Trending

Thursday 5 November 2015

துலா காவேரி

நாம் பலகாலமாக மறந்ததும், மறக்கடிக்கப்பட்டதுமான ஒரு மிகமுக்கிய பண்டிகை துலா காவேரி பூஜை மற்றும் ஸ்நானம் ஆகும். துலா காவேரி பூஜை என்பது ஐப்பசி மாசம் காவேரி நதியை பூஜிப்பது ஆகும். ராசிக் கட்டத்தில் துலா ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலமே ஐப்பசி மாசம் ஆகும். எனவேதான் துலாகாவேரி என்கிறோம். துலாகாவேரி முக்கியத்துவம் பெற இரண்டு முக்கிய காரனங்கள் இருந்தன,
  1. காவேரித்தாய்க்கு நன்றி செலுத்துதல் 
  2. ஐப்பசி மாச காவேரி நதியின் மகிமை 


காவேரியும் கொங்கதேசமும்
கொங்கதேசம் என்பதே நடுக்காவேரியின் நீர்ப்பிடிப்பு பகுதி என்று சொல்லலாம். கொல்லி, சேர்வராயன், நீலகிரி, ஆனைமலை, மேற்குத் தொடர்ச்சி வெள்ளியங்கிரி, பழனி போன்ற மலைத் தொடர்களால் சூழப்பட்ட கொங்கதேசத்தில் பருவமழைகள் பெய்யும் போது அந்த நீர் எல்லாம் ஓடைகளாக அருவிகளாக சிற்றாறுகளாக பெருக்கெடுத்து இறுதியாக காவேரியில் சங்கமமாகும். கொங்கதேசத்தை சுற்றியுள்ள மலைகளில் இருக்கும் அரிய மரங்களால் அன்றாடம் நிகழும் நீர்கனிவு (Condensation) காரணமாகவும் இந்த ஆறுகளில் நீரோட்டம் இருக்கும். 


இந்த சிற்றாறுகள் அனைத்தும் எல்லா நாடுகளையும் தொட்டு செல்லும்விதமாக நாடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த நாடுகளுக்குள் இந்த சிற்றாறுகளில் வெள்ளம் வரும்போது ஏரி குளம் குட்டைகளில் தேக்கி நிறுத்தி விவசாயம் செய்வர். இவற்றையெல்லாம் தாண்டி வரும் நீரும், வயல்களில் வரும் ஒரம்பு நீர் ஓடைகளும் இறுதியில் சென்று சேர்வதும் மீதி வரும் வெள்ளத்துக்கு வடிகாலாகவும் காவேரியே இருக்கிறது. ஆக, கொங்க தேசத்தில் விவசாயம் உட்பட அனைத்து தொழிலும் சிறக்க காரணமாக இருப்பது காவேரி நதியாகும்.


மேலும் காவேரித்தாயின் மடியில்தான் நமக்கு மிகவும் புகழ்பெற்ற பவானி சங்கமேஸ்வரர் ஆலயம், கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம், கரூர் பசுபதீஸ்வரர் ஆலயம், கொக்கராயன்பேட்டை என்னும் திருவகழிமங்கள பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம் மேலும் எண்ணிலடங்கா அற்புத ஆலயங்கள் நிர்மாணம் செய்யப்பட்டு கொங்கதேசத்துக்கு புண்ணியம் சேர்க்கின்றது.

வரலாற்றில், காவேரி நதியில் மிதந்து வந்த எச்சில் இலைகளைக் கொண்டுதான் கம்பர் கொங்கதேச காராள வம்ச குடியானவர்கள் சோழனை விடவும் உயர்ந்தவர்கள் என்பதை நிரூபித்து பெருமை சேர்த்தார். காவேரியின் வெள்ளம் தணித்ததால் தான் நமக்கு புலவனார் மரபு என்ற ஞானக் களஞ்சியமே கிட்டியது.

தஞ்சை திருக்கோவில்பட்டில் சிவபூஜையில் உள்ள காவேரியன்னை சிற்பம் 
நம் விவசாயத்துக்கு உதவிய சூரியதேவனை தைப் பொங்கல் அன்று வணங்குகிறோம். நம் வாழ்க்கைக்கும் தேவையான அனைத்தையும் கொடுத்து காத்த தெய்வங்களான நாட்டுப்பசுக்களை மாட்டுப் பொங்கலன்று வணங்கிக் கொண்டாடுகிறோம். ஆனால் காவேரிமாதாவை மட்டும் நம் முன்னோர்கள் நன்றி மறந்து விட்டுவிட்டார்களா?? அதற்காகத்தான் இந்த துலாகாவேரி பூஜை. மேலும், காவேரிக்கரைகளில் வசந்தமண்டபங்கள் கட்டி அதில் தெய்வ உற்ச்சவர்களுக்கு தீர்த்த மான்மியங்கள் நடத்தினார்கள். முளைப்பாரி போட்டு காவேரி ஆற்றின் உயிர்ச்சூழலுக்கு ஊக்கமளித்தார்கள்.

துலா காவேரித்தாய் மகிமை


காவேரி உற்பத்தியாகும் ஆரம்ப இடம்-தலைக்காவேரி
i. ஆன்மீக மேன்மை 
துலா காவேரியின் மகத்துவத்துக்கு முக்கிய காரணம், அம்மாதம் காவேரி நதி அடையும் புண்ணிய பலனே. பூகோள அமைப்பின்படியும், ஐப்பசி கால சூழலாலும், காவேரி மிகப் புண்ணிய நிலையை அடைகிறது; தேவர்களையும், சகல தெய்வங்களையும் ஈர்க்கும் பலம் பெறுகிறது. துலாகாவேரியின் மகிமை பற்றி பேசாத ஞானியர் இல்லை. துலாகாவேரி மகிமைப் பற்றி துலாகாவேரி புராணம் என்ற புராதன நூலே இருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!. அகஸ்தியர் நாரதர் போன்ற ரிஷிகள் சூரிய வம்ச உத்தம அரசனான அரிச்சந்திர மகாராஜாவுக்கு உபதேசிப்பதாக இந்த புராணம் அமைந்துள்ளது.

(துலா காவேரி புராண நூல் லிங்க்http://www.tamilheritage.org/old/text/ebook/thula.pdf
துலாகாவேரி புராணத்தை எளிய வடிவில் கட்டுரைத் தொடராக வாசிக்க
http://santhipriyaspages.blogspot.in/2012/07/thula-puranam.html )

துலா காவேரியின் மகிமையை உணர்த சில செய்திகள்,


  • கங்கை நதியே ஐப்பசி மாசம் காவேரியில் ஸ்நானம் செய்துதான், வருஷம் முழுக்க பக்தர்கள் முழுகியதால் தனக்கு சேர்ந்த  பாவங்களைப் போக்கிக் கொள்கிறது.
  • வைகாசி மாத காவேரி, மற்றும் நர்மதை கூட இந்த விசேஷ நிலையை எட்டினாலும், துலாகாவேரியின் மகத்துவம் எந்த நதிக்கும் இல்லை.
  • ஆயிரம் நாக்குகள் ஆதிசேஷனாலும் துலா காவேரியின் மகிமையை கொண்ட  எடுத்துக் கூறிவிட முடியாது என்பது அகஸ்தியர் வாக்கு!
  • ஐப்பசி மாசம் காவேரியின் ஒவ்வொரு நீர்த்திவலையும், ஆற்று மணலும் கூட தெய்வீக நிலையை அடைகிறது.
  • துலாகாவேரியில் ஸ்நானம் செய்தே அர்ஜுனர் கிருஷ்ணர் தங்கையை மணந்தார், தனக்கு பீடித்த பாவங்களைக் கரைத்தார். சகல பாக்கியங்களையும் பெற்றார்.
  • சந்தனு மகாராஜா துலாகாவேரி ஸ்நானம் செய்தே பீஷ்மரை மகனாகப் பெற்றார்.
  • துலாகாவேரியில் ஸ்நானம் செய்தே ஸ்ரீராமர் இலங்கைப் போரில் தனக்கு ஏற்பட்ட பாவங்களை போக்கிக் கொண்டார்.
  • துலாகாவேரி ஸ்நானம் செய்தே ஸ்ரீ ஹரிச்சந்திர மஹாராஜா  ரிஷிகளை தன்னிலை மறந்த நிலையில் அவமதித்ததால் தனக்கேற்பட்ட பாவத்தைப் போக்கிக் கொண்டார்.
  • துலாகாவேரி ஸ்நானம் செய்வோர் தங்கள் குடும்பத்தையும் சேர்த்து மூன்று கோடி மக்களை கரையேற்றுவார்கள். ஐப்பசி காவேரியில் மகாலட்சுமி வாசம் செய்வதால் பிரம்மமுகூர்த்தத்தில் ஸ்நானம் செய்வது விஷ்ணு அருளையும், லட்சுமி கடாட்சத்தையும் அருளும். மும்மூர்த்திகளும் வாசம் செய்வதால், சூரிய உதயத்திற்கு ஒன்னரை நேரம் முன்பு சகல ரிஷிகளும் துலாகாவேரி ஸ்நானம் செய்கிறார்கள். 
  • தங்கள் பாவங்கள் அனைத்தும் அழிந்து இறுதியில் எமவதை இன்றி விஷ்ணு லோகத்தை அடைகிறார்கள்.
  • துலாகாவேரி ஸ்நானம் செய்து காவேரிக் கரையில் செய்யப்படும் எந்த தர்மத்துக்கும் கோடி மடங்கு பெரிய பலன் உண்டு. பித்ரு தர்ப்பணம், கோ-பூஜை, அரச மர பூஜை, அன்னதானம் உள்ளிட்ட தானங்கள் போன்றவை செய்யவேண்டும்.
  • ஐப்பசி துலாகாவேரி ஸ்நானம் செய்ததால் புண்ணிய கதியையும், நல்வாழ்வையும் பெற்ற பலரின் வரலாறுகளை துலாபுராணம் சொல்கிறது.

மேலே சொன்னவை எதுவும் செவிவழி செய்திகளோ கட்டுக்கதைகளோ அல்ல. சாஸ்திர மொழிகள்! நம் கொங்கதேசத்தில் இருக்கும் இவ்வளவு பவித்ரமான நதியின் மேன்மையை இவ்வளவு காலம் அறியாமல் விட்டோமே என்ற எண்ணம் எல்லாரும் ஏற்படுவது எதார்த்தம்.

ii. பௌதீக மேன்மை
ஆன்மீக காரணங்கள் மட்டுமல்லாது, ஐப்பசி மாசம் காவேரிதாயின் மகிமை பெருக பௌதீக காரணங்களும் உண்டு. ஐப்பசி மாதம் என்பது பருவமழை முடிவடையும் காலம். மழைக்காலம் பெய்த மழையால் குடகு தேசம் முதல், கொங்கதேசம் வரை சுற்றிலும் உள்ள பல்வேறு மலைகளில் உள்ள அரிய மூலிகை சேர்க்கைகள் நிறைந்த நீரும், அரிய மரங்களின் இலைகள் விழுந்து மட்கிய மண் துகள்களும் சேர்த்து காட்டாறுகளாகவும், சிற்றாறுகளாகவும் செந்நீராகக் கலந்து வந்து ஏரி குளங்களை நிரப்பி காவேரியை வந்தடையும். அந்த நீரோட்டத்தில் குளிப்பது மிகுந்த நற்பலன்களை கொடுத்துள்ளது. காவேரியாற்றின் மண்துகள்களும் தேவர்கள் என்பதும், காவேரிக் கரையில் மண்ணை உடலில் பூசி முழுகிஎழுவது சிரார்த்தம் செய்வதற்கு ஒப்பானது என்ற வழக்கமும் இதை வலுப்படுத்தும்.

குடகுதேசத்தில் இருந்து பருவமழை காரணமாக
ஆர்பரித்து அருவியாக விழும் காவேரி 
காவேரி இன்றைய நிலை
இவ்வளவு மகத்துவம் பொருந்திய தெய்வமாகிய காவேரியின் நீரைத்தான் தீர்த்தக்காவடி என்று பழனிக்கும், இன்னும் பல கோயில்களின் விஷேஷங்களுக்கும் கொண்டு செல்கிறோம். கிராமங்கள் முதல் பல ஊர்களில் சித்திரை மற்றும் வைபவ தினங்களில் பூஜைக்கு நீர் மற்றும் தீர்த்தக் குடம்கொண்டு செல்லப்படுகிறது. மாரியம்மன் கோயில் முதல், ஸ்ரீரங்கம், திருவானைக்கா, கும்பகோணம், மாயூரம், திருவையாறு உட்பட எராலமணா புண்ணிய தலங்கள் இந்த நீரையே பயன்படுத்துகின்றன. அப்படிப்பட்ட காவேரியின் இன்றைய நிலை,

கழிவுகளால் நுரை ததும்பும் காவேரி!

ஆற்றின் பாறைகள் கூட சாயமேறியுள்ளன!
திருப்பூர் சாய விஷம், சாக்கடை கழிவு, தோல் ஆலை விஷம், மேட்டூர் கரண்ட் மற்றும் கெமிக்கல் ஆலை விஷங்கள், கரூர் மற்றும் பள்ளிபாளைய காகித-சர்க்கரை ஆலை கழிவுகள் என்று எண்ணற்ற விஷங்களை காவேரியிலும் அதன் துணை ஆறுகளிலும் கலந்து விடுகிறோம். தெய்வத்துக்குக் கூட நல்ல நீரில் அபிஷேகம் செய்ய இயலவில்லை.

குடிக்க நல்ல நீரில்லை. நீர் விஷம் என்பதால் இயற்கை விவசாயம் சாத்தியமே இல்லை. தாய்ப்பால் வரை விஷம் பரவிவிட்டது. கேன்சரில் ஈரோடு இந்திய அளவில் முன்னிலை. குழந்தையின்மை, டெஸ்ட் டியூப் பேபி, கர்ப்பப்பை ஆபரேஷன், கேன்சர் எல்லாவற்றிலும். ஈரோடு மட்டுமல்ல, அக்கறை இக்கரையில் ஈரோடு தாண்டி காவேரி செல்லும் எல்லா மாவட்டங்களும் இந்த பாதிப்புகளை அனுபவிக்கின்றன. இனியாவது திருந்துவோமா..??  திருந்துவதற்கு துலா காவேரி பூஜைகள் ஒரு நல்ல துவக்கத்தைக் கொடுக்கட்டும். மக்களுக்கு நல்லுணர்வைக் கொடுத்து நதிகளையும், ஏரி குளங்களையும் காக்கட்டும்.

துலாகாவேரி ஸ்நானம் பூஜை முறை

துலாகாவேரி பூஜை, மற்றும் ஸ்தோத்திரங்கள் விரிவாக துலாகாவேரி புராண நூலில் விளக்கப்பட்டுள்ளன.
  • ஐப்பசி மாதத்தில் குறைந்தபட்சம் ஒருமுறையேனும் ஸ்நானம் செய்யவேண்டும். மூன்று நாட்கள் முழுகுவதும், மாதம் முழுவதும் முழுகுவதும் கூட மிகுந்த புண்ணியம் தரும்.
  • ஐப்பசி மாத கடைசியில் (கார்த்திகை ஒன்று) வருவது முடவன் முழுக்கு எனப்படும். ஒருகாலத்தில் மிகுந்த சிவபக்தியுடைய முடவன் ஒருவர், துலாகாவேரி ஸ்நானம் செய்ய காவேரி நோக்கி வெகுதூரம் பயணித்து வருவதற்குள் ஐப்பசி மாதம் முடியவே, மனம் வருந்தி "இறைவா, என்னால் துலாகாவேரி ஸ்நானம் செய்யமுடியவில்லையே" என்று வருத்தமுற சிவபெருமான் தோன்றி "கவலைப் படாதே, நீ இன்று (கார்த்திகை ஒன்று) காவேரியில் முழுகி எழு! ஐப்பசி மாசம் முழுக்க ஸ்நானம் செய்வதன் பலனை அருள்வோம்" என்று ஆசிர்வதித்தார். அதுநாள் கொண்டு முடவன் முழுக்கு மிகவும் புகழ் பெற்றது.
  • ஸ்நானம் செய்வோர் விடிகாலையில் (பிரம்மமுஹுர்தத்தில் சிறப்பு) எழுந்து காலைக் கடன்களை முடித்து, ஆற்றிற்கு சென்று விநாயகர், குலதெய்வம், இஷ்ட தெய்வம், சிவபெருமான், மகாவிஷ்ணு, காவேரியன்னை அனைவரையும் மனதார வணங்கி, ஆற்றில் இறங்கி நீராட வேண்டும். 

  • பின்னர் ஒரு தட்டில் வாழைப்பழம், தேங்காய் போன்றவை வைத்து காவேரியன்னையை பூஜித்து வணங்க வேண்டும். துலாகாவேரியின் மகிமையை நீங்களே படிக்கலாம். நியம நிஷ்டைகளைக் கடைபிடிக்கும் பிராமனரைக் கொண்டு முறையாக பூஜைகள் செய்து துலாபுராண காலட்சேபம் கேட்பது சிறப்பு.
  • முடிந்தால் பெண்கள் முளைப்பாரி செய்து விடலாம். 
  • முன்னோர்களுக்கு துலாஸ்நானம் செய்துவிட்டு தர்ப்பணம் செய்வது மிக விசேஷம். முன்னோர்கள ஆன்மா மிகுந்த மகிழ்ச்சியும் நற்கதியும் அடையும். அதனால் நமது பித்ரு தோஷங்கள் நீங்கி, வம்சவிருத்தி ஏற்படும்.
  • காவேரி கரையில் நீங்கள் அனுதினம் செய்யும் பூஜைகள், ஸ்தோத்திரங்கள், போன்றவற்றை செய்யலாம். பல மடங்கு புண்ணியம். அன்னதானம் உள்ளிட்ட தானங்களை செய்வது சிறப்பு. ஒவ்வொரு தானதுக்கும் என்ன பலன் என்று துலாகாவேரி புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
  • கோ-பூஜை செய்வதும், ஆற்றங்கரையில் உள்ள அரச மரத்துக்கு நீர்விட்டு வணங்கி வளம் வருவதும் மிகவும் சிறப்பாகும்.

தற்காலத்தில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள், பிராமணர்கள் போன்றோர் துலா காவேரி பூஜையை நியமமாக கடைபிடித்து வருகிறார்கள்.

அய்யம்பாளையம் இம்முடி சிற்றம்பல நாயனார் குருஸ்வாமிகள் தலைமையில் கொக்கராயன்பேட்டை (திருவகழிமங்கலத்தில்) நடைபெற்ற துலாகாவேரி பூஜை. வருஷந்தோறும் நடக்கிறது.

விநாயகர் மற்றும் அரசமர பூஜை 

துலாகாவேரி மாதா பூஜை


குருவிற்கு தன வஸ்திர காணிக்கை 
புரோகிதருக்கு தன வஸ்திர காணிக்கை 

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates