்குதல்; இதனை ‘நல்லேர்' என்றும், ‘பொன்னேர்' என்றும் வழங்குவர். (ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை)

அண்ணமார் கதைப்பாட்டில் குன்னுடையா கவுண்டர் பொன்னேர் ஓட்டிய தகவலும் உள்ளது.

கொங்கின் எல்லா பகுதிகளிலும் கொங்கு கவுண்டர்கள் மரபில் வந்த ஊர்கவுன்டர்கள் (கொத்துக்காரர்கள்) பொன்னேர் பூட்டுவதே நடந்துவந்துள்ளது. பொள்ளாச்சி வட்டாரத்தில் -வேளார் எனப்படும் குயவர்கள் முதல் ஏர் ஓட்டுவதும் நடந்துள்ளது.

பண்டிகை முறை:
இந்த பண்டிகை வேளாளரின் தலைமையில் நடக்கும் பண்டிகை. முதலில் சித்திரையில் ஒரு நல்ல நாளில் அல்லது முதல் தேதியிலேயே நடக்கும். பஞ்சாங்கத்தில் குறிப்பு பார்த்து கொண்டாடுவதும் உண்டு. நாள் முடிவு செய்தபின் ஊரில் எல்லாருக்கும் தகவல் தெரிவிக்கப்படும். ஊரின் ஈசானிய மூலையில், ஒரு போது நிலத்தை தேர்ந்தேடுப்பர். விடியற்காலையில் கவுண்டர்கள் தங்கள் ஏர் மற்றும் எருதுகளோடு அந்த இடத்திற்கு வந்து சேர்வர். பெண்கள் பைகளில் மாட்டு எருவை சிறிதளவு எடுத்து வருவர். 

உழும் நிலத்தில் பிள்ளையார் (மஞ்சள்/சாணம்) பிடித்து அருகம்புல் வைத்து தேங்காய் பழம் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் படைத்து, விதை தானியங்கள் (நவதானியம்), நிறைநாழி, உட்பட மங்கள பொருட்கள் வைத்து, கலப்பை-காளை எல்லாவற்றிற்கும் பூஜை செய்து வணங்குவர். சூரியனுக்கும், பூமித்தாய்க்கும்கூட பூஜைகள் நடக்கும். சிலப்பதிகார உரை எழுதிய அடியார்க்கு நல்லார் (நம் கொங்கதேசத்தைச் சேர்ந்தவர்), கலப்பைக்கு செந்நெல் கதிர், குவளை மலர் (வெள்ளாளர்கள் சூடும் மலர்), அருகம்புல் கொண்டு தொடுத்த மாலையை சூட்டி பூஜிப்பராம். இது கொங்கதேச மரபே. மேலும் பொன்னேர் ஓட்டும்போது ஏர்மங்களப் பாட்டும் பாடப்படுவதை அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். அந்த ஏர் மங்களப் பாட்டு ஏதேனும் நாட்டுப்புறவியல் ஆய்வாளர்களால் ஆவணப்படுத்தப்பட்டதா என்று தெரியவில்லை.

(ஸ்ரீ ராமாயணத்தில் வனம் புகும் முன் ஸ்ரீராமர் வனதேவதையும், அங்கிருக்கும் பல்லுயிரினங்கள் மற்றும் தாவரங்களையும் வணங்கி நாங்கள் இங்கே நடப்பதாலும் வசிப்பதாலும் உங்களுக்கு ஏற்படும் துன்பத்தை பொறுத்தருள வேண்டும் என்று பூஜைகள் செய்து வணங்குவார். அப்போது லக்ஷ்மணன் விவசாயம் செயும்போது இதேபோன்ற தீமையினால் வரும் பாவம் விவசாயிகளைப் பிடிக்காதா என்று கேட்கையில், ஸ்ரீராமர் பொன்னேர் பூட்டும்போது செய்யப்படும் இதுபோன்ற பூஜைகள் பற்றி சொல்வார்)

பூஜைகள் முடிந்ததும், காளைகளை ஏரில் பூட்டி பஞ்சாங்கத்தில் குறிப்பிட்ட திசையை நோக்கி ஏர்களை ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக நிறுத்துவர். உழும் நிலத்தில் மக்கள் கொண்டுவந்த எருவை தூவுவர். முதல் ஏரை ஊர் கவுண்டர் ஓட்ட அவர் பின்னே மற்ற ஏர்கள் வரும். உழுதுசெல்லும் வழியில் நவதானியங்கள் தூவப்படும். உழுது முடித்த பின் மக்கள் நிலத்தில் இருக்கும் நவதானியங்களையும் கைப்பிடி மண்ணையும் எடுத்து சென்று தங்கள் நிலத்தில் போடுவார்கள். இதனால் விளைச்சல் நன்றாக இருக்கும் என்ற ஐதீகம். 

தேவதானமாக (கோயில் மானியமாக) விடப்பட்ட ஊர்களில் சிறிது மண் கோயிலுக்கு கொண்ட செல்லப்படும். விளைச்சல் முடிந்ததும் கோயிலுக்குரிய பங்கை மக்கள் செலுத்துவர். சிற்சில பூஜை மாற்றங்கள் அங்கே உண்டு.

அவரவர் வீடு செல்லும்போது, வீட்டிலிருக்கும் பெண்கள் நீராகாரம் தயாரித்து வைத்திருப்பர். உழுது களைத்து வந்தவர்கள் நீராகாரம் அருந்தி புத்துணர்வு பெறுவர். சில ஊர்களில் மஞ்சள் நீர் விளையாட்டும் நடைபெறும். பொன்னேர் விழா நடக்கும் நாளில் எல்லா வீட்டிலும் வேப்பங்கொத்து வொருகி வைக்கப்படும். பொன்னேர் விழா முடிந்த பின்னர் மக்கள் எல்லாரும் தங்கள் நிலத்தில் விவசாயத்தை துவங்குவர்.

பொன்னேர் பூட்டி ஓட்டுவது விவசாயிகளுக்கு மட்டுமல்ல, அதில் கலந்துகொள்ளும் மக்களுக்கும் அந்த ஊருக்கும் சுபிட்சத்தை வாரி வழங்கும் பண்டிகையாகும்.

இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் பொன்னேர் என்பதே வெள்ளாளர்களின் சாதி சின்னமாகும். வேல்லாலர்களின் ஜாதி கொடியை பொன்மேழிக்கொடி சித்திரமேழிக்கொடி என்றுதான் சொல்வார்கள். வெள்ளாளர்கள் ஜாதி சபையை சித்திரமேழி சபை என்றே சொல்வார்கள். சித்திரமேழி-பொன்மேழி இரண்டும் ஒன்றையே குறிக்கிறது. சித்ர-பிரகாசமான, மேழி-கலப்பை அதாவது ஒளி பொருந்திய கலப்பை என்றும்... சித்திரை மாசம் பூட்டப்படும் ஏர் (அதாவது பொன்னேர்) என்றும் இருவேறு விதமாக பொருள் கூறுவர். எல்லா நாட்டு அரசனும் இந்த பொன்னேர் உழவை தானும் உழுது துவக்கி வைப்பது அரசர்களின் விவசாயக் குடிப்பிறப்பை குறிப்பதாகும். சோழனை வெள்ளாள மகாராசா என்றும், வெள்ளாள ஜாதியில் பிறந்தவன் சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது. இன்றும் சோழனின் ஆட்சி பரவிய கம்போடியா தாய்லாந்து போன்ற நாடுகளில் அரசர்கள் தவறாது வருஷந்தோறும் சித்திரை மாத காலத்தில் பொன்னேர் பூட்டி ஓட்டுகிறார்கள். அரசர்கள் உழவு ஜாதியில் இருந்து வந்தமைக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஆதியில் நாடோடி வாழ்க்கையாக வாழ்ந்த மனிதன் நாடும் ராஜ்யமும் அமைக்க, ஓரிடத்தில் நின்று வாழ வேண்டும். அதற்கு அடிப்படையாக அவனுக்கு உணவும் நீரும் தேவைப்பட்டது. அவற்றை உருவாக்க தெரிந்தவந்தான் வெள்ளாளன். எனவேதான் பெரும்பாலான அரசகுடிகள் வெள்ளாள ஜாதியாகவே உள்ளனர். 
இனி வரும் காலங்களில் மீண்டும் பொன்னேர் வைபவம் துவங்கப்பட்டு, அந்நாளில் பாரம்பரிய விதைகள் பகிர்ந்துகொள்வது, பாரம்பரிய விவசாய உரைகள் ஏற்பாடு செய்வது, நாட்டுப் பசுக்களின் அவசியம் போன்றவற்றை எடுத்துரைக்கும் விதமாக ஒரு விவசாய விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட வேண்டும்.

கம்போடியா-தாய்லாந்து- போன்ற நாடுகளில் இன்றும் இந்த விழா அந்நாட்டு அரசர்களால் கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் பெருவாரியாக கலந்துகொண்டு அங்கே விதைக்கப்படும் நவதானியங்களை போட்டி பொட்டு எடுத்து செல்வர். இதனால் தங்கள் நிலத்தில் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை. அங்கே உழவு முடிந்ததும் உழவோட்டிய காளைகளுக்கு பல வித தீவனங்கள் வைக்கப்படும். எந்த தீவனத்தை காளை முதலில் உன்கிறதோ அதை வைத்து அவ்வருடத்தின் பலன் முடிவு செய்யப்படும்.

தாய்லாந்து பொன்னேர் விழா

கம்போடியா பொன்னேர் விழா, 2015





3 comments:

  1. Sir can I have your contact nr please.

    ReplyDelete
    Replies
    1. please put your contact number here.. we will contact you..

      Delete
  2. my mobile number 9677496112

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates