Trending

Wednesday 28 January 2015

கோனாட்டு சோழர் எனும் கொங்கு சோழர்

அறிமுகம் :-

           கி.பி.930  யில் தொடங்கி கி.பி.1305 வரை கிட்டத்தட்ட 375 ஆண்டுகள் தொடர்ந்து கொங்குநாட்டை சுயாட்சியாக தஞ்சை சோழர்களுக்கு கீழ்படியாமல் ஆட்சி செய்தவர்களே இந்த கொங்கு சோழர்கள். அவர்களை பற்றிய ஆய்வே இந்த கட்டுரை.

கொங்கு சோழர்கள் யார் :-

           நாம் அனைவரும் சோழர்கள் என்று கேள்விப்பட்டிருப்போம், பாடபுத்தகத்தில் படித்திருப்போம். அதுமட்டுமில்லாமல் சோழர்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தஞ்சை சோழர்கள் மட்டுமே. ஆனால் இந்த கொங்கு சோழர்களைப் பற்றி இதுவரை கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இவ்வாறு இருக்கும் போது கொங்கு சோழர்களை பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்ற Dr.புவனேஸ்வரி  எழுதிய  ”கொங்குசோழர்” என்னும் புத்தகத்தை எதர்ச்சையாக படிக்க நேர்ந்தது. அந்த புத்தகத்தை படித்தவுடன் இவர்களைப்பற்றி இன்னும் ஆழமான ஆய்வு தேவை என்றும் அத்துடன் அவ்வளவு சிறப்புடன் 700 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆட்சி செய்த அரச பரம்பரை யார்? அவர்கள் எப்படி இருப்பார்கள்? என்ற ஆசை என்னுள் மேலோங்கியது. அந்த எண்ணத்தில் விளைந்ததே இந்த கட்டுரை.



கொடும்பாளூர் இருக்கு வேளிர்:-  

           Dr.புவனேஸ்வரி அவர்கள் எழுதிய கொங்கு சோழர் புத்தகத்திலும் சரி அவர்கள் செய்த PHD ஆய்விலும் சரி கொடும்பாளூர் இருக்குவேளிர்தான் இந்த கொங்கு சோழர்கள் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிருபித்துள்ளார். ஆகையால் நாம் அதை ஆராய வேண்டியதில்லை.

ஆனால் முனைவர் புவனேஸ்வரி இந்த வேளிர்கள் தற்போது என்ன பெயரில், எவ்வாறு, எங்கு இருக்கிறார்கள் என்று ஒரு இடத்தில்கூட அவர்கள் எந்த சிறு குறிப்புகூட தரவில்லை. இந்த எண்ணம் எனக்கு தோன்ற காரணம் அவர்கள் இதை வேண்டுமென்றே மறைத்துள்ளார்கள் என்று அவர் புத்தகத்தை உன்னிப்பாக படிக்கும்போது நமக்கு தெரியும். அதன் காரணத்தை ஆராய்வதை விடுத்து கொங்கு சோழர்கள் யார் என்று அறியவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்குள் இருந்தது. ஆகையால் இதையே என் முதல் ஆய்வாக எடுத்துக்கொண்டேன்.

அப்பொழுது வேளிர் என்றால் என்னவென்று பல வரலாற்று ஆய்வாளர்கள் எழுதிய கருத்துக்களை தேடிப்படிக்க படிக்க எனக்கு ஒரு விசயம் தெளிவானது. அதாவது இன்றைய காலகட்டங்களில் வெள்ளாளர்கள் என்று அழைக்கபட்டவர்களே அன்று வேளிர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்பது திண்ணம். இதை எந்த வரலாற்று ஆசிரியர்களும் மறுக்கமுடியாத அளவுக்கு பல ஆதாரங்கள் நம் வரலாற்றில் கொட்டிக்கிடக்கிறது. எனது சந்தேகம் முழுவதும் முதலில் சோழிய வெள்ளாளர்கள் மேல் இருந்தது. ஆனால் சோழிய வெள்ளாளருக்கு கொங்குநாட்டில் எந்த செல்வாக்கும் இல்லை இங்கு மிகுந்த செல்வாக்கு பெற்றவர்கள் கொங்குவெள்ளாளர்களே ஆனால் எதுவாக இருந்தாலும் எனக்கு வெள்ளாளர்கள் பற்றி அதிகம் தெரியவில்லை.

கொங்கு வெள்ளாளர்:-

           வெள்ளாளர்களை பற்றி எதுவும் தெரியாத காரணத்தினால் முதலில் கொங்கு வெள்ளாளர்களை பற்றி படிக்க தொடங்கினேன். அப்பொழுதுதான் எனக்கு குலம், கோத்திரம் பற்றி ஒரு தெளிவு கிடைத்தது. அதன் பிறகே எனது தேடலில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அதாவது பொதுவாக கோத்திரம் என்று சொல்லுவதைத்தான் வெள்ளாளர்கள் கூட்டம் என்று சொல்லுகிறார்கள். அதாவது கோத்திரம் என்றால் தமிழில் கூட்டம் என்று பொருள். அதன் பிறகு அவர்களின் கூட்டங்களை பற்றி படிக்க தொடங்கினேன். அதற்கு புலவர்.இராசு ஐயாவின் புத்தகங்கள் எனக்கு உதவியாக இருந்தது. அவரின் புத்தகத்தில் இருந்த ஒவ்வொரு கூட்ட பெயர்களையும் மிக உன்னிப்பாக படித்துக்கொண்டு இருந்தேன். அப்பொழுது அந்த பட்டியலில் “சோழர்” என்ற கூட்டபெயர் இருந்தது. அதை படித்தவுடன் அந்த கூட்டத்தின் வரலாற்றை தேடினேன் ஆனால், அந்த கூட்டத்தை பற்றி எந்த வரலாறும் இல்லை. என்ன செய்வது என்று புரியாமல் இருந்த போதுதான் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் புலவர்.இராசு ஐயாவை சந்திக்க நேர்ந்தது.

அப்பொழுது அவர் புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்த “சோழர்” என்னும் கூட்டத்தை சுட்டிக்காட்டி அதுபற்றி வினவினேன். அவர் அதை வாங்கி பார்த்துவிட்டு இந்த கூட்டபெயர் ஒரே ஒரு கல்வெட்டில் மட்டுமே கிடைக்கிறது நடைமுறையில் அந்த பெயர் இல்லை என்று கூறிவிட்டார். அத்துடன் அந்த கல்வெட்டு நம்பியூரில் கிடைக்கிறது என்று கூறினார். அதன் பிறகு அந்த கல்வெட்டை மத்திய தொல்லியல் துறையின் புத்தகத்தில் தேடி கண்டுபிடித்தேன்.
அந்த கல்வெட்டு வீரபாண்டியன் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது. அந்த கல்வெட்டு பொறிக்கப்பட்ட ஆண்டில் கொங்கு சோழன் ஒருவன் ஆட்சியில் இருந்தான் என்றும் அவன் பெயர் தெரியவில்லை என்றும் தொல்லியல் துறையின் அறிக்கையில் இருந்தது.

அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்ட “சோழரில்” என்பது கூட்டப்பெயர் இல்லை அது அந்த பெயர் அறியப்படாத சோழ அரசனின் பெயர்தான் என்று என்னால் ஒரு தெளிவுக்கு வரமுடிந்தது. அதற்கு காரணம் அவன் பெயர் “ராஜராஜன்” என்று அந்த கல்வெட்டில் இருந்தது. இவனுக்கு முன்னமே கொங்கு சோழரில் இரண்டு பேர் “ ராஜராஜன்” என்ற பெயரில் பட்டத்தில் இருந்துள்ளார்கள் என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.

நம்பியூர் கல்வெட்டு
சரி அந்த பெயர் தெரியாத அரசனை கண்டுபிடிப்பது நமது இலக்கு இல்லை அதனால் அவர்கள் யார் என்று மீண்டும் ஆராயத் தொடங்கினேன். அப்பொழுது அதே ஊரில் அதே ஆண்டில் இன்னும் இரண்டு கல்வெட்டுக்கள் என் கண்ணில் தென்பட்டது. ஒன்று “வெள்ளாளரில் மேன்மணியரில்” என்றும், மற்றொன்றில் “வெள்ளாளரில் கழஞ்சியரில்” என்றும் இருந்தது. அதைப்பார்த்தவுடன் எனக்குள் இன்னும் அதிக ஆவல் தொற்றிக்கொண்டது. காரணம் பழனி அருகே இருக்கும் கீரனூரில் “வெள்ளாள கழஞ்சியரில் கொங்கிளகோவன்” என்ற பெயர் குறிக்கப்படுகிறது.

ஆக இந்த கழஞ்சியர் மற்றும் மேன்மணியர்களுக்கு கொங்கு சோழர்களுடன் மிக நெருங்கிய தொடர்பு இருந்தது புலப்பட்டது. ஆகையால் இவர்களின் கூட்டபெயர்களை பற்றி ஆராய்வோம் என்று தேடும்போது இந்த கூட்டங்கள் ”இரட்டை சங்கு பால வெள்ளாளர்” என்று குறிக்கப்பட்டு இருந்தது. அதுதென்ன இரட்டை சங்கு என்று தேடும்போது அது இராஜ குலத்துக்குரிய மரியாதைகளில் ஒன்று என்பதையும் பல வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம் என்று நினைத்துக்கொண்டு “பால வெள்ளாளர்கள்” யார் என்று தேடினேன். இவர்கள் கொங்கு வெள்ளாளர்களின் உட்பிரிவு என்பதால் இவர்களை பற்றி யாருக்கும் தெரியவில்லை. எந்த வரலாற்று ஆசிரியர்களும் இவர்களைப்பற்றி எழுதவில்லை. ஆகையால் இவர்களைப்பற்றி தெரிந்து கொள்ளவதற்கு மிகவும் கடினமாக இருந்தது.

பால வெள்ளாளார்:-
   
                பால வெள்ளாளர் என்பது கொங்கு வெள்ளாளரின் உட்பிரிவு ஆகும். அதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால் அந்த பாலவெள்ளாளரில் இரண்டு உட்பிரிவுகள் உள்ளது.

1). ஒற்றை சங்கு பாலவெள்ளாளர்
2). இரட்டை சங்கு பாலவெள்ளாளர்

என்ற இரண்டு பிரிவினர்களும் மற்ற பிரிவினருடன் மண வினை தொடர்பு வைத்துக்கொள்வதில்லை என்பது இங்கு முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விசயம். அவர்களிடம் கேட்டால் ஜாதி ஒன்றானலும் ஜனம் வேறு என்று முடித்துக்கொள்கிறார்கள். அப்பொழுது பால வெள்ளாளர்களின் குலகுரு “இருகூர் மருதமலை” ஆதினத்தின் மூலம் வெளியிடப்பட்ட ஒரு புத்தகம் எனது கைக்கு கிடைத்தது.

நாம் எதை தேடுகிறோமோ அது நமது கைக்கு தானாக கிடைக்கும் என்பது போல அந்த புத்தகத்தில் எனக்கு மிகபெரிய குறிப்பு கிடைத்தது. அது என்னவென்றால் “ ஆறு நாடு பெரியபட்டம் “சேவூர் பட்டக்காரரான பாலவெள்ளாள பயிசலிய(பைதலை) கோத்திரத்து ஆறுநாட்டார் இம்முடிப்பட்டம் வணங்காமுடி வீர விக்கிரம கரிகால சோழியாண்டாக்கவுண்டர்” வம்சத்தார் சேவூர் சிந்தாமணிப்பாளையம் என்று இருந்தது.

எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது அந்த ஊர் எனக்கு பக்கத்தில் இருக்கும் ஊர். அதே ஆச்சர்யத்துடன் அந்த ஊருக்கு சென்று அங்கு விசாரித்ததில் இந்த ஊரின் பெரிய தலைக்கட்டு “சக்கரை கவுண்டர்” வீடுதான் என்று கூறி எனக்கு வீட்டை காண்பித்தார்கள். சக்கரவர்த்தியின் சுருக்கமே “சக்கரை” என்பது. நம் இலக்கை அடைந்துவிட்டோம் என்று நினைத்துக்கொண்டு அந்த வீட்டிற்கு சென்றேன். மிக சாதரணமாக ஓட்டுவீட்டில் இன்றுவரை விவசாயம் செய்துவரும் குடும்பமாகவே இருந்தது. அங்குதான் எனக்கு சக்கரை கவுண்டர் பேரன் சிவப்பிரகாஷ் அறிமுகம் ஆனார். அவரின் அறிமுகத்திற்கு பிறகு எனது தேடல் நிறைவடைந்தது. காரணம் அவர்கள்தான் கொங்கு சோழர் என்பதற்கு அவரிடம் பல ஆதாரங்கள் இருந்தது. அந்த ஆதாரங்களை ஒவ்வொன்றாக கிழே பார்ப்போம்.

அந்த ஆதாரங்களை பார்க்கும் முன்பு ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன். அதாவது வீர சோழன் என்றும் விக்கிரம சோழன் என்றும் மாறி மாறி பட்டமேற்று கொங்கு நாட்டை ஆண்ட கொங்குசோழர்கள் தங்கள் ஆட்சியை இழந்தபிறகு விஜயநகர பேரரசின் கீழ் சிற்றரசராகளாக இவர்கள் வீர விக்கிரம சோழியாண்டார் என்று பட்டமேற்றுக்கொண்டார்கள். 
============= XXXXXXXXXXX ============

1). சோழன் + ஆண்டார் = சோழனாக ஆண்டாவர் என்பதன் சுருக்கமே சோழியாண்டார் என்று அழைக்கப்படுகிறது. இதனை பழங்கரை மடாதிபதியிடம் இருக்கும் பட்டையத்தின் மூலம் அறியலாம். கீழே உள்ள படத்தில் முதல் பட்டையத்தில் இவர்கள் பெயரை குறிக்கும்போது “ஆறு நாடு பட்டம் சேவையம்பதி கோட்டை பாலமண்டலம் இம்முடிபட்டம் வணங்காமுடி வீர விக்கிரம கரிகால சோழியாண்டார்” என்று தொடங்கும். இதில் சேவையம்பதி கோட்டை என்றால் சேவூருக்கு அதிபதியின் கோட்டை என்று அர்த்தம். சேவூரில் நாணயங்கள் அச்சடிக்கும் தொழிற்சாலை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு நாடு என்பது கோயமுத்துர் பீடபூமி என்று இன்று அழைக்கப்படும் பகுதியே ஆகும்.

கிழே இருக்கும் இரண்டாவது பட்டையத்தில் விஜயநகர அரசர் சோழியாண்டரை பார்த்து “கரிகால சோழ இந்த மடத்தை நீயே தொடர்ந்து தர்மபரிபாலனம் செய்வாய்” என்று கேட்டுக்கொள்கிறார் பின்பு சோழன் சிவபூஜைக்கு தேவையான சங்கு சேவூண்டி போன்ற ஏற்பாடுகளை செய்தார் என்று கூறுகிறது. இதனை தெரிந்து கொள்ள கிழே உள்ள படத்தில் மார்க் செய்த வரிகளை பார்க்கவும்
பழங்கரை மடதிபதியிடம் இருக்கும் பட்டையம்

============= XXXXXXXXXXX ============

2). கிழே இருக்கும் படத்தில் இருப்பது அவினாசி தேவஸ்தானம் மூலம் வெளியிட்ட திருக்கோவில் வரலாறு. அதில் சோழியாண்டரை சிற்றரசன் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
அவினாசி கோவில் வரலாறு

============= XXXXXXXXXXX ============
3). கிழே இருக்கும் படத்தில் இருப்பது சேவூர் செங்குந்தர் சமூகத்தினரிடம் இருக்கும் செப்பு பட்டையம். இந்த பட்டையம் மைசூர் உடையார்கள் ஆட்சிகாலத்தில் எழுதப்பட்டது. இதில் ஆறு நாடு சேவூரில் ஸ்ரீவெங்கராயனார் அரசில் சோழியாண்டார் நீதிசெலுத்துகின்ற நாளில் என்று பட்டையம் தொடங்குகிறது.
முத்துக்குமாரர் செப்பு பட்டையம்

============= XXXXXXXXXXX ============

4). கிழே இருக்கும் பட்டையம் திருமுருகன் பூண்டி கிரைய சாசனம் ஆகும். இந்த பட்டையத்தில் பயிசலிய(பைதலை) கோத்திரத்து சித்திரமேழி துவசம் என்று வருகிறது. துவசம் என்றால் கொடி என்று பொருள் சித்திரமேழி என்றால் ஏர்க்கலப்பை என்று பொருள், ஆக இதன் மூலம் கொங்கு சோழர்களின் கொடி சித்திரமேழி கொடி என்று தெரிந்துகொள்ளமுடிகிறது. அதுமட்டுமில்லாமல் பல வரலாற்று ஆசிரியர்கள் தாராபுரத்தை ஸ்கந்தபுரி என்று எழுதுகிறார்கள் இது முற்றிலும் தவறு இந்த பட்டையத்தில் திருமுருகன்பூண்டியை ஸ்கந்தபுரிபட்டணம் என்று கூறுகிறது.
திருமுருகன்பூண்டி கிரையசாசனம் தொடக்க பகுதி
============= XXXXXXXXXXX ============ 

5). கீழே இருப்பதும் அதே திருமுருகன்பூண்டி கிரைய சாசன செப்பேடுதான். இதில் சேவம்பதிக்கதிபன் சித்திரமேழிதலைவன் பயிசாலிய கோத்திரம் என்று வருகிறது. அதாவது இவர்களை சேவூரின் அதிபதி என்றும் சித்திரமேழி சபையின் தலைவன் என்றும் கூறுகிறது. அதேபோல் சித்திரமேழி சபையின் மெய்கீர்த்தியும் இவர்கள் கொடும்பாளூரில் இருந்து வந்தவர்கள் என்றும் உறுதிப்படுத்துகிறது. இந்த மெய்கீர்த்தி திருப்பூர் அருகே இருக்கும் சர்க்கார் பெரியபாளையம் சுக்கீரீஸ்வரர் கோவில் கல்வெட்டுகளில் கிடைக்கிறது. அத்துடன் சேவூர் அழகர் பெருமாள் கோவில் கல்வெட்டு மற்றும் வாலீஸ்வரர் கோவில் கல்வெட்டிலும் வருடாவருடம் சித்திரை மாதம் இவர்களுக்கு பெரிய நாட்டார் திருவிழா என்ற பெயரில் விழா எடுக்கவேண்டும் என்று கூறுகிறது. 

திருமுருகன்பூண்டி கிரைய சாசனம் முடிவு பகுதி
 ============= XXXXXXXXXXX ============

6). கீழே இருக்கும் பட்டையம் திருமுருகன்பூண்டி கோவில் தலமை அர்ச்சகர் சிவசுப்பிரமணியம் குருக்களிடம் இருக்கும் கொங்கு காணிப்பட்டயம் ஆகும். இந்த பட்டையம் எழுதப்பட்ட முன்னூறு ஆண்டுகள் இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்த பட்டையத்தில் ஆயிரம் வருடத்திற்கு முன்பு நடந்த செய்தியை கூறுகிறார்கள். இதே போல் முன்னூறு வருடத்திற்கு முன் எழுதப்பட்ட சோழன் பூர்வ பட்டையமும் ஆயிரம் வருடத்திற்கு முந்தைய செய்தியைத்தான் கூறுகிறது. ஆக முன்னூறு வருடத்திற்குமுன்பு எதோ தேவை ஏற்பட்டதன் அடிப்படையில் இந்தபட்டையம் எழுதப்பட்டுள்ளது. அதில் வீர விக்கிரம சோழியாணடார் கையொப்பம் இட்டுள்ளார். இதில் குழப்பம் என்னவென்றால் திருமுருகன்பூண்டி கோவில் காசிப கோத்திரத்து சிவபிராமணர்களுக்கு பூர்வீக ஸ்தானிகம் இருந்ததை பல ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. கல்வெட்டும் அதைதான் கூறுகிறது ஆனால் இந்த பட்டையத்தில் மார்கண்டேய கோத்திர சிவபிரமணர்களால் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த கோவிலின் முன்னாள் பூர்வீக ஸ்தானிகர் காசிப கோத்திரத்து சிவபிராமணர் இருகூர் மடாதிபதியிடம் கேட்டதற்கு இவர்களுக்கு இருந்த பூண்டி கோவில் ஸ்தானிகத்தை தனது மாப்பிள்ளைக்கு (மார்கண்டேய கோத்திரம்)  வரதட்சனையாக கொடுத்துவிட்டதாக கூறுகிறார் அதற்கான ஆதாரங்களையும் வைத்துள்ளார். ஆக இந்த பட்டையம் முன்னூறு வருடங்களுக்கும் முன்புதான் எழுதப்பட்டது என்பது உறுதியாகிறது. ஆனால் அதில் கூறப்படும் செய்தி பழைய செய்தி.      
கொங்கு காணிப்பட்டையம்

============= XXXXXXXXXXX ============

7). கிழே இருப்பது அதே கொங்கு காணிபட்டயம்தான். இதில் குலோத்துங்க சோழனை வீர விக்கிரம சோழன் மகன் என்று கூறுகிறது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் வீர சோழன் என்றும் விக்கிரம சோழன் என்று மாறி மாறி பட்டம் கட்டிக்கொண்டு ஆண்டுவந்த கொங்கு சோழர் மரபில் குலோத்துங்கன் இருந்துள்ளான் என்று அறியமுடிகிறது. ஆனால் கல்வெட்டு படி கொங்கு குலோத்துங்கன் இருவர் இருந்துள்ளார்கள் என்பதையும் அறிய முடிகிறது. ஆக கொங்கு நாட்டு கல்வெட்டியில் கூறப்படும் குலோதுங்கனும் கொங்கு சோழர் மரபுதான் என்பதை அறியமுடிகிறது. 
கொங்கு காணிப்பட்டையம்

============= XXXXXXXXXXX ============

8). கிழே இருக்கும் பட்டையம் பொள்ளாச்சி புரவிபாளையம் ஜமீன் கோப்பண்ண மன்றாடியிடம் இருக்கும் அஞ்சு ஜாதி பட்டையம் ஆகும். தற்பொழுது இந்த பட்டையம் சொன்னை கிழ்திசை சுவடிகள் காப்பகத்தில் உள்ளது. இந்த பட்டையத்தில் குலோதுங்க சோழனை கூறும் போது வண்டிசூழ்ந்த ஆறுநாட்டுக்கு ஆதிபத்தியம் பெற்ற குலோதுங்க சோழன் என்று பட்டைய தொடங்கும். இதில் கவனிக்க வேண்டியது இந்த ஆறு நாடு என்பது கோயம்புத்தூர் பீடபூமி என்று ஏற்கனவே கூறியிருந்தேன். இந்த ஆறு நாட்டுக்கு ஆதிபத்தியம் பெற்றவர்கள் வீர விக்கிரம சோழியாண்டார் பரம்பரைதான் என்பது உறுதிபடுத்தப்பட்ட ஒன்று. இந்த பட்டையத்தில் குலோத்துங்க சோழனை ஆறுநாட்டுக்கு அதிபதி என்று கூறுவதிலிருந்தும் வீர விக்கிரம சோழியாண்டாரின் மரபில்தான் குலோத்துங்க சோழன் தோன்றியுள்ளான் என்று உறுதிபடுத்த முடிகிறது. அத்துடன் மேலே இருக்கும் கொங்கு காணிப்பட்டையமும் இதை உறுதிபடுத்துகிறது.
அஞ்சு ஜாதி பட்டையம்

============= XXXXXXXXXXX ============

9). இந்த பட்டையம் இருகூர் மடம் உருவாக்கியதை பற்றி கூறும் பட்டையம். இதில் கரிகால சோழனை வண்டி சூழ்ந்த ஆறுநாட்டுக்கு அதிபதி என்று கூறுகிறது. நாம் ஏற்கனவே மேலே பார்த்தது போல் “ஆறு நாடு” என்பது வீர விக்கிரம சோழியாண்டாருக்கு ஆதிபத்தியம் பெற்றது. ஆகையால் இதில் இருக்கும் கரிகால சோழன் என்பனும் கொங்கு சோழர் மரபில் உதித்தவனே ஆவான். வண்டிசூழ்ந்த என்றால் கோட்டைகள் சூழ்ந்த என்று பொருள்.
இருகூர் பட்டையம்
   
============= XXXXXXXXXXX ============

10). கரிகாலன் யார், சில வரலாற்று ஆசிரியர்கள் தஞ்சை சோழன் என்றும் எழுதுகிறார்கள். ஆனால் உண்மையில் கரிகாலன் என்பது வீரச்சோழனின் விருது பெயரே ஆகும். இதை எளிதாக விளக்கிவிடலாம். அதாவது கோனாட்டில் இருந்து கொங்குநாட்டிற்கு வந்த பிறகு கொங்கு சோழர்கள் ஆட்சியமைத்த முதல் நூற்றாணடு வரை வீரச்சோழனும் சரி விக்கரமசோழனும் சரி தனது பட்டத்துடன் கோனாட்டான் என்ற பெயரை அவர்களின் முந்தைய ஆட்சிபகுதியின் நினைவாக இணைத்துக்கொண்டார்கள். அடுத்த நூற்றாண்டுகளில் வீர சோழன் கோராஜராஜன் என்றும் விக்கிரம சோழன் கோராஜன் என்று இணைத்துக்கொண்டார்கள். கிழே இருக்கும் படத்தில் உள்ள மூன்று கல்வெட்டுகளில் இரண்டு கல்வெட்டுகள் ”கோராஜராஜன் கரிகாலன்” எனறு அரசன் பெயர் குறிக்கப்படுகிறது. மற்றொரு கல்வெட்டில் ”கோராஜராஜன் வீரசோழன்” என்று அரசன் பெயர் குறிக்கப்படுகிறது. இதிலிருந்து வீரசோழனின் விருது பெயரே கரிகால சோழன் என்று அறியலாம். 

கரிகால சோழன் கல்வெட்டு

============= XXXXXXXXXXX ============

11). கிழே இருக்கும் படங்களை பார்க்கவும், திருவாதிரை திருநாள் அன்று ஆறு நாட்டின் தலைமையிடம் சேவூரில்(சேவையம்பதி) சோழர் பரம்பரையை சேர்ந்தவர்களுக்கு பட்டம் கட்டி சுவாமி அம்பாளுக்கு சமரசம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். அப்பொழுது சுவாமி மற்றும் அம்பாளுக்கு சமரசம் ஏற்படாமல் அம்பாள் திருவீதி உலாவை நிறைவு செய்யாமலேயே திருக்கோவிலை வந்தடைந்துவிடுவாள். அதன்பிறகு சோழர் திருக்கோவில் நடையை அடைத்துவிடுவார். சுவாமி திருவீதி உலாவை முடித்துவரும் போது சுவாமி கோவிலுக்குள் நுழைய சோழர் மறுத்துவிடுவார். அதன் பிறகு ஊர் பொதுமக்கள் அனைவரும் சோழரை வாழைப்பட்டை கொண்டு அடிப்பார்கள் அதன் பிறகே சோழர் நடையை திறந்து மீண்டும் சமரசம் செய்து வைப்பார். இந்த நிகழ்வை இன்றும் நீங்கள் சேவூரில் நேரடியாக பார்க்கலாம்.   
சேவூரில் நடக்கும் சிறப்பு

============= XXXXXXXXXXX ============

12). மேற்கண்டவைகளை பற்றி நான் ஆய்வு செய்து சமர்பித்த ஆய்வு கட்டுரைக்கான சான்று. இந்த ஆய்வில் அரசியல் ரீதியான எதிர்ப்பின் காரணமாக எனது ஆய்வின் தலைப்பை இவ்வாறு மற்றி அமைத்து எனது ஆய்வை மேற்கொண்டேன்.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates