Trending

Tuesday 1 December 2015

வள்ளல் சடையப்ப கவுண்டர்

வெள்ளாள குணத்தின் சிகரமாகவும் சிறந்த உதாரணமாகவும் வெள்ளாளர் குலத்தின் மகாமேருவாகவும் இன்றளவும் ஒளிவீசி நம் புகழ் பரப்பிக் கொண்டிருக்கும் தர்மாத்மாவான வள்ளல் சடையப்ப கவுண்டரைப் பற்றிய விரிவான பதிவு. 

வள்ளல் சடையப்ப கவுண்டர் வாழ்ந்த காலத்தைப் பொறுத்து பல்வேறு வெள்ளாள குல பிரிவினரும் அவரை தங்கள் பிரிவினர் என்று கூறுவதுபோல, அவரைக் கொங்கு வெள்ளாள கவுண்டர் என்று கூற தக்க சான்றுகள் ஏராளம் உள்ளன. கொங்கு வேளிர் பெருமக்கள் தொண்டை மண்டலத்திலிருந்தும் சோழ மண்டலத்திலிருந்தும் கொங்கதேசத்திற்கு குடிபுகுந்தவர் என்பது வரலாறு; அவ்வாறு இடப்பெயர்வு ஏற்பட்ட காலத்தே தோன்றியவர்தான் நம் வள்ளல். அதனாலேயே பல பிரிவினருக்கும் உரிமை கொண்டாடும் வாய்ப்பு இயற்கையாகவே ஏற்பட்டுள்ளது; அதனால் ஒரு குறைவுமில்லை. இன்று பல பிரிவாக உள்ள வெள்ளாளர்களுக்கு ஒரு இணைப்புப் பாலமாக இருக்கிறார்.





தோற்றம்-ஊர்-கோத்திரம் 

சடையப்ப வள்ளல் தோன்றியது திருவெண்ணெய்நல்லூர் என்ற புண்ணிய பூமியில். அவரது தந்தையார் சங்கர பூபதி என்றும் ஆயி நயினார் என்றும் காங்கேய பூபதி என்றும் அழைக்கப்பட்டவர். காங்கேயர் என்பது கங்கையின் மைந்தர் என்ற பொருள்படும் விதத்தில் அழைக்கப்பட்ட காரணப்பெயர் (வெள்ளாளர் கங்கை குலத்தவர் என்பதால்). சடையப்ப கவுண்டர் ஆத்திபநல்லூர் காணிக்கு உரிய காணியாளர் என்று கொங்கு மண்டல சதகம் கூறுகிறது. சடையப்ப கவுண்டர் பிறந்தது சாத்தந்தை கூட்டமா, பண்ணை கூட்டமா என்பதில் குழப்பமுண்டு. சாத்தந்தை கோத்திரம் என்று சதகப்பாடல் தெளிவாக கூறுகிறது. அவர் வாழ்ந்த வெண்ணெய்நல்லூர் என்பது பண்ணை நாடு என்றழைக்கப்படுகிறது. அதன்பொருட்டே, அவரை பண்ணைக்கோன் என்றும் பண்ணை குலாதிபன் என்றும் கொங்கு மண்டல சதகத்தில் அழைக்கப்படுகிறார். 

சாத்தந்தை கூட்டமும் பண்ணை கூட்டமும் நீண்ட காலமாக மண உறவு கொண்ட கூட்டங்களாகும். (வெள்ளோடு கனகபுரத்தில் வாழ்ந்த சாத்தந்தை கூட்ட காளிங்கராயர் பண்ணை குலத்தாளி வீட்டில் பெண் கட்டும் போது ஏற்பட்ட அவச்சொல்லை நீக்கவே காளிங்கராயன் வாய்க்காலை வெட்டுகிறார்; மேலும் தங்கள் மாமன் வீட்டு கோயிலான அனுமன்பள்ளியில் இருந்த பெரியம்மன் சிலையை பால்மடையில் நிறுவி அணை உடைப்பை தடுத்தார்). 



எனவே, சடையப்ப வள்ளலை உரிமை கோர இரு கூட்டங்களுக்கும் ரத்த சம்மந்தம் உண்டு.

“சாத்தந்தை கோத்திரன் பண்ணை குலோத்திரன் தமிழ்ச்சடையன்
கோத்திரம் நாற்பத்தெண் ணாயிரம் என்னும் குலம்விளங்க
ஆத்திப நல்லூர் கலியுகம் ஆயிரம் இம்பத்தொன்றில்
வாழ்த்துவர் கங்கையின் வந்கிசத் தோர்கொங்கு மண்டலமே”

கம்பரை ஆதரித்தது


சிறு வயது முதலே சடையப்ப பூபதிக்கு தன்னியல்பிலேயே  கொடைக்குணம் வாய்க்கப்பட்டிருந்தது. இல்லாதொருக்கும் பசித்தோருக்கும் வயிறும், மனதும் வாழ்த்தும் வரை ஈவதை தர்மமென கொண்டிருந்தார். ஒரு காலத்தில் தேரழுந்தூர் என்னும் பதியில் இருந்து கணவனை இழந்த கைம்பெண் ஒருத்தி பாலகனான தன் மகனை அழைத்துக் கொண்டு அடைக்கலம் நாடி வந்திருந்தாள். அந்தப் பெண்ணின் மகன்தான் கம்பர். அவரது முகவொளியிலேயே தனக்கும் அவனுக்குமான அணுக்கத்தை உணர்ந்த சடையப்ப வள்ளல் அடைக்கலம் தந்து, கல்வி போதிக்கவும் ஏற்பாடு செய்து பல காலமாக காத்து வந்தார். 

கல்விகேள்விகளிலும், பல மொழிகளிலும், கவிதை புனைவதிலும் சிறந்த கம்பர் சடையப்ப வள்ளலோடு அவரது தோட்டங்களைக் காண தினமும் காலை அவருடன் செல்வதும், சடையப்பர் வணங்கும் காணியாச்சியான காளிதேவியை வணங்குவதும் வாடிக்கை. ஒரு நாள் காளிதேவியின் பரிபூரண அருள் கம்பருக்கு ஏற்பட்டது. சடையப்ப வள்ளலுக்கு சம்ஸ்கிருதத்தில் இருந்த ராமாயண காவியத்தை மொழிபெயர்த்து சொல்லிவந்த கம்பரின் வாக்கில் மயங்கிய சடையப்ப வள்ளல் கோரிக்கைக்கு இணங்கி கம்பர் காளிதேவியின் முன்னிலையில் தமிழில் ராமாயணம் பாட ஒப்புக்கொள்கிறார். 

சடையப்ப வள்ளலைப் புகழ்ந்துக் கம்பர் 100 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் தன் கம்பராமாயணத்தில் எழுத, ஓட்டக்கூத்தர் உள்ளிட்ட மற்றப் புலவர்கள் ஆயிரத்துக்கு ஒரு பாட்டில் குறிப்பிட்டால் போதும் என்றுக் கூறிவிட, கம்பர், "சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவர் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் கூறியபடி அவர் 'ஆயிரத்தில் ஒருவர்' ஆகிறார். அப்படியே செய்கிறேன்." என்று ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் வள்ளலை புகழ்ந்து பாடுகிறார்.

ராமாயணம் பாடி முடித்து ஊருக்கு வந்த கம்பருக்கு பெரும் வரவேற்பு தந்தார் சடையப்ப வள்ளல். நெற்கதிரால் வேயப்பட்ட பந்தலிட்டு வரவேற்பளித்தார் என்பதனால் அந்த ஊருக்கு கதிராமங்கலம் என்ற பேர் ஏற்பட்டதாம்.

சடையப்ப வள்ளலின் அன்பினாலே கம்பர் கொங்கு மக்களைப் புகழ்ந்து ஏர் எழுபது, திருக்கை வழக்கம், மங்கள வாழ்த்து, கம்பர் வாழ்த்து போன்ற காவியங்களை பாடினார்.சடையப்ப வள்ளலால் நன்கு பலகாலும் ஆதரிக்கப்பட்ட கம்பர் தன் இறுதிக் காலத்தில் வள்ளல் ஆதரித்த திறத்தையெல்லாம் ஒரு வெண்பாவாகப் பாடினார். அப்பாடல்,

ஆன்பாலும் தேனும் அரம்பைமுதல் முக்கனியும்
தேன்பாய உண்டு தெவிட்டுமனம் - தீம்பாய்
மறக்குமோ வெண்ணை வருசடையா கம்பன்
இறக்கும்போ தேனும் இனி

சோழன் அவையில் வள்ளல் புகழ்

பின்னாளில் கம்பர் குலோத்துங்கச் சோழன் அவைக்குச் சென்றபோது சடையப்ப வள்ளலின் பொருட்டு வெள்ளாளர்கள் சோழனை விட உயர்ந்தவர்கள் என்று வாதிட்டு நிரூபித்தார். கவுண்டர்களைப் பாடிய இந்த நாவால் எவரையும் பாட மாட்டேன் என்று கூறி சோழனைப் புகழ்ந்து பாட மறுத்தவர். கவுண்டர்கள் கொடுத்ததை பெற்ற இந்த கை யாரிடமும் ஏந்தாது என்று வலக்கையால் வாங்காது இடக்கையால் சோழனிடம் பரிசை வாங்கிக் கொண்டவர். வெள்ளாளக் குடியானவர்களது வீட்டு கம்புக்கு சோழனின் வைர வைடூரிய ரத்தினக் கற்கள இணையில்லை என்றும், சோழனின் நேரிமலை குடியானவர்களின் போர்பட்டரைக் கல்லுக்கு சமமாகாது என்றும், சோழனின் செங்கோல் கொங்கு மக்களின் உழவு மேழிக்கு ஒப்பாகாது என்றும் கூறியவர். கொங்கு வெள்ளாளச் சிறுவனின் எடைக்கு சோழனே இணையாக மாட்டான் என்று கூறி அதையும் நிரூபித்தார். காவேரியின் வெள்ளம் கொங்கதேசத்தில் கவுண்டர்கள் வீட்டில் மக்கள் விருந்துண்டு வாய் கொப்பளித்து துப்பிய நீர்தான் என்று நிறைந்த அவையில் கூறி அதை நிரூபித்தும் காட்டியவர். வாய்கழுவிய நீர் காவேரி என்று பாடிய பாடல்,

"மெய்கழுவி வந்து விருந்துண்டு மீளுமவர்
கைகழுவு நீர்போகுங் காவிரியே - பொய்கழுவும்
போர்வேற் சடையன் புகழ் மரபினோர் பெருமை
யார்கூற வல்லா ரறிந்து"



இந்த சம்பவத்தால் கோபமான சோழன் கம்பரை தண்டிக்க நினைக்கவே காவேரி வெள்ளம் பெருகியது. அது தெய்வப்புலவரின் வாக்குக்குத் தான் கட்டுப்படும் என்பதால் கொங்கதேசத்தை முழுக வந்த வெள்ளத்தை தன் தெய்வ சக்தி நிறைந்த பாடலால் தணிய செய்து சோழனின் கையாலேயே அதற்கு கைமாறாக நம் கல்யாணங்களில் அவர் வழி வந்த புலவர்களுக்கு கல்யாண வரியை பெற செய்தார். கம்பர் தான் பெற்ற கல்யாண வரி (வதுவை வரி) பட்டயத்தை கொண்டுவந்து சடையப்ப வல்லளிடமே ஒப்படைக்கிறார். 


(நயினார் என்பது கொங்கு வேளிர்களது ஆதி நாளைய பட்டமாகும்)

காவேரி வெள்ளம் தணிய கம்பர் பாடிய பாடல்,
கன்னி அழிந்தனள் கங்கை திறம்பினள்
பொன்னி கரையழிந்து போனாளென் றிந்நீர்
உரைகிடக்க லாமோ உலகுடைய தாயே
கரை கடக்கலாகாது காண்.

புற்றரவின் வாயருகே நீட்டிய கை
ஒரு முறை வள்ளலுக்கு வறுமை வந்துற்றபோது புலவர் ஒருவர் வடிவில் தெய்வங்கள் சடையப்ப வள்ளலை சோதிக்க நினைத்தனர். வாசலில் வந்து நின்று பாடிய புலவருக்கு கொடுக்க எதுவுமில்லையே என்று வருத்தமுற்று வீட்டுக்கு பின் சென்று அந்கிருந்த புற்றுக்குள் கைவிட்டார். பொருள் கொடுக்க இயலா நிலையில் இல்லை என்று சொல்வதினும் சாவது மேல் என்ற எண்ணத்தில். ஆனால், புற்றில் இருந்த நாகமோ, இவ்வளவுநாள் நமக்கு பாலூற்றிய கை இன்று நம்மிடம் கையேந்துகிறது என்று தன் வாயில் இருந்த மாணிக்கக்கல்லை கக்கிவிட்டு உயிரைவிட்டுவிட்டது. அந்த விலைமதிப்பற்ற மாணிக்கத்தை புலவருக்கு ஈந்தார் சடையப்ப வள்ளல். அந்த நாகம் தெய்வநிலையை அடைந்தது. புலவர் வடிவில் வந்த தேவர்கள் வள்ளலை வாழ்த்தி சென்றனர்.





மொடவாண்டிப் பட்டய செய்தி:
கொங்கதேசத்தில் முடவர் காப்பு மையம் இன்றைய கஸ்பாபேட்டை எனப்படும் மொடவாண்டி சத்தியமங்கலம் என்னும் ஊரில் இருந்தது. முடக் குழந்தைகளாகப் பிறந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளைக் காக்க ஏற்படுத்தப்பட்ட அரிய தர்மமாகும். இதைப் பற்றி குறிக்கும் மொடவாண்டிப் பட்டயம் என்னும் ஆவணத்தில் சடையப்ப வள்ளல் வீட்டில் பிறந்த முடக்குழந்தை பொன்பேழையில் வைக்கப்பட்டு ஆற்றில் விடப்பட்டதென்றும் அதை துளுவ நாயக்கரும் ராயரும் எடுத்து இதுபோன்ற குழந்தைகளைக் காக்க முடவர் காப்பு நிலையமும், அதற்கான பொருளுக்கு வரிவகைகளும், மானியங்களும் விடப்பட்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது.

கொங்கு மண்டல சதகம் பாடுவித்தது

வாலசுந்தரக் கவியாருக்குப் பொன்னும் பொருளும் கொடுத்துக் கொங்கு மண்டல சதகம் பாடுமாறு கூறியதே சாத்தந்தை குலச் சடையப்ப வள்ளல்தான்.இதனை நூலாசிரியர்,

“இடுக்குவர் பிள்ளை தன்னை இறங்கினும் இருக்கார்என்று
வடித்தமிழ் நூலின் ஆசான் வாலசுந் தரம்யான் சொன்னேன்
படிக்கவே பொருட்சாத் தந்தை பண்ணைகோன் வெண்ணெய் நல்லூர்
கொடுத்திடும் இரணம் வாரிக் கொங்குசெய் சதகம் தானே”

என்ற கொங்கு மண்டல சதகப் பாடலில் குறிப்பிடுகிறார்.

இலங்கைக்கு மாபெரும் அன்னதானம்
பொ.ஆ. 1154 இற்குச் சற்று முன்பு இலங்கையிற் பஞ்சம் ஏற்பட்டபோது சடையப்ப வள்ளல் வட இலங்கை அரசனுக்கு நெல்லனுப்பியதாக இலக்கிய வரலாறுண்டு. பரராஜசிங்கன் என்ற அரசன் அந்நாட்டை ஆண்டு வந்த காலத்தில் கடுமையான பஞ்சம் வந்துற்றது. பசியின் கொடுமையால் குடிகள் படாத பாடு பட்டனர். மன்னன் மனம் பதைத்து வாடினான்; தடையின்றிக் கொடுக்கும் தகைமை வாய்ந்த சடையப்ப வள்ளலின் உதவியை நாடினான். உடனே அவர் களஞ்சியத்திலிருந்த நெல் கப்பலேறியது; ஆயிரம் கப்பல்களில் யாழ்ப்பாணத் துறையில் வந்து நெல் மலைபோற் குவிந்தது.

கருது செம்பொனின் அம்ப லத்திலே
      கடவுள் நின்று நடிக்குமே!
காவி ரித்திரு நதியி லேஒரு
      கருணை மாமுகில் துயிலுமே!
தருவு யர்ந்திடு புதுவை யம்பதி
      தங்கு மானிய சேகரன்,
சங்க ரன்தரு சடையன் என்றொரு
      தரும தேவதை வாழவே!"
      - பெருந் தொகை, 1135 .

கம்பராமாயணப் பாடல்களில் சடையப்ப வள்ளல்:

பாடல்:
வாழ்வுஆர் தருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்பன் வாழ்த்துப்பெற
தாழ்வார் உயர புலவோர் அகஇருள்தான் அகல
போழ்வார் கதிரின் உதித்த தெய்வப்புலமைக் கம்பநாட்டு
ஆழ்வார் பதத்தைச் சிந்திப்பவர்க்கு யாதும் அரியது அன்றே

பொருள்:
திருவெண்ணெய்நல்லூர் என்ற ஊர் வாழும்படி வாரி வழங்கிய சடையப்ப வள்ளல் பாடல் பெற்று உலக புகழ் பெற வேண்டும் என்பதால் கம்பராமாயணத்தில் அவரது பெயரை ஆங்காங்கே வைத்தவரும் தாழ்ந்த நிலையில் உள்ள மக்கள் உயர உழைத்தவரும் புலவர்கள் தங்கள் தமிழ் பாடல்களில் சொல், பொருள், மற்றும் கவிவளம் செழிப்பெடுத்து ஓடாமல் இருள் படர்ந்து தடங்கல் ஏற்படுமாயின் எவரின் கவிதைகளை படித்து எவரின் பெருக்கெடுத்து ஓடும் தமிழை பருகி மீண்டும் புத்துணர்வு பெற்று எழுச்சி அடைந்து இருள்நீங்கி ஒளி பெருவரோ இருளை அழிக்கின்ற நீண்ட கதிர்களை உடைய சூரியனை போல உதித்த தெய்வீக புலமை பெற்ற, கம்ப நாட்டில் தோன்றிய கம்பநாடாரின் திருவடிகளை சிந்திப்பவர்க்கு எதுவும் அரியது, கடினமானது இல்லை!

பாடல்:
எண்ணிய சகாத்தம் எண்ணூற்றுஏழின்மேல் சடையன்வாழ்வு
நண்ணிய வெண்ணெய்நல்லூர் தன்னிலே கம்பநாடன்
பண்ணிய இராமகாதை பங்குனி அத்த நாளில்
கண்ணிய அரங்கர் முன்னேகவி அரங்கேற்றினானே

பொருள்:
எண்ணி அறியப்பட்ட சாலி வாகன சகாப்தம் எண்ணூற்று ஏழாம் ஆண்டிற்கு மேல், சடையப்ப வள்ளல் வாழ்ந்ததிரு வெண்ணெய்நல்லூரிலே வாழ்ந்த கம்பன் தான் இயற்றிய இராமனது வரலாற்றை, பங்குனி மாதத்தில், உத்திரநட்சத்திரத்தில் பூமாலை அணிந்த திருவரங்கனுக்கு முன்னே புலவர்கள் கூடிய அவையிலே அனைவரும் ஏற்குமாறு அரங்கேற்றினான்.

பாடல்:
நடையின் நின்று உயர்நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறுமாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர் வயின்தந்ததே.

பொருள்:
நல்லொழுக்கத்தில் நிலை பெற்று, உயர்வு பெற்ற இறைவனான திருமாலின் அவதாரங்களில் நடந்ததாகிய இராமாவதாரத்தைக் குறித்த பெருமை வாய்ந்த
செய்யுள்கள் நிறைந்ததாவும், குற்றங்கள் அறவே இல்லாததுவும் ஆன இந்த மாபெரும் காப்பியம் சடையப்ப வள்ளலின் ஊரான திருவெண்ணெய்நல்லூர் என்னும் இடத்தில் வைத்து இயற்றப்பட்டது

பாடல்:
நாரணன் விளையாட்டு எல்லாம் நாரத முனிவன்கூற
ஆரணக் கவிதை செய்தான் அறிந்தவான்மீகி என்பான்
சீர்அணி சோழ நாட்டுத் திருவழுந்தூருள் வாழ்வோன்
கார்அணி கொடையான் கம்பன் தமிழினால் கவிதைசெய்தான்

பொருள்:
திருமாலின் அவதாரமான இராமனின் திருவிளையாடல்கள் அனைத்தும் நாரத முனிவன் கூற அதனைக்கேட்டு வால்மீகி என்னும் முனிவன் வேதத்துக்கு சமமான வடமொழிக் கவிதைகளாக இயற்றினான் பின்பு அதை சிறப்புப் பொருந்திய சோழநாட்டுத் திருவழுந்தூர் என்னும் ஊரில் வாழும்கம்பன் மழை மேகம் போல்சிறந்த கொடைசடையப்பரின் ஆதரவால் தமிழில் கவிதையாக எழுதினான்

பாடல்:
விண்ணவர் போயபின்றை, விரிந்த பூமழையினாலே
தண்எனும் கானம் நீங்கித், தாங்கரும் தவத்தின் மிக்கோன்
மண்ணவர் வறுமைநோய்க்கு, மருந்து அனசடையன் ,வெண்ணெய்
அண்ணல் தன்சொல்லே அன்ன, படைக்கலம் அருளினானே;
(பாலகாண்டம், வேள்விப்படலம்)

பொருள்:
* மக்களின் வறுமை நோய் தீர
* கம்பனின் வெறுமை நோய் தீர
எப்படிச் சடையன் மருந்து என்னும் அடைக்கலம் கொடுப்பானோ…அப்படி, மருந்துபோல, இராகவனுக்குப் படைக்கலம் கிட்டிற்று!

பாடல்:
வண்ண மாலைக்கைபரப்பி, உலகை வளைந்த இருள்எல்லாம்
உண்ண எண்ணித்தண்மதியத்து, உதயத்து எழுந்த நிலாக்கற்றை;
விண்ணும் மண்ணும்திசை அனைத்தும், விழுங்கிக் கொண்ட, விரிநல்நீர்ப்
பண்ணை வெண்ணெய்ச் சடையன்தன், புகழ்போல் எங்கும்பரந்து உளதால்!
(க்ஷெ மிதிலைகாண்படலம். 74.)

பொருள்:
இருட்டையெல்லாம், தன்கையைப் பரப்பி, நிலா உண்கிறது!  எதைப்போல்?
உலகப் புகழையெல்லாம் உண்ணும் சடையன் புகழ்போல், பரவி நிற்கிறது நிலா!

பாடல்:
மஞ்சினில் திகழ் தருமலையை, மாக் குரங்கு
எஞ்சுறக் கடிது எடுத்துஎறியவே, நளன்
விஞ்சையில் தாங்கினன்; சடையன் வெண்ணெயில்
‘தஞ்சம்! ‘என்றோர்களைத் தாங்கும் தன்மை போல்

பொருள்:
பல குரங்குகள், கல்லைத்  தொம்தொமென்று கொண்டு வந்து  போட, அதை மூழ்காமல் தாங்கி, ஒழுங்கில் அமைக்கிறான் நளன் என்னும் பொறியாளன்! எதைப்போல்? பல துன்பங்களையும் கொண்டாந்து போட்டாலும், தஞ்சம் என்பாரைத் தாங்கும் சடையன் போல்!

பாடல்:
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச
விரை செறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மௌலி

பொருள்:
அரியணையை அனுமன் தாங்கி பிடிக்க, அங்கதன் வாள் பிடித்திருக்க, பரதன் வெண்குடை பிடித்திருக்க ,பக்கத்தில் இருவர் சாமரம் வீச வள்ளல் திரு சடையப்ப கவுண்டரின் முன்னோரான வேளாளர் முடியை எடுத்து தர குலகுரு வசிஷ்டர் ராமருக்கு முடி சூட்டினார் இந்த வரியால், தன் ஆருயிர் நண்பன் சடையனை மட்டுமல்லாது…ஒரு பரம்பரையையே கரை சேர்த்து விட்டான் கம்பன்!


ஸ்ரீராமாயணத்தை தமிழில் இயற்காவியமாக பாடியவர் கம்பர், 
பாட வைத்தவர், 
வெள்ளாளர் குலதிலகமான சாத்தந்தை கூட்ட சடையப்ப வள்ளல்.. (கம்பராமாயணம்)

ஸ்ரீ ராமாயணத்தை இசைக்காவியமாக பாடியவர் எம்பெருமான், பாடவைத்தவர், 
            வெள்ளாளர் குலதீபமான கன்ன கூட்ட நல்லதம்பி காங்கேயன்.. (தக்கை ராமாயணம்)

ஸ்ரீராமாயண காவியம் தமிழில் பெருமளவு வளர முழுமுதற்காரணமாக இருந்தது கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகம் தான் என்பதில் மிகுந்த பெருமை கொள்வோம்! கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் மாரல் கோட் ஸ்ரீ ராமாயணம் என்றால் மிகையல்ல.

மேலும் படிக்க,

6 comments:

  1. Proud to Be an Kongu Vellala Gounder....

    ReplyDelete
  2. மிக்க நன்றி.

    ReplyDelete
  3. வள்ளல் சடையப்ப கவுண்டருக்கு பலரும் உரிமை காேருவது வேதனையாக உள்ளது, இந்த உண்மையை நாம் ஊருக்கு உணர்த்த வேண்டும்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. தக்கை இராமாயணம் என்ற இராமாயணம் இசைக்காவியமாக தக்கை என்னும் இசைக் கருவிகள் மூலம் பாடியவர் எம்பெருமான், பாட வைத்தவர் மோரூர் கன்னங்கூட்ட நல்லதம்பி காங்கேயம் இவர்கள் பாதம்பபணிகின்றேன்.

    ReplyDelete
  6. தக்கை இராமாயணம் என்ற இராமாயணம் இசைக்காவியமாக தக்கை என்னும் இசைக் கருவிகள் மூலம் பாடியவர் எம்பெருமான், பாட வைத்தவர் மோரூர் கன்னங்கூட்ட நல்லதம்பி காங்கேயம் இவர்கள் பாதம்பபணிகின்றேன்.

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates