Trending

Thursday 28 July 2016

குலகுரு மரபு-ஓர் அறிமுகம்

குரு
குரு என்றால் இருளை விலக்குபவர் என்று பொருள். குரு, ஆச்சாரியர், உபாத்தியாயர் என்ற சொற்கள் வெவ்வேறு பொருள் கொண்டவை; ஆனால் தற்காலத்தில் ஒரே பொருளில் பார்க்கப்படுகின்றன. உபாத்தியாயர் கடமை கற்பிப்பதோடு முடிகிறது. ஆச்சாரியர் தான் கடைபிடிப்பதை, சோதித்து கற்பிக்கிறார். ஆனால், குருவானவர் சொல், செயல், ஸ்பரிசம், திருஷ்டி, சித்தம் போன்றவற்றால் அஞ்ஞானத்தை விலக்கி ஞானத்தை அருளவல்லவர். சிஷ்யனின் வாழ்வு முழுவதற்குமான ஞானத்தையும், நல்லருளை வழங்கி வழிநடத்தக் கூடியவர். ரத்த பந்தம் இல்லாமலேயே வாழ்வின் அனைத்து அம்சங்களும் பூரணமடைய வழிகோளுபவர். குருவே பிரம்மாவாக, விஷ்ணுவாக, சிவமாக அருள வல்லவர். குருவின் ரூபத்தில் மும்மூர்த்திகளையும் நாம் தரிசிக்கலாம். இந்த கருத்தை வேதங்களும், திருமூலர் திருமந்திரமும் பல இடங்களில் மாறாமல் செப்புகின்றன.




"குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மகேச்வர:
குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்மா
தஸ்மை ஸ்ரீகுரவே நம:"

     “குருவே சிவம் எனக் கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உறையுணா பெற்றதோர் கோவே

மாதா பிதா குரு தெய்வம் என்று வரிசைப்படுத்தி சொல்வதில், மாதாவின் மூலம் பிறப்பும், பிதாவின் மூலம் குலமும், அதனாலே குலகுருவும், குலதெய்வமும் வாய்க்கப் பெறுகிறோம் என்பதே பொருளாகும்.

 குலகுரு
சிஷ்யர்களின் குலவம்சத்திற்கே குருவாக இருந்து அனுக்கிரகம் செய்பவர் குலகுரு எனப்படுவார். தனது ஆச்சார அனுஷ்டான மேன்மையாலும், வேத வேதாந்த சாஸ்திர ஞானத்தாலும் தெய்வ சித்தியாலும் சிஷ்யர்கள் குலத்தின் நல்வாழ்வு, தெய்வ கடாட்சம், ஆயுள் ஆரோக்கியம், ஆட்சியுரிமை, தொழில் விருத்தி, வம்ச விருத்தி பெருகவும் கற்பு நெறி, தர்மநெறி நிலை பெறவும் அனுதினமும் சிந்தித்து, கற்று, கற்பித்து, ஹோமங்கள், பூஜைகள் செய்துவருபவராவார்.

குழந்தைப்பேறு பெற்ற கோடிக்கணக்கான தாய் தந்தையர் உலகம் முழுதும் இருப்பினும் நம்மை பெற்ற தாய்தந்தையரே நமக்காக வாழ்வர், அவர்களை தொழுது வாழ்தல் பெரும்புண்ணியம். ஆயிரம் தெய்வங்கள் இருப்பினும் குலதெய்வமே ஒரு மனிதனுக்கு முன்னின்று காக்கும். அதுபோல நாம் ஆயிரம் ஞானிகளை பின்பற்றினாலும், பல தலைமுறைகளாக நம்முடைய குலம் செழிக்க வேண்டியே வாழ்ந்து வந்த குலகுருக்களே நமக்கு முதன்மையானவர்களாவர்.

குலகுரு மரபின் தொன்மையை நோக்கினால் இதிஹாச, புராண காலம்தொட்டே இம்மரபு பின்பற்றப்பட்டதை அறியலாம். தேவர்கள், அசுரர்கள் தோன்றிய காலத்திலேயே அவரவர் குலகுருக்கள் தோன்றி தத்தமது சிஷ்யர்களைக் காத்துள்ளனர். தேவர்களுக்கு குரு பிரகஸ்பதியும், அசுரர்களுக்கு குரு சுக்ராச்சாரியாரும் குலகுருவாக இருந்து அவர்கள் சிஷ்யர்கள் மேன்மைக்காக பாடுபட்டதை பாகவதம் உள்ளிட்ட பல்வேறு புராண வரலாறுகள் மூலம் அறியலாம். சூர்ய வம்சத்துக்கு குலகுருவாக வசிஷ்டரும், சந்திர வம்சதிற்கு குலகுருவாக குரு கிருபரும் இருந்துவந்ததை ராமாயணம் மகாபாரதம் வாயிலாக அறியமுடியும்.

அதுபோல, இன்றளவும் தொன்மையும், பாரம்பரியமும் மிகுந்த வம்ச வரலாறுகள் கொண்ட சமூகத்தினருக்கு குலகுரு பாரம்பரியம் இருப்பதை பாரதம் முழுக்கவே பல்வேறு சமூகங்களை உற்று நோக்கும்போது அறிய முடியும்.

கொங்கதேசத்தில் குலகுரு மரபு

     குலகுருக்களின் முக்கியத்துவம் அறிந்த முன்னோர்கள தொன்றுதொட்டு கொங்கதேசத்தில் தத்தமது குலகுருக்களை போற்றி வணங்கி வந்துள்ளனர். கங்கைக்கு மகனாக பிறந்த கங்கா குல வெள்ளாள மக்களின் ஆதி முதல்வரான மரபாளன் என்னும் கங்கதத்தனுக்கு குருவாக போதாயனர் இருந்துள்ள செய்தியை வேளாள புராணம் வாயிலாக அறிகிறோம். கொங்கதேசத்தில் மக்கள் குடியேற்றம் பற்றிய முக்கிய ஆவணமான கொங்கு காணியான பட்டயம் முதற்கொண்டே குலகுருக்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. கொங்கில் மக்கள் குடியேறியபோதே தங்கள் குலகுருக்களுடன் வந்துள்ளனர். கொங்கதேச 18 குடிகளில் ஏறக்குறைய குலகுரு பாரம்பரியம் அனைவருக்குமே இன்றளவும் உள்ளது. 18 குடிகளாவன,

1.கொங்க பிராமணர் (ஸ்மார்த்தர், ஆதிசைவர், கோயில் குருக்கள்)
2.கொங்க வெள்ளாள கவுண்டர்  
3.கொங்க செட்டியார் (வெள்ளாஞ்செட்டி, எண்ணெய்செட்டி & வணிகசெட்டி)
4.கொங்க பண்டாரம் (கோமணாண்டி, உவச்சாண்டி, பூவாண்டி, மணியாண்டி, மடத்தாண்டி போன்ற பிரிவுகள்)
5.கொங்க சேரகுல புலவர் (பட்டன்,புலவன், பண்பாடி, தக்கைகொட்டி, கூத்தாடி)
6.கொங்க கம்மாளர் அதாவது ஆசாரி (விஸ்வகர்மா)
a.கருமான் (கொல்லன்)
b.தச்சன் (மர ஆசாரி)
c.தட்டான் (பொன்னாசாரி, பொற்கொல்லர்)
d.கல்தச்சன் (சிற்பிகள், ஸ்தபதிகள்)
e.கண்ணான் (பாத்திரம்)
7.கொங்க குலாலர் (குயவர், மண்ணுடையார்)
8.கொங்க கைகோளர் (கொங்க முதலியார்)
9.கொங்க நாடார் (சான்றோர் குலம்)
10.கொங்க உப்பிலியர் (கற்பூர செட்டியார்)
11.கொங்க கருணீகர் (கணக்குப்பிள்ளை)
12.கொங்க நாவிதர்
13.கொங்க வண்ணார்
14.கொங்க ஊழியர் (தொண்டர், சிவிகையர்,குறவர்)
15.கொங்க பள்ளர்
16.கொங்க போயர்
17.கொங்க பறையர்
18.கொங்க மாதாரி

கொங்கதேச வரலாற்று ஆவணங்கள் ஏராளமானவற்றில் குலகுருக்கள் பற்றிய அரிய செய்திகள் பரவலாக காணக்கிடைக்கிறது. சிஷ்யர்கள் சிரமமான காலகட்டங்களைச் சந்திக்கையில் உற்ற துணையாக இருந்து தீர்வுகளை உபதேசித்துள்ளனர்.

உதாரணமாக, மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயிலில் கன்னிவாடி நல்லதம்பி கவுண்டர் மூவேந்தர்களுக்கு எல்லை பிரித்துக் கொடுக்கையில் குலகுரு உற்ற மந்திர உபதேசங்கள் செய்து ஆசிர்வதிக்கிறார். நல்லதம்பி கவுண்டர் வெற்றிகரமாக எல்லை பிரித்து தலைய நாட்டின் பட்டக்காரர் பதவியைப் பெறுகிறார்.

தொரவலூரை கைப்பற்ற வேட்டுவர் போர்தொடுத்த போது முகுந்தனூர் செல்லன் கூட்ட செம்பிரிச்சிகவுண்டர், குலகுருவிடம் மந்திர உபதேசம் கற்று மரங்களைப் பிடுங்கித் தாக்கி எதிரிப்படையை அழித்து வெற்றியடைகிறார். அதன் காரணமாக மரம்பிடுங்கிப் பட்டக்காரர் என்று தொரவலூர் பட்டக்காரர் பதவியைப் பெறுகிறார்.

கொங்கு வெள்ளாள கவுண்டரில் முளையாம்பூண்டி காடை கூட்ட செல்லப்ப கவுண்டர் சகோதரர் நால்வர் பொருட்தேவைக்காக தங்கள் நிலத்தை பட்டக்காரர்களிடம் அடமானம் வைத்து, அதை மீட்கவேண்டி பிழைப்புத் தேடி அன்னூர் சென்று அரும்பாடுபட்டு பொருளீட்டுகின்றனர். நிலத்தை மீட்க கடனடைக்க சென்றபோது, பொருளையும், பசுக்களையும் பட்டக்காரர் மற்றும் அவரது மச்சினனான இன்னொரு பட்டக்காரரும் பிடுங்கிக் கொள்கிறார்கள். குலதெய்வ கோயிலில் குலகுரு முன்னின்று பூஜை நடத்தி போர்நடத்த ஆலோசனை தருகிறார். அதன்மூலம் தங்கள் பங்காளிகளை சேர்த்துக் கொண்டு அந்த காடை குல குடியானவர்கள் பட்டககாரர்கள் மீது போர் தொடுத்து தங்கள் நிலத்தை மீட்கிறார்கள்.

கொங்கு முதலியார்கள் வேலூரில் சித்தருக்கு தாங்கள் செய்த தர்மத்தை குலகுரு ஆசியோடு நிறைவேற்றினர்.

கொங்க நாடார்களின் புராண வரலாறு சொல்லும் திருமுருகன்பூண்டி செப்பேடு அவர்கள் சமூகம் பெருகிய போதே சிவவாக்கால் குலகுருவையும் பெற்றதை குறிப்பிடுகிறது. கருமாபுரம் நாடார் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் குருவுக்கு கொடுத்து பிராணதாரை வார்த்ததை குறிப்பிடுகிறது.

ஜாதி ஞாயங்கள் விசாரிக்கவும், ஒருவரை ஜாதியை விட்டு விலக்கவும் குலகுருவுக்கு அதிகாரம் உண்டு.

கொங்கில் பல்வேறு கோயில்களுக்கு தெய்வப்பணி செய்ய ஒவ்வொரு குலத்தின் சார்பில் கோயிலுக்கு குலமாணிக்கி நியமனம் செய்யப்பட்டனர். குலகுருக்கள் ஆசியோடு இறைப்பணி செய்ய  நியமிக்கபட்ட குலமாணிக்கி ஒரு குலத்திற்கு மூத்த பெண் போல கருதப்படுபவர்.

இன்று இயற்கை விவசாயத்துக்கு உயிர்நாடியாக உள்ள நாட்டுப்பசுக்களின் பஞ்சகவ்யம் மற்றும் பஞ்சாமிர்தம் முன்னர் குலகுருக்கள் சஞ்சாரம் செல்லும் ஊர்களில் தயாரித்து சிஷ்யர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

கொங்கில் வெள்ளாளர் குடியமர்ந்த சமயம், சோழன் கரிகாலனுக்கு பிடித்த சித்தபிரம்மை தெளிவிக்க கொங்கதேசத்தில் சிவாலயங்கள் நீர்நிலைகள் கட்டி, காடுகள் அழித்து நாடாகிய போது அங்கிருந்த வனதேவதைகளை சாந்தி செய்ய கோயில்கள், பூஜைகளை செய்து கொங்கதேசம் மக்கள் வாழும் நாடாக மாற குலகுருக்கள் முன்னின்று நடத்திக் கொடுத்தனர்.

கொங்கதேசமானது மலைகளால் சூழப்பட்டு காவிரி நதியின் நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ள பூகோள பகுதியாகும். கொங்கதேசத்தை சுற்றியுள்ள மேற்குதொடர்ச்சி மலைத்தொடர், ஆனைமலை, வெள்ளியங்கிரி மலை, நீலகிரி மலைத்தொடர், பர்கூர் மலைத்தொடர், கொல்லிமலை, சேர்வராயன் மலை, பழனிமலை, வராஹகிரி போன்ற மலைகளில் மழையாலும் அருவிகளாலும் சேகரமாகி வரும் சிற்றோடைகள்; அமராவதி, பவானி, நொய்யல், திருமணிமுத்தாறு, பொன்னியாறு போன்ற சிற்றாறுகள் எல்லாம் இறுதியில் காவிரியில் சங்கமமாகும். மழையாலும், மலைகளாலும், காவிரியாலும் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நீர்ப்பிடிப்பு பகுதியையே கொங்கதேசம் என்கிறோம்.

இந்த கொங்கதேசத்தில் 24 நாடுகள் சிற்றாறுகளைப் பொறுத்து பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு மலை முருகன் கோயில் உண்டு. (உதாரணமாக, காங்கய நாட்டிற்கு சிவன்மலை, வைகாவூர் நாட்டுக்கு பழனிமலை, மேல்கரை பூந்துறை நாட்டுக்கு சென்னிமலை).



1. பூந்துறை நாடு
2. தென்கரைநாடு
3. காங்கய நாடு
4. பொங்கலூர் நாடு
5. ஆறை நாடு
6. வாரக்க நாடு
7. வைகாவூர் நாடு
8. மண நாடு
9. தலைய நாடு
10. தட்டய நாடு
11. பூவாணிய நாடு
12. அரைய நாடு
13. ஒடுவங்க நாடு
14. வடகரை நாடு
15. கிழங்கு நாடு
16. நல்லுருக்காநாடு
17. வாழவந்திநாடு
18. அண்ட நாடு
19. வெங்கால நாடு
20. காவடிக்கா நாடு
21. ஆனைமலை நாடு
22. ராசிபுர நாடு
23. காஞ்சிகோயில்நாடு
24. குறுப்பு நாடு



இந்த நாடுகளைக் காணிகளாக பிரித்து காணிக்கு ஒரு காணியாச்சி காளியம்மன் கோயில், சிவாலயம் மற்றும் பெருமாள் ஆலயம் ஏற்படுத்தியுள்ளனர். காணியாச்சி அம்மன் கோயில் ருத்ரபூமிக்கு அருகேயும், நீர்நிலை அருகிலுமாக இருக்கும். காணிகளை மேலும் கிராமங்களாக பிரித்து ஊருக்கு மாரியம்மன் கோயில், பொட்டுசாமி கோயில், சாவடிகள், ஏரி, குளங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி, கிராம வாஸ்துப்படி ஊரை நிர்மாணிப்பர். கிராம வாஸ்துப்படிக்கு ஆல், அரசு, இச்சி, அத்தி போன்ற மழையை ஈர்க்கக்கூடிய பாலுள்ள மரங்களை நட்டு வைப்பர். இந்த அமைப்புகள் கொங்கதேசம் முழுதும் ஒரே சீராக இருக்கின்றது.


மேலும் ஒவ்வொரு நாட்டுக்கும் பட்டக்காரர், காணிக்கு காணியாளர், ஊருக்கு கொத்துக்காரர், மணியக்காரர் போன்ற பல்வேறு பதவிகளையுருவாக்கி அந்த பதவிகளுக்குரிய தகுதிகள், கடமைகள், ஆச்சாரங்கள் போன்றவற்றை வகுத்து வைத்துள்ளனர். பட்டக்காரர்கள் என்போர் ஒரு நாட்டின் கவுண்டர்களில் வீரம், தர்மம், ஒழுக்கம் போன்றவற்றில் சிறந்தவனாக உள்ளவன் அரசனின் ஆட்சி பிரதிநிதியாக நிர்வகிப்பார். அவர்கள் ஆச்சாரம், தர்மம், கடமை போன்றவை தவறும்போதும், அந்நிய ஆட்சிக்கு துணை போகும் போதும் பதவிநீக்கம் செய்யப்பட்டு வேறொருவர் பட்டக்காரராக நியமிக்கப்படுவர். நிர்வாகத்தில் இதுபோன்ற பதவிகள் பதவிக்குரிய ஒருவருக்கு மட்டுமே அதிகாரம் கொடுக்கும்; அவர்கள் உறவினர்களுக்கு எந்த உரிமைகளையும் தராது. முற்காலங்களில் ஊர், நாடு, கோயில், சமூகம் அனைத்திலும் ஒழுக்கம், தர்மம் மற்றும் பாரம்பரியத்துக்கே முதலிடம் கொடுக்கப் பட்டது. ஒவ்வொரு பட்டக்காரரும் எப்படி நிர்வாகம் செய்யவேண்டும், பின்பற்றவேண்டிய பூஜைகள், ஆச்சாரங்கள் சட்டதிட்டங்கள் என்ன என்று கற்பிக்கப் பட்டிருப்பார்கள். கொங்கு 18 குடிகளுக்குமான சமூக உரிமைகள், கடமைகள், தர்மம், ஒழுக்கம், ஒவ்வொரு குடிகளுக்குமிடையேயான உறவுகள், சமூக சட்டங்கள், எல்லாம் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளன.

கொங்கதேசம் முழுக்கவே கிராமங்கள் தற்சார்புடையனவாக இருந்துள்ளது. மக்கள் யாரும் தங்களது அடிப்படை தேவைகள் எதற்கும் தங்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்லவேண்டிய அவசியமில்லா நிலை இருந்தது. உள்ளூரிலேயே உற்பத்தி, விற்பனை, பயன்பாடு, செலவினம் என்பது அடிப்படை. உற்பத்தி மிகுதியை கிராம சந்தைகளுக்கு முதலிலும் பின்னர் நகர பகுதிகளில் உள்ள கோட்டைகள் அருகே உள்ள பெரும்சந்தைகளுக்கும், பின்னர் பெருவழிகள் என்று சொல்லப்படும் வணிகப் பாதைகள் வழியே கடலோரப் பட்டணங்களுக்கும் (நாகப்பட்டணம், புகார், தூத்துக்குடி போன்றவை) சென்று ஏற்றுமதியாகி வந்தது. பாரதத்தில் அதிக ரோமானிய காசுகள் கிடைக்கும் பூமிகளில் கொங்கதேசமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் வெளிநாட்டு ஆய்வாளர்கள் சொல்லுவதுபோல பாரததேசம் 16 நூற்றாண்டுகள் தொடர்ந்து உலகின் முதல் பொருளாதாரமாக இருந்துள்ளது.

மேற்கண்ட கொங்கதேச்சதேசத்தின், ஊர்-நகர நிர்மானம், நில, நீர், இயற்கை வள, ஆன்மீக, சமூக, சட்ட, நிர்வாக, பொருளாதார அமைப்புகள் கொங்கதேசம் முழுவதும் ஏகமாக, ஒரே சீராக, ஒழுங்காக இருக்க குலகுருக்களின் வழிகாட்டல், மற்றும் ஞான உபதேசங்களே அடிப்படை என்றால் மிகையல்ல. குலகுருக்கள் கிராம நிர்மானம், ஜலாசய சாஸ்திரம், கோ சம்ரக்ஷனம், விருட்ச சாஸ்திரம், கிருஷி சாஸ்திரம், ஜோதிடம், வேத வேதாந்தங்கள், ஸ்மிருதிகள் போன்றவற்றை கற்றுணர்ந்த வல்லவர்களாக விளங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆத்மார்த்த சிவபூஜை- ஆத்மார்த்த பூஜை என்பது சிவலிங்கத்தை இதயத்தில் வரித்து நம் ஆத்மாவாகவே பாவித்து உள்முகமாக நடைபெறுகின்ற வழிபாடாகும். ஆத்மார்த்த பூஜை என்பது இறைவனை உள்முகமாக தியானித்து, அர்ச்சித்து வழிபடுவதாகும். ஆலயங்களில் நடப்பது பரார்த்த பூஜை எனப்படும் வெளிமுகமாக இறைவனை பூஜித்து மந்திரங்கள் சொல்லி அர்ச்சிப்பதாகும். ஆத்மார்த்த பூஜை மிகச் சிறந்த ஆன்ம வலிமைதரக்கூடிய வழிபாட்டு முறையாகும். சிஷ்யர்கள் குலவம்ச நலனுக்காக குலகுருக்கள் அன்றாடம் தவறாது ஆத்மார்த்த பூஜை செய்வார்கள். இதன்மூலம், அன்றாடம் நாம் அறிந்தும் அறியாமலும் செய்கின்றன பல பாபங்கள் சிவார்ப்பணம் செய்யப்பட்டு விமோசனம் கிட்டுகிறது. அன்றாடம் சிவப்பிரசாதம் குளம் முழுமைக்கும் குலகுரு வாயிலாக கிட்டுகிறது. இதனால்தான் வருஷமொரு முறையேனும், நம்போருட்டு ஆத்மார்த்த பூஜை செய்யும் குலகுருவை தரிசித்து ஆசி பெறுதல் அவசியம் என்பதாகும். இந்த ஆத்மார்த்த பூஜைகள் நடைபெறாவிட்டால் பாவங்கள் தேங்கிக் குவிந்து குலவிருத்தியை பாதிக்கும்.

மடங்களைப் பொறுத்து ஒருகால பூஜை முதல் ஆறுகால பூஜை வரை நடந்துவருகின்றன. சுமார் இரண்டு தலைமுறைகளாக சிஷ்யர்கள் தங்களை குலகுருக்களை மறந்தபோதிலும்  குலகுரு மடங்களில் இன்றளவும் சிஷ்யர்கள் நலன்வேண்டி ஆத்மார்த்த பூஜைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

சஞ்சாரம்- மடத்தில் அன்றாட பூஜைகள் நடப்பதுமின்றி குலகுருக்கள் கிராமம் கிராமமாக சஞ்சாரம் சென்று ஒரு வாரம் தங்கியிருந்து சிவபூஜைகள், ஆத்மார்த்த பூஜைகள் செய்து, பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம் போன்றவை தயாரித்து பிரசாதங்கள் வழங்கி, வேத, சாஸ்திர, புராண இதிஹாசங்களின் வழியே தர்ம உபதேசங்களையும், உரிய ஆலோசனைகளையும் வழங்குவர். இதனால் சமூகத்தில் நியாயம், தர்மம், கற்புநெறி, மாதா பிதா பக்தி, சொல்வாக்கு தவறாமை, பிறரை வஞ்சிக்காமை போன்ற நற்குணங்கள் மேலோங்கியிருந்தன.

சஞ்சாரம் வரும்போது சிஷ்யர்கள் சஞ்சார காணிக்கை செலுத்துவர். அக்காலத்தில் குலகுருக்கள் வண்டிகட்டி வந்திருந்து பூஜைகள் செய்ததை இன்றளவும் முதியவர்கள் தங்கள் சிறுபிராயத்தில் பார்த்ததை நினைவுகூர்ந்து சொல்வதைக் கேட்கமுடியும். ஒருமுறை சஞ்சாரம் செல்லத் துவங்கினால் மீண்டும் தம்மிடம் திரும்ப குலகுருக்களுக்கு ஒன்றிரண்டு வருஷமே ஆகிவிடும். தங்கள் குடும்பத்தை பிரிந்து கிராமம் கிராமமாக சென்று மக்கள் நலனுக்கு உபதேசங்கள் செய்ததை எண்ணிப்பார்த்தல் வேண்டும்.

சஞ்சாரம் வரும்போது நாட்டுநலன், மக்களின் நிலை, தேவை, நீராதாரங்கள், தானிய இருப்பு, விலைவாசி, சமூக மாற்றங்கள் போன்றவற்றை அனுமானித்து காலத்திற்கு தேவையான அவசியமான நடவடிக்கைகளை நிர்வாகப் பொறுப்பில் உள்ளோருக்கும், தத்தமது சிஷ்யர்களுக்கும் உபதேசிப்பர். இதனால் சமூகத்தின் ஸ்திரத்தன்மை உறுதிப்பட்டது.

வம்சாவழி கணக்கு-குலகுருக்கள் வருஷந்தோறும் சிஷ்யர்களிடம் அவர்களது வம்சாவளிக் கணக்கை குறித்து வருவர்.பல மடங்களில் சிஷ்யர்களின் பலதலைமுறை முன்னோர்களின் பெயர்களைக் காணமுடியும். 1960ல் எழுதப்பட்ட கொங்கு வேளாளர் புராண வரலாறு என்னும் நூலில் அதன் ஆசிரியர் திரு.சின்னுசாமி கவுண்டர் கூறுகிறார், “இக்காலங்களில் நாங்களும் கொங்கு வெள்ளாளர் தான் என்று சிலர் கொங்குநாடு கவுண்டர்களிடம் பொய்யுரைத்துப் பெண் கேட்கிறார்கள். அப்படிக் கேட்பவர்களிடம் உன் குலகுரு மடமெது? வா பார்க்கலாம் என்று விசாரித்தால் அவர்கள் நிரூபிக்க இயலாது திரும்பிச் சென்றுவிடுகிறார்கள் என்று குறிப்பிடுகிறார். இதன்மூலம் குலகுரு மட ரெக்கார்டுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை அறியலாம். வெள்ளையர் காலத்திலும் கூட குலகுரு வம்சாவளி கணக்குகள் அரசாங்கத்து வழக்குகளில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆவணமாகக் கருதப்பட்டது.

கோயில் சீரமைப்பு - கோயில்கள் பழுதடையும்போது அதன் தொன்மை மாறாது, ஆகமங்கள் மீறாது நியமப்படி கும்பாபிஷேகக் கிரியைகளை முன்னின்று குலகுருக்களே நடத்திக் கொடுப்பார். கிராம தேவதைகளை சாந்தி செய்து திருவிழா ஏற்பாடுகளை நடத்த கிராம வாஸ்து சாந்திக்கான அழைப்பு குலகுருக்களுக்கு முறையாக விடுக்கப்படும்.

குலகுருக்களின் இவ்வாறான தர்மப்பணிகளால் மக்கள் பேராசை, ஆணவம் போன்றவற்றில் சிக்காது எளிமையாகவும், ஒழுக்கத்தோடும், இயற்கை வளங்ககளைக் கெடுக்காத இயற்கையோடு இணைந்த சனாதன தர்மம் சார்ந்த பாரம்பரிய வாழ்க்கை வாழ்ந்தனர். எளிமை, ஆணவமின்மையால் வீட்டு விசேஷங்களிலும், பொதுக் காரியங்களிலும் அறம் முன்னிலைப்படுத்தப்பட்டது. தேவையற்ற செலவுகளின்றி, போட்டி பொறாமையோ அரிதாகிப் போனது. மனித உறவுகளுக்குள் நல்லிணக்கமும், பண்பும்பாசமும் பெரிதாக இருந்தது. தேவைகள் நிறைவேறி மக்கள் தங்களவில் மனநிறைவான வாழ்க்கை வாழ்ந்ததால் தேவையற்ற புரட்சிகள் இன்றி சமூகம் நிலையான ஆட்சிக்கும் வளரும் பொருளாதாரத்திற்கும்  அடிகோலியது.

சமூகத்தை இத்தகைய நல்வாழ்விற்கு கண்ணுக்குத் தெரியாத நரம்பு மண்டலமாக குலகுருக்கள் அரும்பெரும் பணிகள் செய்தமையால் முன்னோர்கள் குலகுருக்களை தெய்வமாக போற்றிப் வணங்கினர். தங்கள் உடல், பொருள், ஆவியை குருவுக்கு தத்தம் பண்ணிக் கொடுத்தனர். குலகுருவிற்கு தண்டனை கொடுக்கும் அதிகாரத்தையும், தங்கள் குளத்தில் ஏதேனும் குடும்பம் வாரிசின்றி போனால் அந்த சொத்தை மடத்திற்கு சேர்ப்பிப்பதாகவும் சாசனம் எழுதிக் கொடுத்தனர் என்றால் எந்த அளவு குலகுருக்கள் சமூகத்தின் நலத்திற்கு முக்கியமானவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.


மங்கள வாழ்த்து- கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் கல்யாணத்தில் பாடப்படும் மங்கள வாழ்த்திலும் கூட கல்யாணம் உறுதி செய்யப்படும் போது குருவுக்கு தகவல் தெரிவிப்பதை “வேதியன் பக்கம் விரைவுடன் சென்று என்ற வரிமூலமும்; நம் கல்யாணத்தில் கைகோர்வை சடங்கின்பின் குலகுரு வேதம் சொல்லி வாழ்த்துவதை “மறையோர் வேதம் சொல்ல மற்றவர் வாழ்த்துக் கூற போன்ற வரிகளால் அறியலாம். 

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates