Trending

Friday 25 September 2015

சீதனம்

சீதனம் வரதட்சணை போன்றவற்றை சமூக கொடுமையாக்கி நம் பாரத சமூகத்தையே கொடுமைக்கார பெண்ணடிமை சமூகம் என்று சித்தரித்து வந்தனர். தர்மம், சமூக அமைதி, பெண்களுக்கு உயரிய இடம் கொடுத்து வந்த நம் சமூகத்தில் இப்படி ஒரு கொடுமையா என்று நம்மை குற்ற உணர்ச்சியில் தள்ளப் பார்க்கிறார்கள். உண்மையில் சீதனம் கொடுப்பது பற்றிய முழுமையாக பார்ப்போம்.





சீதனம் என்னும் சொல் ஸ்திரீ+தனம் என்ற சொற்களின் இணைவால் வந்தது. அதாவது பெண்களுக்காக தகப்பனாரால் கொடுக்கப்படும் சொத்து; ஆண்களுக்கு கொடுக்கப்படும் வரதட்சணை (வரன்+தட்சிணை) அல்ல. சீர்வரிசைகள் பெண்ணுக்கென்று ஆணின் பொறுப்பில் கொடுக்கப்படும். பெண்களுக்கே உரித்தானது. நம் மரபுப்படி, கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளை தான் பெண்ணுக்கு நிறைய பரிசுகள் கொடுக்கவேண்டும். இதை மங்கள வாழ்த்திலும் காணலாம்,

பல்லக்கு முன்னடக்கப் பரிசுகள் பறந்துவர...
... வெகுசனத் துடனே விடுதியில் இறங்கி
வாழ்வரசி மங்கைக்கு வரிசை அனுப்பும்என்றார்                                 
நாழியரசிக் கூடை நன்றாக முன்னனுப்பிப்
பொன்பூட்டப் போகிறவர் பேடை மயிலிக்கு
நல்ல முகூர்த்தம் நலமுடன் தான்பார்த்துப்
பெட்டிகளும் பேழைகளும் பொன்னும் சீப்பும்
பட்டுத்துணி நகையும் பார்க்கக் கண்ணாடியும்
சத்துச் சரப்பணி தங்கம்பொன் வெள்ளிநகை
முத்துச் சரப்பணி மோகன மாலைகளும்
திட்டமுள்ள மங்கையர்க்குத் திருப்பூட்டப் போறமென்று
அட்டதிக்கும் தானதிர அடியுமென்றார் பேரிகையை
அருமைப் பெரியவரும் அன்ன நடையாரும்                                          

பெருகும் வளைக்கையால் பேழைமுடி ஏந்திநின்று
இன்னுஞ்சில பெண்கள் இவர்களைச் சூழ்ந்துவரச்
சென்றுஉட் புகுந்தார்கள் திருப்பெண்ணாள் மாளிகையில்
கொண்டுவந்த அணிகலனைக் கோதையர்க்கு முன்வைக்கக்
கண்டுமனம் மகிழ்ந்தார்கள் கன்னியர்கள் எல்லோரும்
நாட்டில்உள்ள சீர்சிறப்பு நாங்கள் கொண்டுவந்தோம்
பூட்டுமென்றார் தோடெடுத்துப் பொன்னவளின் திருக்காதில்
அடைக்காயும் வெற்றிலையும் அன்பாக மடியில்கட்டி

மேலும் கல்யாணம் செய்து கொடுத்ததற்கு பரியப்பணம் என்று ஒரு தொகை பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை வீட்டாரால் கொடுக்கப்படும். அதன் காரணம், பெண்ணை இவ்வளவு நாள் வளர்த்தவர்களுக்கு கொடுப்படும் ஈட்டுத் தொகை போல. அதை பெண் வீட்டாரும் அவர்கள் குடி சாதிகளும் பிரித்துக் கொள்வார்கள். அதே சமயம் இந்த பரியப்பணமே முழுமையாக ஈடு செய்ய இயலாது என்பதால் தான் பெண்ணை கொடுத்தவர்களுக்கு அவர்கள் பெண் வயிற்றில் பிறக்கும் குழந்தையின் மீது முதல் உரிமை வருகிறது. தாங்கள் ஒரு பெண்ணைக் கொடுத்திருப்பதால் அந்த வீட்டின் பெண்ணை எடுத்துக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு வருகிறது. அதனால்தான் தாய்மாமனுக்கு திரட்டிச் சீர் முதற்கொண்டு கல்யாணம் செய்துகொள்ளும் உரிமை வரை முதலுரிமை அளிக்கப்படுகிறது. தாய்மாமன் கேட்டால் பெண்ணை கொடுத்தே தீரவேண்டும், அதுவே தர்மம். தாய்மாமனன்றி வேறுபக்கம் கல்யாணம் செய்வதென்றாலும் தாய்மாமன் பொட்டுப் போட்டு ஆசிர்வாதம் செய்து அனுமதி தர வேண்டும். இல்லையேல் வேறுபக்கம் கல்யாணம் செய்யமுடியாது; அது ஸ்திரீஹத்தி என்ற பாவதிற்குரிய செயலாகும்.

சீதனம் என்பது பெரும்பாலும் சொத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு நிகரான தங்கம், பசுக்கள், பொருட்கள் போன்றவை இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு பிரித்தளிக்கப்படும். அல்லது மூன்று வருஷ வெள்ளாமை வருமானத்துக்கு நிகரான பொருள் சீதனமாக அளிப்பது மரபு. அசையா சொத்துக்கள் சீதனமாக கொடுக்கப்படுவதில்லை. மங்கள வாழ்த்து பெண் வீட்டார் கொடுக்கும் சீர்வரிசை என்று குறிப்பிடுபவை கீழே,

மாமன் கொடுக்கும் வரிசைதனைக் கேளீர்
துப்பட்டு சால்வை சோமன் உருமாலை
பஞ்சவண்ணக் கண்டாங்கி பவளநிறப் பட்டாடை
அத்தியடித் துத்திப்பட்டு ஆனையடிக் கண்டாங்கி
இந்திர வண்ணப்பட்டு ஏகாந்த நீலவண்ணம்
முறுக்கு வளையல்களும் முகமுள்ள கொலுசுகளும்
பதக்கம் சரப்பணி பகட்டான காசுமாலை                                                       

கட்டிலும் மெத்தையும் காளாங்கி தலையணையும்
வட்டில் செம்பும் வழங்கும் பொருள்களும்
காளை வண்டியும் கன்றுடன் பால்பசுவும்
குதிரையுடன் பல்லாக்கு குறையாத பலபண்டம்
நிறையக் கொடுத்தார்கள் நேயத்தோர் தானறிய!

--சீர்வரிசைகளை சபையில் எல்லாரும் அறிய கொடுக்க வேண்டும்--

கல்யாணத்தின் போது கொடுப்பது மட்டுமின்றி, குழந்தை பிறந்தால் குழந்தைக்கு சீர், காதுகுத்துக்கு சீர், பெண் குழந்தை என்றால் திரட்டி சீர், வருஷந்தோறும் தீபாவளி மற்றும் ஆடி நோம்பிக்கு துணி மற்றும் நோம்பிக்காசு, வாசப்பொங்கச்சீர், தனிக்குடித்தனம் சென்றால் வீட்டு செலவுகள் அத்தனையும், மேலும் தங்கள் பெண் வீட்டார் நிலம் வாங்கினாலோ வீடு கட்டினாலோ அதற்கு தங்கள் தரப்பு பணம் என்று வருஷந்தோறும் பெருந்தொகை பெண்ணுக்காக பெண்ணைப் பெற்றவர்கள் சீராக கொடுக்கிறார்கள்.

பெரும்பாலும் உறவு முறையிலேயே நம்மவர்கள் கல்யாணம் செய்துவந்தால், அவர்கள் வீட்டுப் பெண் இங்கே வருவதும் நம் வீட்டுப் பெண் அங்கே செல்வதும் வாடிக்கையாக இருப்பதால் சொத்துப் பிரிவினை/பிரச்சனை கிடையாது. சர்க்கார் சொந்தத்தில் கல்யாணம் செய்யக்கூடாது என்ற பொய் பிரச்சாரம் செய்ததால், இன்று கண்ட பக்கம் கல்யாணம் செய்துகொள்வதால் தான் சொத்துப்பிரச்சனையே வருகிறது.

நிலத்தை பிரித்து பிரித்துக் கொடுப்பதால் விவசாயம் செய்ய முடியாத அளவு வெகு சீக்கிரத்தில் உடைந்துபோகும். உதராணமாக நான்கு ஏக்கர் விவசாயம் செய்யும் விவசாயி பெண்ணுக்கு இரண்டு ஏக்கர் கொடுத்து பின் அவர் மகன் இரண்டு ஏக்கர் பண்ணையம் பார்ப்பார். அவருக்கு இரண்டு மகள் ஒரு மகன் பிறந்தால் என்னாவது? சொத்தைப் பிரித பெண்களும் அவ்வளவுதூரம் வந்து விவசாயம் செய்ய இயலாமல் போவதால் எவனுக்காவது விற்க வேண்டி வரும். அந்த விவசாயி அரை ஏக்கர் விவசாயம் செய்ய வழியின்றி விவசாயமும் கிராமமும் சேர்ந்தே அழியும். மேலும் உறவுகளுக்குள் மன கசப்பு வேறு. இவை மட்டுமின்றி ஒரு வனம் விவசாய பணிக்காக விளைநிலமாக மாற்றப்பட்டு காலகாலதிற்கும் அந்த வனதேவதை ம்ற்றும் கறுப்பு சக்திகளுக்கு பூஜைகள் மற்றும் பலிகள் நடக்கும்வண்ணம் முன்னோர்கள் குலகுரு மற்றும் ஆன்மீக பெரியோர்களைக் கொண்டு கிராம வாஸ்து பிரகாரம் ஏற்பாடு செய்திருப்பார்கள். அந்த பணிகள் தடைப்படும்போதும், விவசாயம் நடைபெறாத போதும், குளம் குட்டைகள் கிணறுகள் அழியும் போதும், அந்த தெய்வ சக்திகள் ஆக்ரோஷமடையும். அதன் கோபம மற்றும் சாபத்திற்கு நம் வம்சமே ஆளாக நேரிடும். இதை இங்கே படிப்பதை விட, நேரில் கிராமங்களிலும் ஆன்மீக பெரியவர்களிடமும் சென்று விசாரித்தால் இந்த பாவத்தின் வீரியம் புரியும்.

அதற்காக நம் சமூகத்தில் நிலமே பெண்களுக்கு கொடுக்க மாட்டோமா என்றால் அதுவுமில்லை. சூழ்நிலைகள் நிர்பந்தித்தால் நிலம் தரவும் தயங்கியதில்லை. எனவே இங்கே நிலத்தின்மீதுள்ள பற்றால் அல்ல, சமூக அமைப்பு குடும்ப அமைப்பு வலுவாக இருக்க பெரியவர்கள் சேர்ந்து உருவாக்கிய ஏற்பாடுகள்தான் நம்முடைய சீர்-சீதன நடைமுறை என்பது தெளிவு. பெண்களுக்கு நிலம்-உரிமை கொடுத்த சில உதாரங்கள் கீழே,

ஒரு கூட்டத்தில் பெண் எடுக்கும்போது, அந்த பெண்ணுக்கு ஏதேனும் குறை (உடலளவில்) இருந்தால், அந்த பெண்ணை கட்ட யாரும் முன்வராத பட்சத்தில், சொந்தத்தைத் தவிர்த்து வெளியே பெண் கொடுக்க நேரும். அப்போது அந்த பெண்ணை வேறிடத்துக்கு அனுப்பினால் வேலை செய்ய இயலாமை, மற்றும் வேற்றிடம் என்பதால் பெண் கஷ்டப்படும் என்பதால் பெண்ணை பெற்ற கூட்டத்தினர் அனைவரும் சேர்ந்து தங்கள் கோயில் உரிமை மற்றும் நிலத்தில் பங்கினை மாப்பிளைக்கு கொடுத்து தங்கள் ஊரிலேயே வைத்துக் கொள்வார்கள். இப்படி நிலமும் கோயிலும், காணியுரிமையும் பெறுவது சீதனக்காணி எனப்படும்.. இங்கே கவனிக்க வேண்டியது, ஒரு குடும்பத்தில் குறையான பெண்ணின் வாழ்க்கைக்காக பங்காளிகள் அனைவருமே சேர்ந்து தங்கள் கோயில், நிலத்தில் பங்கு கொடுக்கிறார்கள் என்றால் அந்த காலத்தில் பெண்களை எவ்வளவு உயர்வாகப் பாசமாக போற்றினார்கள் என்பதும், பெண்ணுக்கு அசையும் சொத்து மட்டுமே என்பது நிலத்தின் மீதான ஆசையால் அல்ல என்பதும், பங்காளிகளின் முக்கியத்துவமும், ஒற்றுமையும் எப்படி இருந்திருக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேணும்.
  1. பிடாரியூர் காணி, ஈஞ்ச கூட்டத்தாரால் பொருள்தந்த கூட்ட குடியானவர்களுக்கும் பின்னர் அவர்கள் கூறை கூட்டத்து குடியானவர்களுக்கும் சீதனமா கொடுத்தது.
  2. கத்தான்கண்ணி கன்ன கூட்டத்துக்கு சீதனமா கிடைச்சது. கொடுத்தது செவ்வந்தி கூட்டம். 
  3. கூடலூர் காணி, பண்ணை கூட்டத்திடம் இருந்து வெண்டுவனுக்கு சீதனமா கிடைச்சது.
  4. பெருந்துறை காணி, பூந்துறை காடை கூட்டத்துக்கு சீதனமா கன்ன கூட்டத்தாரால் வாங்கி கொடுக்கப்பட்டது.
  5. மல்லசமுத்திரம் விழியன் கூட்டத்துக்கு, மல்லசமுத்திரம் பருத்திப்பள்ளி செல்லன் கூட்டத்தாரால் சீதனமா கொடுத்தது.
  6. சித்தாளந்தூர் சேரன் கூட்டம் கன்ன கூட்டத்துக்கு கால் காணி உரிமை சீதனமா கொடுத்தார்கள்.
  7. முத்தூர் காணி மணியன் கூட்டத்துக்கு சீதனமா வந்தது. கொடுத்தது முத்தன் கூட்டம். ( தேரோட்டம் குறித்த பிரச்சனை தீர்வால் மணியனுக்கு காணியதிகாரம் கிட்டியது என்று சிற்சில மாற்றுக் கருத்துக்களும் உண்டு)
  8. தென்முகம் வெள்ளோடு காணி மற்றும் அதற்குட்பட்ட மூன்று கரைகள், வடமுகம் வெள்ளோட்டு பயிற கூட்டத்தாரால் சாத்தந்தை கூட்டத்து மாப்பிளைகளுக்கு கொடுக்கப்பட்டது. வடமுகத்தில் இருந்த புத்தூர் புதுப்பாளையம் கரை, பயிர கூட்டத்தால் சாத்தந்தைகு கொடுக்கப்பட்டது.
  9. காடையூர், பொருள்தந்த (முழுக்காதன்) கூட்டத்துக்கு சேட கூட்டத்தாரால் கொடுக்கப்பட்டது. ஆதி கருமாபுரம் காணியில் இருந்து காடையூர் வந்த பொருள்தந்த கூட்ட குடியானவருக்கும் நல்லூர் சேட கூட்ட காணியாளர் குடும்ப பெண்ணுக்கும் பிறந்த வம்சமே பின்னாளில் காடையூர் காங்கேய மன்றாடி என்ற பட்டகார பதவி பெற்றவர்கள்.
  10. காங்கயம் பெருங்குடி கூட்டத்தால் செங்கன்ன கூட்டத்துக்கு காணியுரிமை கொடுக்கப்பட்டது. குடியானவராக சித்தாளந்துரில் இருந்து வந்த இந்த காங்கயம் செங்கன்ன கூட்டத்தாரே பின்னாளில் பட்டக்காரர் பதவி பெற்றனர்.
  11.  வாழவந்தி நாட்டில் வாங்கல் பெருங்குடி கொடுத்ததே மணியனுக்கு மோகனூர் காணி.
  12. வடமுகம் வெள்ளோடு, வள்ளிபுரம் சாத்தந்தைக்கு பயிர கூட்டம் கொடுத்ததே வள்ளிபுரம் கரை. வெள்ளோட்டில் காணியுரிமை.
இதே நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் அரசாங்கமே பெண்களுக்கு நிலம் கொடுத்தல் கூடாது என்று சட்டமறிவித்திருக்கிறது. இதை உடுமலை தளி கல்வெட்டின் மூலம் அறியலாம். அக்கால சூழலில் தேவையாயிருந்திருக்கும். 

நக நட்டு, பவுனு, பண்டம் எல்லாம் பொண்ணுக்கு நிலம் நீச்செல்லாம் ஆணுக்கு என்று நம் முன்னோர்கள் பல காலமாக பின்பற்றி வந்த மரபால் சகோதர உறவுகளும், கிராமமும் விவசாயமும் செழித்திருந்தது. ஆனால் இன்று, சர்க்கார் மற்றும் வெளிநாட்டு தேசவிரோத சக்திகள், கல்யாணத்தின்போது கொடுக்கப்படும் பாரம்பரிய சொத்துரிமையை தடுத்தும், தீயது என்றும் பழி சுமத்திவிட்டு, பெண்ணுரிமை என்ற பேரில் நிலங்களை கூறுபோட்டுவிடுகிறார்கள். நம் சமூக மக்கள் பெண்ணை வளர்த்து கல்யாணமும் செய்துகொடுத்து அத்தனை சீர்களும் செய்த பின்னரும் தங்கள் நிலத்தை பிரித்துக் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இந்த பெண்கள் சொத்துரிமை சட்டத்தால், சில சாதிகள் நம் சமூக பெண்களை காதல் வலையில் வீழ்த்தி கல்யாணம் செய்து நம் சொத்துகள மீது வழக்குப் போட வைக்கிறார்கள். அல்லது, கல்யாணம் செய்யாமல் இருக்க பேரம் பேசி லட்சம்-கோடி என்று பணம் பறிக்கிறார்கள். மேலும், ஒருவரை கல்யாணம் செய்துவிட்டாலே அவர் உழைத்து சம்பாதித்த சொத்திலும், அவர் பரம்பரை சொத்திலும் பெண்ணுக்கு உரிமை வந்துவிடுகிறது! அதேபோல மனைவி என்பதற்கு கல்யாணம் செய்யவேண்டும் என்பதில்லை; உடலுறவு மட்டுமே போதும் என்றும் தீர்ப்புகள் வந்துள்ளது கேவலமானதும், ஆபத்தானதுமான எதார்த்த சூழலாகும். 

நம் சமூகத்தில் பெரும்பாலான பெண்கள் மற்றும் அவர்களின் கணவர்கள் பெருந்தன்மையோடு, சட்டம் சொல்வதை விட்டுவிட்டு, தங்கள் சொந்தமே முக்கியம் என்று ஒத்தை ரூபாய் கூட வாங்காமல் சகோதரர்களுக்கு சொத்தை விட்டுக் கொடுக்கிறார்கள். சில இடங்களில் சிறிதளவு பணம் வாங்கிக் கொண்டு கையெழுத்து போட்டுக் கொடுக்கிறார்கள். மிக அரிதாகவே, பணத்தாசை பிடித்தவர்கள், அல்லது அவர்களால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் தங்கள் சொந்த குடும்பங்கள் மேலேயே வழக்கு தொடர்கிறார்கள். இதனால் விவசாயம் லாபமற்றதாகவும், குடும்ப உறவுகள் சிதைந்தும் போகிறது. 

தற்போது, பெண்ணின் கல்யாணத்தின் போதோ அல்லது பெண் மேஜரான உடனேயோ பெண்ணிடம் கையெழுத்துப் பெற்றுவிடுவது பரவலாக நடக்கிறது. இன்றைய காலசூழலில் இதை தவறென்று சொல்வதற்கில்லை. அதேபோல, ஒருவர் சுயமாக சம்பாதித்த சொத்தை எப்படி தனது குடும்பம் மற்றும் வாரிசுகள் பயன்படுத்த வேண்டும் என்பதையும் வரையருப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளைக் கொஞ்சம் தவிர்க்க இயலும்.

எனவே சர்க்கார் மற்றும் வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதல்களுக்கு பலியாகாமல், நம் முன்னோர் வழியில் வாழ்ந்து சிறப்படைவோம்.


மேலும் படிக்க,

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates