Trending

Tuesday 15 September 2015

பொக்கிஷங்களை பாதுகாப்போம்!

ஆரோக்கியம், விவசாயம், நீர்பாசன முறைகள், மாடு-கன்றுகள் வளர்ப்பு, ஜாதி வரலாறு, மருத்துவம், விடுகதைகள், வட்டார பழமொழிகள் மற்றும் கதைகள், சமையல் முறைகள், ஊர் வரலாறுகள், சீர் முறைகள், பிரசவம், குழந்தை வளர்ப்பு, ஆன்மிகம், கோயில் விஷயங்கள் என்று ஏராளமான தகவல்கள் அவர்களிடம் நாம் சேகரிக்க வேண்டியுள்ளது. சின்ன சின்ன விஷயங்கள் பற்றிக் கூட ஆழமான நுட்பமான கருத்துக்களை அவர்களிடம் கேட்டரிய முடியும். வெளிநாடேல்லாம் போய் ஆகாத கருமத்தை படிக்கும் நாம் வீட்டுக்குள்ளேயே-அதுவும் நம் வாழ்வுக்கு அவசியமான செய்திகளின் பொக்கிஷமாக இருக்கும் பெரியவர்களை மிகச் சாதாரணமாக விட்டுவிடுகிறோமே! நம் முட்டாள்தனத்தின் உச்சமல்லவா இது..?

நம் அம்மாயி-அப்புச்சி & தாத்தா-பாட்டி சம்பாதித்தது மட்டும் அல்ல, அவர்கள் அனுபவம், பாசம், அரவணைப்பு எல்லாமே நமக்கு உரிய சொத்துக்கள் தான். வாழ்க்கை ஓட்டத்தில், வேலை சுமையால் மறந்து விட்ட அவர்களை அடிக்கடி அழைத்து பேசுவோம். சந்திப்போம். அவர்கள் மனதில் அவர்களுக்கு துணையாக ஆதரவாக கூப்பிடும் தூரத்தில்தான் உள்ளோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவோம்.



(தெய்வ நம்பிக்கை உள்ளவர்களுக்கு) குலதெய்வ நிராகரிப்பு போல் நம் வீட்டு பெரியவர்கள் நிராகரிப்பும் நமக்கு பின்னடைவை ஏற்படுத்தும். நாம் வணங்கும் காணியாச்சி கோயில்களில் பரிவார தெய்வங்களாக நம் முன்னோர்களே உள்ளனர். பெரியோர்/முன்னோர் ஆசி என்பதே 16 செல்வங்களுள் ஒன்றாக நினைக்க பட்டது. அது இன்றி வாழ்க்கை முழுமை அடையாது. உலக முதியோர் தினம்: ஒரு தினம் வைத்து நம் பெரியவர்களை நினைவூட்டும் நிலைக்கு நாம் வந்ததும் ஒரு சமூக சீரழிவே.

நம் வீட்டு முதியவர்கள் மனதில் ஆழமான தாழ்வு மனப்பான்மையை வளர்த்துவிட்டோம். எது சொன்னாலும் அதை பழமைவாதம், பிற்போக்குத்தனம் என்று கருதி ஒதுக்கிவிடுவார்கள் என்று பெரியவர்கள் யாரும் நமக்கு பல விஷயங்களை சொல்வதில்லை. நாமே கேட்டாலும் கூட பெரும் தயக்கத்தோடுதான் சொல்கிறார்கள். அவர்களை பேச வைக்க பெரும்பாடு பட வேண்டியுள்ளது. நீங்கள் நம் வீட்டு பெரியவர்களிடம் ஒரு அரைமணிநேரம் செலவிட்டால் போதும் ஏராளமான மிக அரிய தகவல்களை பெற முடியும்.



சமீபத்தில் நம்ம தருமபுரி அருண் மாப்ள அவங்க அம்மா வந்திருந்தாங்க. அவங்ககிட்ட மட்டுமே குளிக்கும் முறை, குழந்தை வளர்ப்பு, வீட்டு வைத்தியம் என ஏராளமான தகவல்கள் இருக்கு; பலமுறை கேட்டும் தயங்கித்தான் சொன்னார்கள். கேட்கத்தான் ஆளில்லாம அவ்வளவும் அடுத்த தலைமுறைக்கு போய் சேராமல் இருக்கு. ஆனால் கம்யூனிஸ்ட்கள் ஊர் ஊராக சென்று இந்த தகவல்களை திரட்டி பிற ஜாதிகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். நம்மாழ்வார் போன்றவர்கள் சேகரித்த (கண்டுபிடித்ததல்ல!), தகவலகள் கூட குடியானவர்களிடம் இருந்துதான் பெற்றிருப்பார்கள். கம்யூனிஸ்ட்கள் பிரசவ முறைகள், வைத்தியங்கள் பற்றி ஊர் ஊராக சென்று விசாரிக்கிறார்கள். கொங்கு வட்டாரக் கதைகளை கம்யூனிஸ்ட்கள் தொகுக்கிறார்கள், பெரும்பாலும் ஆபாச கதைகளாத்தான் இருக்கு. , சிந்தனை, அறிவு, அறம், கற்பனைத்திறனை வளர்க்கக் கூடிய ஏராளமான கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். அதில் ஒன்று கூட அவனுங்க எழுதலை. பத்து வருஷம் கழித்து நாம் தேடும்போது பெரியவங்க இருக்கமாட்டாங்க, இந்த புக்குகள் தான் இருக்கும். இதை படிக்கும் நமக்கு நம்ம சமூகம் பற்றி என்ன தோணும??

நாம் மண்டையை உடைத்துக் கொள்ளும் குடும்ப-சமூக-விவசாய-தொழில் பிரச்சனைகளுக்குக் கூட மிக எளிதாக ஒன்றிரண்டு பழமொளிகளால் அவர்கள் தீர்வை சொல்லிவிடுவார்கள். சிலரை பார்த்தவுடனே அவர்கள் குணம் என்ன என்பதை சொல்லி ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்துவார்கள். இதெல்லாம் அவர்கள் அனுபவத்தால் விளைந்த முத்துக்கள்.

பெரியவர்களிடம் நிறைய பேசி விசயங்களை பதிவு செய்ய வேண்டியுள்ளது. நம் வீட்டுப் பெரியவர்கள் மட்டுமல்ல, உறவினர்கள், உங்க வட்டாரத்தில் இருப்பவர்கள், வீட்டுக்கு வருவோரிடம் அன்போட்டும் மரியாதையோடும் நடந்துகொண்டு கேட்க வேண்டும். கேட்டுவையுங்க. அதை எழுதி வைத்தல் நல்லது, அதைவிட பெரியவங்க சொல்றதை ஆடியோவாக அல்லது வீடியோவாக பதிவு செய்வது இன்னும் சிறப்பு. நம்மால் புரிந்துகொள்ள முடியாததை பிற்காலத்தில் மீண்டும் பார்த்து புரிந்து கொள்ளலாம். போட்டோகிராபி-வீடியோகிராபி என்று கண்ட கண்ட கருமத்தை எல்லாம் ரெக்கார்டு செய்வதைக் காட்டிலும் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான வேலையில் ஈடுபடலாம். யார் யார் இதற்கு தயார்? இவற்றை வீடியோக்களாக சேகரித்து தலைப்பு வாரியாக தரம் பிரித்து வைப்போம். 

படம் நன்றி: ஈரோடு சுரேஷ் போட்டோகிராபி

நல்லிணக்கமான கொங்கு உறவுகள்
நம் வீட்டு பெரியவர்கள்

1 comment:

  1. பொன்முருகன்30 September 2015 at 21:41

    ஆத்தா (ஓடைப்பட்டி அருமைக்காரர் குடும்பம்) அந்தக்கால படிப்புனா புரியுமே..
    ஆனா அவங்களுக்கு இருக்கும் அனுபவ அறிவு அளப்பரியது .. வக்கீல்களுக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு ஐடியா, அளவை கணக்கு,யார் தோட்டம் அது எந்த இடத்துல இடைப்பொழி என எல்லாம் அத்துப்படி, ஏற்றம் இரைத்தவங்க,மரம் ஏறி ஆடுகளுக்கு இலை தழை புடுங்கிபோடுதல்,இன்றும் பல நம் இனத்தின் பல தகவல்களை கேட்டு பெறுவது இவங்ககிட்ட தா,எப்படி சம்பாதிப்பது, சேமிப்பது னு ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு சொலவடை சொல்லித்தா முடிப்பாங்க. பெருமையா இருக்கு...
    வெண்டுவன் குலத்தில் பிறந்து பில்லன் குலத்தில் வாக்கபட்டவர்..
    அப்பிச்சி சாராயம் காய்ச்சுன கேஸ்ல போலிஸ் நம்ம புடிக்க வர்றாங்கனு தெரிஞ்சுபோயி ஏத்து ஓட்டிட்டு இருக்கும்போது அவர்கிட்டயே பழனியப்பன் யாருனு போலிஸ் கேட்க அங்க இருப்பான் போயி பாருங்கனு சொல்லிட்டு போலிஸ் போன பிறகு ஓட்டம்பிடிச்சவர் தா ...போயிட்டு வந்தவர்க்கு அப்படியே ஆத்தவா கூட்டியாந்து கட்டி (மணம் முடிச்சு) வச்சுடாங்க..
    குதிரை ஏறிவருதல்,தாய் மாமன் பெண்ணெடுத்த சீர்,எழுதிங்கள்னு எல்லா சீர் செஞ்சு முடிச்சாங்களாம்.....
    உட்கழுத்து சரட பத்தி ஆத்தாகிட்ட தா தெரிஞ்சுகிட்டேன்..அய்யன் இருக்கும் வரை அது உள்ளங்கழுத்தை அலங்கரித்தது
    ஆத்தாவோட அம்மாவுக்கு அம்மாய் ஊரான கரியாம்பட்டிக்கு விருந்துக்கு போயி எங்க அப்பிச்சி போட்டுட்டு போன சட்டை பத்தாம போச்சாம அப்படி விருந்து வச்சுருக்காங்க..அப்போ .
    எங்கப்பா சொந்த மாமன் மகளான எங்கம்மாவ கூட்டிட்டி ஓடிபோயி கல்யாணம் மூச்சதுக்கு சுமார் 18 வருஷம் பேசவில்லை..அவ்வளவு வைராக்யம் ஆத்தாவுக்கு..சொந்தத்துல மூச்சதுக்கே அப்போ அப்படி ரோசம் பார்த்து இருக்காங்க.. செல் போன எடுத்து பேசுனா சொல்லு சாமி என்ற அந்த பாசக்கார குரலுக்கு வயதே ஆகவில்லை... உடல் தளர்ந்தாலும் மனத்தெம்பு அதிகம்
    இன்று ‪#‎முதியோர்‬ தினம்..அதனால் நினைவு கூர்ந்தேன்...
    என் அம்மாய் இல்ல அம்மா தான். (சின்ன வயதில் என்னை வளர்த்தவங்க) அருமைக்காரி செல்லாத்தாள் அவங்களுக்கு அன்பு முத்தங்கள்

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates