Trending

Saturday 19 December 2015

புண்யகோடி கதை

கன்னட நாட்டுப்புற கதைப்பாடல் - புண்யகோடி கதைப்பாடல்.. அவசியம் குழந்தைகளுக்கு போட்டுக் காட்டுங்கள். பல நூற்றாண்டுகளாக கர்நாடகத்தின் அற்புத லெஜென்டாக கூத்து முதல் கார்டூன், பள்ளி பாடம், பள்ளி நிகழ்ச்சிகள் என்று மக்களின் வாழ்வில் கலந்த பழம்பெரும் புகழ்பெற்ற கதையாகும். கதை சுருக்கம் படித்துவிட்டு கீழே கொடுத்திருக்கும் கூத்துப் பாடலைக் காணுங்கள். 

கர்நாடக தேசத்தில் காளிங்கன் என்ற கொல்லர் (இடையர்)  இருந்தார். அவனிடம் இருந்த பசுக்கூட்டம் தினமும் அருகிலிருக்கும் வணதிருக்கு சென்று மேய்ந்து திரும்பும். அவனது மந்தையில் புண்யகோடி என்ற பசு இருந்தது. அதன் பச்சிளம் காளைக் கன்றை வீட்டிலேயே விட்டு மேய்ச்சலுக்கு சென்றது. வனத்தில் பல வாரங்கள் இரை கிடைக்காமல் இளைத்த அற்புதா என்ற புலி சுற்றி வந்தது. மேய்ச்சலுக்கு வந்த மந்தையை கண்டு மெதுவாக ஒளிந்து வந்தது. புலியின் ஓசையை உணர்ந்து பசுக்கள் ஓடத்துவங்க, புண்யகோடி பசுவின் பாய்ச்சலில் சிக்கியது. 


புலி கொல்ல வந்தபோது, "என்னை இப்போது வீட்டுக்கு சென்று மிக இளம் கன்றான என் மகனுக்கு கடைசியாக ஒரு முறை பாலூட்டி விடைபெற்று வர அனுமதி; நான் சத்தியமாக திரும்பி வருகிறேன்" என்றது. "நான் மகா பசியோடு இருக்கிறேன். உன்னையும் விட்டுவிட்டால் இரையின்றி இறந்துபோவேன். உன் பேச்சை கேட்டு விட நான் முட்டாளா?" என்றது.

"சத்யமே என் தாய் தந்தை; சத்யமே எனது உறவுகள் மக்கள்; சத்யவாக்கை நான் மீறினால் பரமாத்மா என்னை மெச்சுவாரோ?" என்று கெஞ்சியது. புண்யகோடியின் குரலில் இருந்த உண்மையை நம்பிய அற்புதா புலி சென்று சீக்கிரம் திரும்பி வர வேண்டும் என்று அனுப்பியது.

இருட்டிய மாட்டுப்பட்டிக்கு பசுக்கள் திரும்பின. எல்லா பசுவும் திரும்பியும் தன் தாயை காணோமென்று அங்கேயும் இங்கேயும் ஓடி ஓடி தேடிக்கொண்டிருந்த கன்று வீட்டுக்கு தலையை தொங்கப்போட்டு வந்த தனது தாயை கண்டதும், ஓடி அண்டி நக்கி தனது தவிப்பை வெளிப்படுத்தியது.

துக்கம் தொண்டையடைக்க கண்ணீரோடு தனது கன்றை நன்கு முகர்ந்து, நக்கி, அது வயிறு நிரம்பும்வரை பாலூட்டியது. பின்னர் தனது கன்றிடம் தனது நிலையை சொல்லியது. "அம்மா, நீங்க போய்ட்டா நான் என்ன செய்வேன்? யார் எனக்கு பால் தருவாங்க? யார் என்னை ஆதரிச்சு அன்பு காட்டுவாங்க? நான் அனாதையாக தவிப்பேனே தாயே. என்னைவிட்டு போகாதீங்க" என்று கதறியது.

துயரம் மீற பேசவும் முடியாமல் "சத்தியமே நமது பகவானல்லவா? கொடுத்த சத்தியத்தை மீறுவது தகுமா மகனே? இந்த வாழ்க்கைக்காக வாக்கு தவறமுடியுமா?" என்று பல தர்ம உபதேசங்களைக் கூறி ஆற்றுப்படுத்தியது. 

தனது உறவுக்கார பசுக்களைக் கூப்பிட்டு தனது நிலையை எடுத்துக் கூறி "என் கன்றை அன்போடு பார்த்துக் கொள்ளுங்கள்; அவன் ஏதாவது குறும்பு செய்தாலும் கடுமையாக தண்டித்துவிடாதீர்கள்; நானின்றி மிகவும் ஏங்கிப் போய்விடுவான்; என் இடத்தில் இருந்து பார்த்துக் கொள்ளுங்கள்" என்று தாயுணர்வால் பலவாறாக தனது ஏக்கத்தையும் தவிப்பையும் கூறி அழுதது. கருணை தர்மம் என்று சத்வ குணமே கொண்ட தெய்வப் பிறவிகளான பசுக்கள் அழுகையோடு புண்யகோடியை தடுத்துப் பார்த்தன. ஆயினும் புண்யகோடியின் நிலைப்பாட்டில் உள்ள தர்மத்தை உணர்ந்து மேற்கொண்டு பேசாமல் அழுது நின்றன. கன்றினை நன்கு முத்தமிட்டு முகர்ந்துவிட்டு பிரிவுத்துயர் ஆற்றாமல் காட்டை நோக்கி நடந்தது புண்யகோடி.

அங்கே காட்டில் குகையில், "அந்த பசுவின் பேச்சைக் கேட்டு போக விட்டது என் தப்பு; இப்போ பசியில் நாந்தான் சைவப் போறேன்" என்று பலவாறாக புலம்பிக் கொண்டு இருந்தது அற்புதா புலி. வெளியே பாறையில் வந்து ஏறி நின்று பார்த்தது. அதன் கண்களையே நம்ப முடியவில்லை.

தூரத்தில் சோகத்தோடு புண்யகோடி வந்து கொண்டிருந்தது. குகைக்குள் வந்து வாயடைத்து நின்ற புலியிடம், மண்டியிட்டு படுத்து "நான் செய்த சத்தியத்தின்படி இதோ வந்தேன். என்னை கொன்று ரத்தம் குடித்து இறைச்சியைத் தின்று உன் பசியை தீர்த்துக் கொள்" என்றது!

அவ்வளவு பசியிலும் கோபத்திலும் கூட புண்யகோடியின் சத்யம், பணிவு போன்ற சத்குணங்களால் அற்புதா புலியின் மனம் நெகிழ்ந்து உருகிவிட்டது. கண்ணீர் விட்டு, "அம்மா, சத்யரூபினி! உன்னைப் போன்ற புண்யாத்மாவை கொன்று தின்றால் அந்த பரமாத்மா என்னை ஏற்பாரா?  நீ உன் சென்று உன் கன்றோடு வாழம்மா. உன்னை கொன்னு திண்ணு உயிர்பொழச்சு இருக்கறதுக்கு, நான் பசியிலேயே சாவேன்!!" என்று சொல்லிவிட்டு இனி பசுக்களை உண்பதில்லை என்று சொல்லிவிட்டு காட்டுக்குள் சென்றுவிட்டது.


கன்னடத்தில் உண்மையுருவில் கூத்தும் இசையும் 

தமிழில் நாச்சம்மை என்ற பேரில் 

என்றோ உண்மையில் நடந்த இந்த புண்யகோடி கதை கர்நாடக கிராமங்களில் கூத்தாக பாடப்படும். மனதை உருக்கும் இந்த கூத்தில் பல தர்ம உபதேசங்கள் நிகழ்த்தப்படும். புண்யகோடியின் கதையை பாடுபவர்களும், கேட்பவர்களும் புண்ணியங்கள் கோடி பெற்று ஸ்ரீகிருஷ்ணரின் அன்புக்கும் அருளுக்கும் உரியவர்களாவர் என்று கர்நாடக கிராம மக்கள் சொல்கிறார்கள்; பலர் ஜாதக தோஷங்கள் நீங்கவும், செல்வம் சேரவும் இந்த கதைப்பாடல்களை கிராமங்களில் அரங்கேற்றுவார்களாம். மனதை நெகிழ்த்து உருக்கும் இசையும் பாடலும் கன்னட மக்களின் மிக நீண்ட பாரம்பரியமிக்க கதைப்பாடலாகும். இதன்மூலம் சத்யத்தின் மேன்மை குழந்தைகள் மனதில் பதியும். பசுக்களின் மீது அன்பும் பிடிப்பும் ஏற்படும். அன்பு, தர்மம், பணிவு, நேர்மை போன்ற நற்பண்புகள் ஏற்படும்.

கடும் பசியுடன் இருந்த கொடிய புலிக்கு கூட பசுவின் மீது அன்பும் மனமாற்றமும் ஏற்படுகிறது; ஆனால் பசுவின் பாலையும் உழைப்பையும், அதன் சாணம் கொண்டு விவசாயம், மருத்துவம், ஆன்மிகம் என்று அனைத்தையும் அனுபவித்துவிட்டு பசுவின் மீது கருனையற்று அதை கொள்பவர்களையும், கொல்வதற்கு துணை போவோரையும் என்னவென்று சொல்லலாம்?
"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்"

நாட்டுப்பசுக்கள் பற்றி விரிவாக அறிய திமில் புஸ்தகத்தை படிக்கவும்.
பிரதிக்கு: +91 88837 40013






No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates