Trending

Thursday 3 December 2015

வாழைத் தோட்டத்து அய்யன்

கருத்தம்பட்டி வாழைத் தோட்டத்து அய்யன் கோவை மவாட்டத்தில் புகழ் பெற்று விளங்குகிறார். இப்பகுதியில் குடியானவராக அவதரித்த அய்யனின் இயற்பெயர் சின்னையன், அவரது தோட்டம் வாழைத் தோட்டம். இவர் செங்காளியப்ப கவுண்டரின் மகனாக 1777ல் அவதரித்தார். 12 வயது வரை கல்வி பயின்றார். பின் இவரது தந்தை விருப்பப்படி மாடு மேய்க்கும் தொழிலை மேற்கொண்டார். 

மாடு மேய்க்கும் போது கற்களை சேர்த்து தெய்வ உருவமாக்கி வழிபடுவார். ஒருநாள் ஒரு பெரியவர் இவரது வேண்டுகோளை ஏற்று சர்வவிஷ சம்ஹார மந்திரத்தையும், பஞ்சாட்சர மந்திரத்தையும் உபதேசித்து அருளினார். அத்துடன் சின்னையனின் வீட்டில் ஒரு அறையில் இதே பெரியவர் சிவபெருமான்-உமாதேவியருடன் வீற்றிருக்கும் கோலத்தை காட்டி மறைந்து விட்டார். பின்னர் சின்னையன் தன்னை நாடி வந்தவர்களின் தீராப்பிணியையும், பாம்பு மற்றும் தேள் போன்ற கொடிய நச்சுப்பிராணிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விபூதியாலும், பஞ்சாட்சர மந்திரத்தாலும் குணப்படுத்தி வந்தார். ஆனால் எவரிடமுமம் கூலி எதிர்பார்க்கவில்லை. 


ஒரு முறை அப்பகுதி அதிகாரி மனைவியின் வெண்குஷ்ட நோயை திருநீற்றால் குணப்படுத்தியதற்கு ஆயிரம் வெண் பொற்காசுகளை தாசில்தார் கொடுத்தார். ஆனால், சின்னையன் ஏற்காமல் அந்த பணத்தை ஆண்டவனுக்கே செலவழிக்க கூறிவிட்டார்.அவர் ஒவ்வொரு ஆண்டும் திருப்பேரூர் சென்று நடராஜரை தரிசிப்பது வழக்கம். தன் 72வது வயதில் திருவாதிரைக்கு முதல் நாள் அவரது மக்கள் அவரை திருப்பேரூருக்கு அழைத்தனர். ஆனால் அவர் "நான் நாளை கயிலாச நாதரை தரிசிக்கச் செல்கிறேன்'', என்று கூறிவிட்டார்.



மறுநாள் தான் அன்புடன் வளர்த்த காளைமாட்டை தேடிக் கொண்டு தோட்டத்திற்கு வந்தார். அந்த மாடு அவரது படுக்கையில் தான் படுக்கும். இருந்தும் திடீரென அந்த மாடு பாய்ந்து அவரை கொம்புகளால் குத்தி தூக்கி எறிந்தது. சின்னையன் இறைவன் திருவடி சேர்ந்தார். இந்த சம்பவம் நடந்து 155 ஆண்டுகள் ஆகிறது.அவர் மறைந்த பின், அவர் தனது பண்ணையாளின் கனவில் தோன்றி தாம் பூஜித்த லிங்கம், நந்தி இவைகள் மறைந்திருக்கும் இடத்தை சொன்னார். இவர் கூறியதைப்போல் லிங்கம், நந்தியை எடுத்து வந்து அவர் முக்தி அடைந்த கிளுவை மரத்தின் கீழ் வழிபாடு செய்து வந்தனர். அந்த லிங்கத்தின் அருகே ஒரு பாம்பு புற்றும் வளர்ந்தது. அந்த புற்று மண்ணே ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நஞ்சை தீர்க்கும் அரு மருந்தாக பயன்பட்டு வருகிறது.



இங்கு கிடைக்கும் புற்று மண்ணில் மிகச் சிறிதளவை உங்கள் வயல் அல்லது தோட்டத்து மண்ணில் கலந்து விட்டால், பாம்புத் தொல்லை, விஷ ஜந்துக்களின் தொல்லை இருக்காது. பாம்பு கடித்தவர்களுக்கு புற்று மண் பூசப் பட்டு விஷம் நீங்கப்பெறுவதாக நம்பிக்கை. வீடுகளில் பூச்சித்தொல்லை இருந்தால் புற்று மண்ணை நீரில் கலந்து வீட்டை சுற்றலும் தெளித்தால் விஷப்பூச்சிகள் அண்டாது என்பது நம்பிக்கை. புற்று மண் எவ்வளவு எடுத்தாலும் குறையாது என்பது இறைவனின் திருச்செயலாகும். நீங்கள் விவசாயியாக இருந்தால், அடிக்கடி வயலிலும், தோட்டத்திலும் பாம்புகளை பார்க்கக் கூடும். பாம்பு பற்றிய பயத்தை தவிர்க்கவும், அவற்றால் தீங்கு ஏற்படாமல் இருக்கவும் இத்தலம் வந்து தங்கி வாழைத் தோட்டத்து அய்யனை வழிபட்டுச் செல்லலாம்.



திருவிழா: மார்கழி திருவாதிரை
திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி: அருள்மிகு வாழைத்தோட்டத்து அய்யன் திருக்கோயில் கருத்தம்பட்டி - கோயம்புத்தூர் மாவட்டம்.



நன்றி: தினமலர் கோயில்கள் தளம் 


மேலும் படிக்க,

4 comments:

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates