Trending

Sunday 7 July 2013

வெளிநாட்டு கல்வி




வெளிநாட்டு கல்வி 
---------------------------
சமீப வருடங்களாக நம் இளைஞர்கள் பலர், பேச்சிலர் டிகிரி படித்தவுடன் வெளிநாட்டு கல்வி கற்க சென்று செட்டிலாகி லட்சங்களில் விரைவாக சம்பாதித்துவிடலாம் என்று எண்ணி ஏமாறுகிறார்கள். தற்சமயம் இதுபோல வெளிநாட்டு கல்வி மோகத்தால் சீரழிந்து பணத்தை-வாழ்க்கையை இழந்தவர்கள் அதிகமாக இருப்பதால், வெளிநாட்டு கல்வி குறித்த சில யதார்த்த உண்மைகளை, வெளிநாட்டில் படித்த நம் உறவுகள் பலரிடம் விசாரித்து எழுதப்பட்ட கருத்துக்களின் கோர்வை கீழே,

• வெளிநாடு செல்பவர்களில் 5% குறைவானவர்கள்தான் என்ன எதிர்பார்ப்பு-திட்டத்துடன் வெளிநாடு செல்கிறார்களோ அதை அடைகிறார்கள். சிறந்த அறிவு-அடிப்படை கல்வி, உலகத்தரம் வாய்ந்த பல்கலைகழகம், குடியுரிமை கொடுக்கும்-வாய்ப்புக்கள் அதிகம் உள்ள தேசம், ஏற்கனவே வேலை செய்த சிறந்த அனுபவம், படிக்கையில் தங்கள் செலவுக்கு தகுந்த ஸ்டைபண்ட் போன்றவை கிடைக்கும் மாணவர்களே வெற்றி பெறுகிறார்கள்.

• வெளிநாட்டு டிகிரி மட்டுமே சிறந்த எதிர்காலத்தை தரும் என்பது சுத்த கற்பனை-பொய். வெளிநாட்டில் தற்போது டிகிரியை விட அனுபவத்திற்கும் அறிவுக்குமே மரியாதை. மாஸ்டர்ஸ் முடித்திருந்தாலும் டிப்ளமோ உள்ளவன் திறமையானவனெனின் அவனுக்கே வாய்ப்பு தரப்படுகிறது. மிக சிறந்த கல்வி, தொழில்நுட்ப அறிவோ-அல்லது வேலை அனுபவமோ இல்லாமல் வெளிநாட்டில் படித்த டிகிரி மட்டும் வைத்து வேலை வாங்குவது வெறும் கற்பனை.

• பல நாடுகளில் ஸ்டுடண்ட் விசா தருவதற்கென்றே பல பல்கலைகழகங்கள் உள்ளன. அந்த நாட்டுக்கு செல்வதற்கென்றே சிலர் இந்த கல்லூரியை நாடுகிறார்கள்.

• அங்கே உள்ள அன்றாட செலவுகள் (லிவிங் எக்ஸ்பன்ஸ்) சம்பாதிக்க தரம் தாழ்ந்த பல பகுதி நேர வேலைகளை செய்ய வேண்டியது வரும். அது செய்தாலும் தேவையான அளவு சம்பாதிக்க முடியாது. வீட்டையும் தொந்தரவு செய்ய இயலாமல், ஒரு வேளை உணவோடு வாழ்வோர் அதிகம்.

• வெளிநாட்டு கல்விக்கு குறைந்த பட்சம் 14-20 லட்சமும் அதிகபட்சம் 35 லட்சமும் செலவாகிறது. வேலை கிடைக்காதவர்கள், பின்னாளில் இந்த கடனை கட்டவே இந்தியாவில் பத்து வருடங்களுக்கு மேல் வேலை செய்ய வேண்டியுள்ளது.

வாழ்வின் முதல் அடியே சறுக்கலில் முடிவதால் வாழ்வின் நம்பிக்கையை இழக்கிறார்கள். கல்யாணம் செய்ய வேண்டிய வயதில் வீடு கட்டி-கையிருப்போடு நண்பர்கள் உள்ளபோது, இவர்கள் கடனோடு இருப்பார்கள். அதேநேரம், தொழில்-உள்நாட்டிலேயே வேலைக்கு சேர்ந்தவர்கள் சில வருடங்களில் நல்ல அனுபவம் பெற்று வெளிநாட்டில் வேலை கிடைத்து நன்கு சம்பாதிப்பர். செலவு செய்து படித்தவர் கடனோடு இருக்க, பணத்தை பெற்று அனுபவம் கற்றவர் அதிகம் சம்பாதிப்பார். தொழில் துறையில் இறங்கியவர்கள்தான் இன்று மிக நல்ல நிலையில் உள்ளார்கள் என்பது யதார்த்த உண்மை. முதல் வேலை சம்பளம் கவுரவம் பார்க்காது சிறிய கம்பனிகளிலோ அல்லது குடும்ப தொழிலிலோ தொழில் கற்று பின் தொழில் செய்பவர்கள் பெரிய அளவில் சம்பாதிக்கிறார்கள்.

எனவே வெளிநாட்டு வீண் கற்பனையில் காட்டை விற்று, சம்பாத்தியத்தை அழித்து எதிர்காலத்தை தொலைக்காமல் அனுபவத்தையும், திறமையையும் வளர்த்து அதன் அடிப்படையில் எதிர்காலத்தை அமைத்துகொல்வதுதான் சிறந்த வாழ்வை தரும்!

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates