Trending

Wednesday 29 July 2015

முளைப்பாரி


முளைப்பாலிகை என்று இலக்கியங்களில் சொல்லப்படும் முளைப்பாரி மிகத் தொன்மையான வழிபாட்டு முறையாகும். சிலப்பதிகாரத்திலும் குறிப்புண்டு. முளைப்பாரி போட்டு வழிபாடு செய்வது குடும்பத்துக்கு செல்வ சுபிட்சம், நோயற்ற வாழ்வு, குழந்தை பாக்கியம்-வம்ச விருத்தி, மழை போன்றவற்றிற்கு அடிகோலும். நவதானியங்களும் செழிப்பதுபோல் எல்லா வளமும் குடும்பத்தில் செழிக்கும், நவகிரகங்களின் அருளும் ப்ரீதியாகும்; தோஷங்கள் நிவர்த்தியாகும். 



முளைப்பாரி இல்லாமல் கிராம தெய்வ வழிபாடு பூர்த்தியாகாது. எல்லா ஊர் மாரியம்மன் கோயில்களிலும் நிச்சயம் முளைப்பாரி வழிபாடு இருக்க வேண்டும். முளைப்பாரி போடாமல் இருந்தால் தெய்வத்தின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். காணியாச்சி கோயில்களிலும், மாரியம்மன் கோயில்களிலும் முன்னர் நடந்திருந்தது தற்போது நின்று போயிருந்தால் அவற்றை மீண்டும் தொடர வைக்க முயற்சிக்க வேண்டும். குடியானவர்கள் ஒழுக்கமும், வளமும் நிறைந்த தர்மவழி வாழ்வுக்கு மழையே பிரதானம் என்பதால் இன்றளவும் கோயில்களில் முளைப்பாரி வழிபாடு தவறாமல் பின்பற்றப்படுகிறது. முளைப்பாரி போடுவதால் நீர்நிலைகளின் மாசு கட்டுப்படும்; நீர்நிலையின் உயிர்ச்சூழல் மேம்படும். அதனால் சத்தான குடிநீர், நோய் எதிர்ப்பாற்றல் உட்பட பல நன்மைகள் விளையும்.




மண் கலயத்தில் மண் நிரப்பி நவதானியங்களை விதைத்து வெயில் படா இடத்தில் வைத்து வளர விட வேண்டும். கம்பம் நட்டு நோம்பி சாட்டிய போது துவங்கினாலே போதும். பொதுவாக நோம்பி முடியும் நாளில் முளைப்பாரி ஏரி குளம் குட்டை போன்ற நீர்நிலைகளுக்கு எடுத்துச் சென்று கரைத்துவிடப்படும். சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் முளைப்பாரி போட்டு வழிபாடு செய்ய தகுதியுடையவர்கள். முளைப்பாரி போடுவதற்கே நல்ல நாள் பார்த்துத்தான் போடுவார்கள். முளைப்பாரி வளர்ந்து வரும் தரத்தை வைத்து அந்த வருஷத்தின் வெள்ளாமை அளவை யூகிப்பது முன்னோர் வழக்கம். முளைப்பாரி வழிபாட்டுக்கு என்றே கும்மிப்பாடல்கள் உண்டு. அவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும். கொங்கதேசத்தில் ஒவ்வொரு ஊரிலும் முளைப்பாரி போடுவதற்கு ஒவ்வொரு வழக்கம், முறைகள், பாடல்கள் உண்டு. எனவே பொதுமைப்படுத்திப் போட்டு அவற்றை அழிக்க வேண்டாம். உங்கள் ஊர் பெரியவர்களிடம் கேட்டால் சொல்வார்கள்.


No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates