Trending

Thursday 2 March 2017

விளக்கெண்ணெய்

தேங்கெண்ணெய் தாய்ப்பாலுக்கு நிகர் - நவீன அறிஞர்கள் 
விளக்கெண்ணெய் தாய்க்கு நிகர் - அகத்தியர்

ஆமணக்கு, கொட்டமுத்து போன்ற பெயர்களால் அழைக்கப்படும் புஞ்சை பயிரான, எண்ணெய் வித்து  நமது மண்ணின் மரபிலும் மருத்துவத்திலும் தனியிடம் பெற்றது. விளக்கெண்ணெய் என்று திட்டும்படி நையாண்டி காட்சிகளில் பயன்படுத்தி சினிமாவாலும், செயற்கை மருத்துவர்களாலும் நாம் புறக்கணித்துவிட்ட விளக்கெண்ணெய் பற்றி விரிவாகக் காண்போம்.


கொட்டமுத்து ஒரு மானாவரி பயிர். இதற்கென தனி விவசாயம் தேவையில்லை. ஊடுபயிராகவும், மற்ற மானாவரி பயிர்கள் வரப்பிலும் வைத்தாலே வந்துவிடும். மற்ற பயிர்களுக்கு பூச்சி-நோய் தாக்காத பாதுகாப்பையும் தரும். கொட்டமுத்தின் எண்ணெய் தான் விளக்கெண்ணெய். மற்ற எல்லா எண்ணெய்களைக் காட்டிலும் அடர்த்தியும், வழவழப்பும் அதிகமுள்ள எண்ணெய்.

Image result for விளக்கெண்ணெய்

அக்காலத்தில் பந்தத்திற்கு எரிக்க விளக்கெண்ணெய் பயன்படுத்தியுள்ளார்கள். கோட்டை காவலர்க்கு விளக்கெண்ணெய் கொடுப்பது பற்றிய கல்வெட்டு செய்தி கூட உண்டு. 

வெள்ளாமை எடுத்தபின் புதிதாக ஆட்டிய விளக்கெண்ணெய்யில் குலதெய்வத்துக்கு சென்று விளக்கிட்டு வணங்கி வருவது கொங்கு கவுண்டர்களின் மரபு. அது இன்று அருகிவிட்டது. விளக்கெண்ணெய்யில் விளக்கேற்ற குலதெய்வ அருள் சித்திக்கும் என்பது மரபு. கிராமங்களில் சுவாமிக்கு எண்ணெய்காப்பிட விளக்கெண்ணெய் பயன்படுத்தியுள்ளார்கள். கோயில் விளக்குகளும் விளக்கெண்ணெய் கொண்டு ஏற்றியிருக்கிறார்கள். வீட்டிலும் விளக்கேற்ற விளக்கெண்ணெய் உத்தமமான எண்ணெயாகும். சிவராத்திரி முதற்கால பூஜையில் சோமாஸ்கந்த மூர்த்திக்கு விளக்கெண்ணெய் தீபமேற்றுவர். மருத்துவக்கடவுளான தன்வந்திரிக்கு கொடிய நோய்களில் இருந்து விடுபட பிரார்திப்போர், விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவர். ஐந்து கூட்டு எண்ணெய் என்பது பசுநெய், விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பெண்ணெய் கலந்த கலவையாகும். திருக்கருகாவூர் ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை ஆலயத்தில் சுகப்பிரசவம் நடக்க விளக்கெண்ணெய் அம்பாள பாதத்தில் வைத்து மந்திரித்து வழங்கப்படுகிறது. பிரசவ காலத்தில் அந்த எண்ணெய்யை அடிவயிற்றில் தடவ எந்த பிரச்னையும் இன்றி பிரசவம் நடக்கும்.


Related image

பண்டிகைகளில் நிகழும் விளையாட்டில் வழுக்கு மரத்திற்கு விளக்கெண்ணெய் பூச்சுதான். அரசர்கள் கொடுக்கும் தண்டனைகளில் கொடுமையானதான கழுவில் ஏற்றும் தண்டனைக்கு கூரியதாக சீவி செதுக்கப்பட்ட மரத்தில் விளக்கெண்ணெய் பூசி, குற்றவாளியின் ஆசணவாய் மரத்தில் குத்தி இறக்கப்படுவார். வழவழப்பினால் குரவாளி உடல் எடை கீழிழுக்க சிறிது சிறிதாக குற்றவாளி உள்ளுறுப்புகள் குத்தி கிழிக்கப்பட்டு சாவார்.

Related image

Image result for கழுமரம்


விளக்கெண்ணெய் தான் நம் மக்களின் அந்தக்கால கிரீஸ். வைக்கப்பில் எரித்து வரும் கரிச்சாம்பலில் விளக்கெண்ணெய் குழைத்து வண்டிச்சக்கரத்தில் பூசிவிடுவார்கள். அல்லது கொட்டமுத்துக்களை அப்படியே கொஞ்சம் கொட்டி உள்ளே போட்டுவிட்டால் போதும். "Castrol" என்ற கிரீஸ்-என்ஜின் ஆயில் கம்பெனி வெள்ளையனால் துவங்கப்பட்டது. அதன் பேர் காரணமே விளக்கெண்ணெய்யில் இருந்து வந்ததுதான்.

Related image

சமையலில் முன்பிருந்த அளவு விளக்கெண்ணெய் பயன்பாடு இன்றில்லை. தாளிப்பதற்கு விளக்கெண்ணெய் பயன்படுத்துவார்கள். தோசை சுட விளக்கெண்ணெய் பயன்படுத்துவார்கள். விளக்கெண்ணெயில் சுட்ட கல் தோசையின் சுவையே தனி. இன்றும் பருப்பு வேக வைக்கும்போது தண்ணீரோடு விளக்கெண்ணெய் விட்டு வேக வைப்பார்கள். உடலுக்கு தேவையான சத்துக்களைத் தருவதில் நெய்யுக்கும், நல்லெண்ணெய்க்கும் , கடலை எண்ணெய்க்கும் எவ்விதத்திலும் குறைந்ததில்லை விளக்கெண்ணெய். சுழற்சி முறையில் சமையல்க்கு விளக்கெண்ணெய் பயன்பாட்டையும் அதிகரிப்பது மிகவும் நல்லது.

பருவமடையாமல் ரொம்பநாளாக இருந்தால் அவளை இருசி என்பார்கள். அந்த பெண்ணை பருவமடையச்செய்ய முதல்தர சிகிச்சை மருந்து விளக்கெண்ணெய் தான். பருவமடைந்த பின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடி வயிற்றுவலிக்கு விளக்கெண்ணெய் பூச்சும் சீரக கருப்பட்டி வெந்நீரும் தான் முதல் சிகிச்சை. கல்யாணம் ஆனதும் சம்சார உறவுகளில் விளக்கெண்ணெய் பயன்பாடு உண்டு. கருத்தரிக்காவிட்டால் மேற்கொள்ளப்படும் ஆண்-பெண் இருபாலர் சிகிச்சையிலும் விளக்கெண்ணெய் உண்டு.  

Image may contain: text

Image may contain: text and food
Image may contain: text
Image may contain: text

Image may contain: 1 person, text

நாயக்கர் சமூகத்தில் ஒரு வித்தியாசமான வழக்கத்தை கூறுவார்கள். கல்யாணமான மணமக்கள் மாப்பிள்ளை விருந்து என்று சுமார் மூன்று மாசம் மாமனார் ஊரில் தங்குவார்களாம். மாமனார் ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் விருந்து நடக்குமாம். ஒருநாள் விட்டு ஒருநாள் விளக்கெண்ணெய் தேய்த்து மாப்பிள்ளைக்கு நீராட்டி கோழிக் குழம்பு வைத்துப போடுவார்களாம். மூன்று மாதத்தில் நோஞ்சான் மாப்பிள்ளையாக இருந்தாலும் நன்கு தேற்றிவிடுவார்களாம். அப்படி விருந்துகள் முடிந்து சொந்த ஊர் செல்லும் மாப்பிள்ளை இளவட்டக்கல்லை தூக்கி போட மச்சினன்மார் அழைப்பார்களாம். அப்படி தூக்கிப் போட்டுவிட்டால் வெற்றிலை பாக்கோடு சிறு வெள்ளிப்பணமும அழைக்கப்படுவதுண்டு.

கொங்கு வெள்ளாள கவுண்டர் சமுதாயத்திலும் மாப்பிள்ளைக்கு பெண் வீட்டு குடிமகனைக் கொண்டு எண்ணெய்த்தேய்ப்பு நடைபெறுவது உண்டு. நம்மவர் நல்லெண்ணெய் தான் பயன்படுத்துகிறார்கள்.

பெண் கருத்தரித்து விட்டாலே ஒரு மூட்டை கொட்டமுத்தை கொண்டு சென்று எண்ணெய் எடுத்து காய்ச்சி தயாராக வைத்துவிடுவார்கள். கருத்தரிப்பு முதல் குழந்தை வளரும் வரை தாயைப் போலவே நம்மைக் காப்பது விளக்கெண்ணெய் தான். பிரசவம் எளிதாக நடக்கவும், அடிவயிற்று வலியைக் குறைக்கவும பயன்படும். பிரசவத்தால் ஏற்படும் அடிவயிற்று தழும்புகள் மறையவும் விளக்கெண்ணெய் தேய்ப்பார்கள். தாய்ப்பால் ஊறவும் ஆமணக்கு இலை வைத்தியம் இன்றளவும் பின்பற்றப்படுகிறது.

பிறந்துவிட்டாலே அந்த குழந்தை முதல் ஆறு மாதங்கள் விளக்கெண்ணெயின் பாதுகாப்பில்தான் இருக்கும். சதாசர்வ காலமும் விளக்கெண்ணெய்ப பூச்சொடு இருக்கும். பத்து மாதங்கள் கருவறையில் நீரில் மிதந்த குழந்தை உடலுக்கு இந்த எண்ணெய் பூச்சு நல்ல சுகம் தரும். தனால்தான் அக்காலத்தில் எண்ணெய்க் குழந்தை என்றால் மிக இளம் குழந்தை என்று அர்த்தம் (இன்று கைக்குழந்தை என்கிறோம்). பச்சிளம் தாய்மார்கள் குழந்தையோடு வெளியே செல்லும்போது வேப்பிலை,கரித்துண்டு, இரும்பு போன்றவற்றை எடுத்துச் செல்ல கூறுவதும் இந்த எண்ணெய் வாசத்துக்கு கருப்பு சக்திகள் ஈர்க்கப்படும் என்பதால் தான்.

மேலும் குழந்தை பிறந்து சில மாதங்களுக்கு ஏன் வருஷம் வரையிலும் கூட விடியற்காலை விளக்கெண்ணெயில் தாய்ப்பால் விட்டு குழப்பி குழந்தைக்கு வார்ப்பார்கள். காலை நேரம் குழந்தை குடல் நன்கு சுத்தமாகி நன்றாக பால்-உணவு எல்லாம் எடுக்கும். குழந்தை நன்றாக ஊரும் (பெருக்கும்), அதனால் இந்த வழக்கத்துக்கு ஊரெண்ணெய் கொடுப்பது என்று பேர்.

குழந்தைகள் எப்போதும் உச்சிக்கு விளக்கெண்ணெய் இல்லாமல் விடவே மாட்டார்கள். வளர வளர ஆறு மாதத்துக்கு ஒருதரமேனும் விளக்கெண்ணெய் குடிக்கச் செய்து பேதி உண்டாக்கி குடல் சுத்தமும் அதன்மூலம் உடல்நலமும் பேணுவது நம் மரபு. மலச்சிக்கல் கண்டால் வாழைப்பழத்தில் விளக்கெண்ணெய் தொட்டு உண்பது வழக்கம். மலம கழியாமல் குழந்தைகள் அவதிப்பட்டால் வெற்றிலைக் காம்பில் விளக்கெண்ணெய் தொட்டு ஆசன வாயில் விட  மலம இளகி வெளியேறும்.

குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சூடு பிடித்தால் தொப்புளைச் சுற்றி விளக்கெண்ணெய் வைத்து விடுவது மரபு. உடலை உடனே குளிரச் செய்து விடும் சக்தி விளக்கெண்ணெய்க்கு உண்டு. கண்ணில் இருக்கும் அழுக்குகளை எடுக்கவும், கண்ணைத் தெளிவாக்கவும், கண்களில் விளக்கெண்ணெய் ஒரு சொட்டு விடுவது உண்டு.

முடி கொட்டுவதைத் தடுக்கவும், முடி கருக்கவும், தலையில் குளுமை பெறவும் நம் முன்னோர்கள் தலைக்கு விளக்கெண்ணெய்தான் அதிகமாகப் பயன்படுத்தி வந்தனர். எண்பது வயதைத் தாண்டியும் முடி நரைக்காமல் இருக்கும் நடிகர் இதற்கு காரணம் விளக்கெண்ணெய் என்றது நினைவிருக்கும்.

வாரம்தோறும் இருமுறை எண்ணெய்தேய்த்து குளிப்பது நம் மரபு. அதில் விளக்கெண்ணெய் பயன்பாடும் உண்டு. ஆனால் பலருக்கும் விளக்கெண்ணெய் குளிர்ச்சி அதிகமாக போவதால் ஒத்துப் போகாமையால் அது பயன்படுத்தப்படுவதில்லை.

தீக்காயங்கள் ஏற்பட்டாலும் உடனடி சிகிச்சைக்கும் சரி, அதன் தழும்புகள் மறையவும் சரி, விளக்கெண்ணெய் அற்புதமான மருந்தாகும். வயதான காலத்தில் ஏற்படும் மூட்டுவலி, இடுப்பு வலி அனைத்துக்கும் விளக்கெண்ணெய் நல்ல மருந்து. குதிகால் வெடிப்பு சரியாகவும், நகங்களில் உள்ள நோய்கள நீங்கவும் விளக்கெண்ணெய் உதவும். 

பல தைல மருந்துகளின் அடிப்படையாக இருப்பதே  விளக்கெண்ணெய் தான்.

வயதுமுதிர்ந்து கட்டிலில் படுத்த படுக்கையாகிப் போனால் கட்டில் புண் ஏற்படும். அதற்குக் குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, புண்களில் வைக்க ஆறும். ஒரு மனிதன் இறந்தபின்னர். இறுதி சாங்கியத்தில் குளிப்பாட்டும்போதும் விளக்கெண்ணெய் வைத்துக் குளிப்பாட்டுவார்கள். 

ஒரு காலத்தில் பிராஞ்ச் ஆயில் பிராஞ்ச் ஆயில் என்று கூவிக்கூவி எல்லா வியாதிக்கும், பிரச்சனைக்கும் தீர்வு என்று விற்பனை செய்யப்பட எண்ணெய் அடிப்படையில் விளக்கெண்ணெய் தான். 

Image result for franch oil

உச்சிமுதல் பாதம் வரை, ஜனனம் முதல் மரணம் வரை இவ்வளவு பயன்கள் மிக்க விளக்கெண்ணெய் மருத்துவத்துக்கும் பிள்ளைப்பேற்றுக்கும் பயன்படுத்துகையில் முறையாகத் தயாரித்து சுத்தி செய்து பயன்படுத்த வேண்டும். விளக்கெண்ணெய் சுத்தி செய்வது பற்றி சித்தர் ராமதேவர் குறிப்பளித்துள்ளார்.

விளக்கெண்ணெய் சுத்தி – இராமதேவர் சித்தர்
பிள்ளைமக னிளையோனை முத்தைச்சீவிப்
பொத்துமே பேராகப் பதக்குநீரை
உள்ளபடி ஊத்தியதில் வெடிமுத்திட்டு
ஊறியதை யவித்தெடுத்து உலர்த்திக்கொண்டு
துள்ளியிடி முன்னீரிற் கரைத்துக்காயச்சு
துடிபெறவே யெண்ணெய்கக்கும் யிருத்துக்கொள்ளு
கள்ளமற யெண்ணெய்தான் சுத்தியாச்சு
கருத்துகந்து யாகோபு சொன்னார்தாமே – வைத்திய சிந்தாமணி – 700

இளநீரைச் சீவி ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொட்டை முத்துப் போட்டு ஊறவைத்து வேக வைத்து பின்னர் உலர்த்தி எடுத்துக்கொண்டு நன்றாக இடித்து மறுபடியும் இளநீர் விட்டுக் கரைத்து அடுப்பில் விட்டு காயச்சவேண்டுமாம்.அப்படி காயச்ச எண்ணெய் கக்கும் என்கிறார். இந்த எண்ணெயை இருத்து எடுத்துக் கொள்ளவும். இது சுத்தி செய்த எண்ணெயாகும்.


ஏரண்டகர் என்று ஒரு ரிஷிக்குப் பெயர். ''ஏரண்டம்''என்றால் ஆமணக்கு. ஆமணக்குக் கொட்டையிலிருந்துதான் விளக்கெண்ணெய் எடுப்பது. இந்த ரிஷியின் பெயருக்கு ''விளக்கெண்ணெய் சாமியார்''என்று அர்த்தம். கேலிப்பெயர் மாதிரி த்வனிக்கிறது. மஹான்கள் தங்களுக்கு ஊரும் பெயரும் சொல்லிக்கொள்ள மாட்டார்கள். அநாமதேயமாகக் கிடப்பார்கள், திரிவார்கள். ஜனங்கள் அவர்களைப் போற்றிப் பட்டம் கொடுத்தாலும் சரி, தூற்றிப் பரிஹாஸப் பேர் வைத்தாலும் சரி, இரண்டும் அவர்களுககு ஒன்றுதான்.

ஏரண்டகருக்கு அப்பா, அம்மா வைத்தபெயரென்னவோ யாருக்கும் தெரியாது. ஏரண்டகர் என்பது ஜனங்களாக வைத்த பெயர்தான். அதற்குக் காரணம் உண்டு. கும்பகோணத்துக்கு மேற்கே இரண்டு மைலில், ஸ்வாமிமலைக்குப் போகிற வழியில் கொட்டையூர் என்று ஒரு ஸ்தலம் இருக்கிறது. கொட்டையூர் என்று ஏன் பேர்?எத்தனையோ கொட்டைகள் இருகின்றன. இருந்தாலும் கொட்டை என்று இரண்டுதான் முக்கியமாக சொல்லப்படுகின்றன. ஒன்று ஆத்மார்த்தமானது - ருத்ராக்ஷத்தைக் கொட்டை என்றே சொலவார்கள். சிவ தீ¬க்ஷ செய்து கெண்டு ருத்ராக்ஷம் போட்டுக் கொண்டிருப்பவர்களைக் 'கொட்டை கட்டி'என்பார்கள். இந்தக் கொட்டை, மனஸில் சேருகிற அழுக்குகளை எடுப்பது.

இன்னொரு கொட்டை, வயிற்றில் சேருகிற அழுக்குகளை, கெடுதல்களை எடுக்கிற ஆமணக்குக் கொட்டை. முத்துக்கொட்டை, கொட்டைமுத்து என்றும் சொல்வார்கள். அதை ஆட்டித்தான் விளக்கெண்ணெய் எடுப்பது. வயிற்று அடைசலைப் போக்குவதோடு இன்னும் பல தினுசிலும் தேஹாரோக்யத்துக்குப் ப்ரயோஜனப்படுவது. வயிறு லேசாகி, தேஹம் ஆரோக்கியமாக இருந்தால்தான மனஸும் லேசாகி ஈச்வரபரமாக நிற்கும். ஆனதால் ஆமணக்கு ஆத்மார்த்தமாகவும் நல்லது செய்வதே. ருசியும் வாஸனையும் ஸஹிக்காவிட்டாலும் ''நல்ல ருசி, நல்ல வாசனை''என்று நாம் தின்றதுகளால் ஸங்கடம் உண்டாகும்போது உதவுவது ஆமணக்குத்தான்.

லோகத்தில் அடைகிற இந்திரிய ருசிகளும், விஷய வாஸனையும்தான் ஜனங்களுக்கு இஷ்டமாயிருக்கின்றன. இந்த வழியிலேயே போய் ஜனங்கள் பாபத்தையும் துக்கத்தையும் பெருக்கிக் கொள்ளும்போது மஹான்கள் அவர்களை ரக்ஷிக்க உபதேசம் பண்ணுகிறார்கள். அந்த உபதேசம் விளககெண்ணெய்யாகத்தான் தோன்றும். ஆனால் அதுதான் உண்மையில் விளக்கும் எண்ணெய். 'பல் விளக்குவது', 'பாத்திரம் விளக்குவது'என்று ஸாதாரண ஜனங்கள் சொல்லுவதில் நிரம்ப அர்த்தம் இருக்கிறது. ஒன்றிலே இருக்கிற அழுக்கைத் தேய்த்துப் போக்கி விட்டால் அது சுத்தமாகி, விளக்கம் பெற்றுவிடுகிறது என்பதைத்தான் இப்படிச் சொல்கிறார்கள். வயிற்றில் இருக்கிற அழுக்குகளை அலசிப் போக்கி சுத்தமாக்கி வைப்பதே விளக்கெண்ணெய். மஹான்களின் உபதேசம் மனஸில் உள்ள அழுக்குகளை தேய்த்து அலம்பி விளக்கி வைத்து ஞான விளக்கை ஏற்றி வைப்பது.

கொட்டையூர் என்று சொன்னேனே, அது ரொம்பவும் பூர்வ காலத்தில் ஊராகவே இல்லாமல் ஆமணக்கங் காடாகத்தான் இருந்ததாம். ஏதோ ஒரு ஸந்தர்ப்பத்தில் அங்கே ஒரு கொட்டைமுத்துச் செடியின் கீழ் பரமேச்வரன் லிங்கமாக ஆவிர்பவித்தார். அப்புறம் காடு ஊராயிற்று. புண்ய ஸ்தலமாயிற்று. ஆமணக்கின் கீழ் இருந்து ஸ்வாமி வந்ததால் அதற்கு கொட்டையூர் என்றே பெயர் ஏற்பட்டது. இப்போதும் அங்கே ஸ்தல விருக்ஷம் ஆமணக்குத்தான்.
Image result for கொட்டையூர்
இந்த ஊரில்தான் அந்த ரிஷி பல காலமாகத் தபஸ் பண்ணிக்கொண்டிருந்தார். அதனால் 'கொட்டையூர்க்காரர் என்றே அர்த்தம் தருகிற 'ஏரண்டகர்'என்ற பெயரை அவருக்கு ஜனங்கள் வைத்து விட்டார்கள். பிற்காலத்தில் அந்த பெயர் அவருக்கு இன்னொரு விதத்திலும் பொருந்திவிட்டது. ஆமணக்கு எப்படி தன்னையே பிழிந்து கொண்டு எண்ணெய்யாகி ஜனங்களுக்கு உபகரிக்கிறதோ அப்படித் தன்னையே லோகோபகாரமாக இந்த ஏரண்டக ரிஷியும் தியாகம் செய்துகொண்டார். அந்தக் கதையைச் சொல்லத்தான் ஆரம்பித்தேன். உயிர்த் தியாகிகள், Martyrs என்று ஏதேதோ சொல்கிறார்களே, அந்தத் தத்வம் ஸமீப காலத்து தேச பக்தியில் தான் தோன்றியதென்றில்லை;ததீசியிலிருந்து எத்தனையோ மஹரிஷிகள்கூட ஆதியிலிருந்து ஜனஸமூகத்தின் க்ஷேமத்துக்காக உயிரையே கொடுத்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் காட்ட நினைத்துத்தான் ஏரண்டகர் கதை ஆரம்பித்தேன்.


சித்த மருத்துவர் கு.சிவராமன் விளக்கெண்ணெய் பற்றி நாட்டு மருந்துக்கடை தொடரில் எழுதியது..

‘‘அவன் சரியான விளக்கெண்ணெய்...” என இனி யாராவது திட்டினால், கைகுலுக்கி, பூச்செண்டு கொடுங்கள். விளக்கெண்ணெய் அவ்வளவு விசேஷமானது. விளக்கெண்ணெய், ஆமணக்கின் குருதி. ஆமணக்குச் செடி மண்ணின் நுட்பமானக் கூறுகளை உறிஞ்சி, உழைத்துச் சேமித்த நுண்மருந்துகள்தாம் விளக்கெண்ணெயில் கொட்டிக்கிடக்கின்றன. இந்த இதழ் ‘நாட்டு மருந்துக்கடை’யின் நலப்பொக்கிஷம் ஆமணக்கு விதையும் விளக்கெண்ணெயும்தான்.

ஆமணக்கின் இலை, விதை, எண்ணெய் என அனைத்தும் மருத்துவக் குணம் நிரம்பியவை. இதன் இலை, வாத நோயாளிகளுக்குச் சிறப்பு மருந்து. ஆமணக்கு இலையை ஆமணக்கு எண்ணெயிலேயே லேசாக வதக்கி, மூட்டுகளின் வீக்கம், வலிக்கு ஒத்தடம் இட்டால் வலி நீங்கும், வீக்கம் வடியும்.

பிரசவித்த பெண்ணுக்கு பால் கட்டிக்கொண்டாலோ, சரிவர பால் சுரக்கவில்லை என்றாலோ, இதன் இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, ஒத்தடம் இடலாம். சமீபத்திய ஆய்வுகள் ஆமணக்கு இலை கல்லீரல் நோய்க்கு எதிராகச் செயல்படுவதை உறுதிப்படுத்தியுள்ளன. காமாலை, கல்லீரல் சுருக்க நோய், கல்லீரல் செயல்திறன் குறைவுக்கு ஆமணக்கு இலையின் உலர்ந்த பொடி பயனளிக்கும்.


கீழாநெல்லி இலையுடன் ஆமணக்கு, கொளுஞ்சி இலை, கடுகு, ரோகிணி, கரிசாலையை சேர்த்து, உலர்த்திப் பொடி செய்து, காலை மாலை அரை டீஸ்பூன் அளவு கொடுக்க, காமாலை குணமாகும் என, சித்த மருத்துவ அனுபவங்கள் கூறுகின்றன.

ஆமணக்கு எண்ணெயில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள், வைரஸ்க்கு எதிராக அது செயல்படுவதை உறுதிப்படுத்தி உள்ளனர். ஹெச்.ஐ.வி வைரஸைக்கூட சோதனைக் குழாயில் ஆமணக்கு கட்டுப்படுத்துவதைக் கண்டறிந்து உள்ளனர்.

ஆமணக்கு விதையில் இருந்து மருந்து செய்ய அந்தக் காலத்தில் பருப்பை அரைத்து, அதற்கு நான்கு மடங்கு இளநீர் அல்லது தண்ணீரை விட்டுக் காய்ச்சுவார்கள். இப்போது பிற எண்ணெய்களைப்போல் பிழிந்துதான் விளக்கெண்ணெயும் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெயில் உள்ள ‘ரெய்சின்’ எனும் சத்து பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது.

நோய் குணமாக்கலில் ‘நிணநீர் கழிவு ஓட்டம்’ (Lymphatic drainage) மிகமிக முக்கியமானது. உடலில் இந்த ஓட்டத்தைச் சீராக நடத்தி, எங்கும் வீக்கத்தைக் (Inflammation) கட்டுப்படுத்துவதில் விளக்கெண்ணெய்க்கு நிகர் ஏதும் இல்லை. வெள்ளை அணுக்களை ஊக்குவிக்கும் தன்னிகரற்றச் செயலை இந்த எண்ணெய் செய்கிறது.

மூலிகை மருந்தறிவியலில், அமெரிக்காவின் எஃப்.டி.ஏ அங்கீகாரம் பெறுவது என்பது குதிரைக் கொம்பு. அந்த பெரும் அமைப்பே விளக்கெண்ணெய் பொதுவாகப் பாதுகாப்பானது (GRAS-Grossly recognized as Safe) எனச் சான்று தந்துள்ளது.

தென் தமிழகத்தில் பருப்பு குழைவாக வர அதனுடன், இரு துளி விளக்கெண்ணெயை விட்டு வேகவிடுவது மரபு. ஆரோக்கியம் தரக்கூடிய உணவு எனப்படும் ஒரு ஃபங்ஷனல் ஃபுட் (Functional food). ஆகவே, விளக்கெண்ணெய் நம் மரபில் இருந்து வந்திருக்கின்றது என்பதை இதன் மூலம் உணர முடியும். ‘விரேசனத்தால் வாதம் தாழும்’ என்கிறது சித்த மருத்துவம். நன்கு மலம் கழிந்தால், வாத நோய்களாகிய மூட்டு வலி முதல் ஆஸ்துமா வரை பயன் கிடைக்கும் என்பதுதான் அதன் பொருள்.


பிரசவித்த பெண்களுக்கும் மலம் எளிதில் கழிய, ஆமணக்கு எண்ணெயை 10 - 20 மி.லி வரை உடல் எடை, ஆரோக்கியநிலையைப் பொறுத்து அளவாகக் கொடுக்கலாம். சளி, இருமல், கோழைக்கட்டு உடைய நபருக்கு 20 மி.லி விளக்கெண்ணெய், 10 மி.லி தேன் சேர்த்துக் கலந்து கொடுக்க, மலம் கழிவதுடன், சளி இருமல் நீங்கும். சரியாகப் பசிக்காமல், மந்த வயிற்றுடன் இருப்போருக்கு ஆமணக்கு எண்ணெயை, ஓமத்தீ நீர், அல்லது சுக்குக் கஷாயத்தில் இதேபோல் கலந்து கொடுக்க மந்தம் நீங்கி, பசி உண்டாகும்.

சாப்பிடாத குழந்தை, மந்தம் உள்ள குழந்தை, கணச்சூட்டுடன் மெலிந்திருக்கும் குழந்தை, வாயில் அடிக்கடி வாய்ப்புண்ணுடன் உள்ள குழந்தை என எல்லோருக்கும் விளக்கெண்ணெயில் செய்த மருந்துகளைத்தான் சித்த மருத்துவம் பரிந்துரைக்கின்றது. இருப்பினும், சித்த மருத்துவரை ஆலோசிக்காமல் இந்த எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம். இதன் மலமிளக்கித் தன்மையைச் சீராக அளவறிந்து பயன்படுத்த வேண்டும் என்பதால், சுயவைத்தியம் சரிவராது. விளக்கெண்ணெய், புண்களை ஆற்றவும், பல்வேறு நரம்பு மூட்டு வலிகளுக்கான மூலிகைத் தைலம் காய்ச்சவும் அதன் அடிப்படைத் தைலமாகப் பயன்பட்டுள்ளது.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக இந்தியரிடம் மட்டும் அல்லாது, சீனரிடமும், ரோமானியரிடமும், கிரேக்கரிடமும்கூட விளக்கெண்ணெயின் பயன்பாடு இருந்திருக்கிறது.

மொத்தத்தில், விளக்கெண்ணெய் காலம் காலமாக யாரும் விலக்காத எண்ணெய்.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates