Trending

Monday 28 September 2015

குடியானவர்

குடியானவர் - குடி என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவான சொல். சாதி என்ற சொல்லால் சாதியைக் குறிக்கும் முன்னரே குடி என்ற சொல்லே பயன்பட்டு வந்துள்ளது. தொல்காப்பியம், திருக்குறள் எல்லாவற்றிலும் ஜாதியை குடி என்றே சொல்லியிருக்கிறார்கள். குடியானவர் என்ற சொல்லின் மேன்மையும் தொன்மையும் விளங்கியிருக்கும். நாடோடி/பழங்குடி வாழ்க்கைக்கு மேம்பட்டவர் குடியானவர். குடியானவர் என்றால் நாடோடி வாழ்க்கையில் இருந்து ஓரிடத்தில் நின்று நிலைத்து வாழ்வதற்கான வாழ்வாதாராங்களை, தனக்கும் தன்னை அண்டி வாழும் பிற சாதிகளுக்கும் உருவாக்கி, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நெறிமுறைகளோடு வாழும் வெள்ளாளர். குடியானவர் என்ற சொல்லிற்கு விவசாயி; குடிகளைக் காப்பவர்; நாட்டின் பிரஜை என்று பல்வேறு பொருள்களில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கொத்துக்காரர், மணியக்காரர், பட்டக்காரர் என்று ஒருவன் எந்த பதவி வகிக்கவும் அடிப்படையில் அவன் குடியானவராக இருத்தல் வேண்டும். கொங்கதேச வரலாறு முழுக்கவே குடியானவர்கள் பட்டக்காரர் பதவி பெற்ற வரலாற்றைப் பல இடங்களில் காண முடியும். கவுண்டன், வெள்ளாளன், காராளன் என்பதுபோல குடியானவர் என்பதும் நம்மை குறிக்கும் ஒரு சொல்.





தொல்காப்பியம்:

பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயில்
நிறையே யாருளே உணர்வொடு திருவென
முறையுறுக் கிளந்த ஒப்பினது வகையே

மேற்கண்ட பாடல் அன்றி பல இடங்களிலும் குடி என்று குலம் குறிக்கப்பட்டுள்ளது.

திருக்குறளில் ஜாதியை (குடி) பற்றிய குறள்கள்  - குடி செயல்வகை, குடிமை என்ற அதிகாரங்களே உண்டு.

இவை மட்டுமின்றி ஏராளமான சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் ஜாதியை குறிக்க குடி என்ற சொல்லே பெரும்பாலும் பயன்பட்டுள்ளது. அக்காலத்து டிக்ஷனரியான பிங்கள நிகண்டும் குடியை குலம், இனம், ஜாதி என்று உறுதி செய்கிறது. தீய பழக்கங்களால் ஜாதியை அழிக்கப்பவர்கள் குடிக்கேடி என்றும் குடிக்கேடன் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். அவ்வளவு ஏன், ஜாதிப் பெருமைக்கு பழைய பெயர் குடிச்செருக்கு என்பதேயாகும். மேலும் குடி என்னும் சொல், பல இடங்களில் வசிப்பிடம், ஊர், கிராமம் என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. குடிக்கூலி (குடக்கூலி என்று திரிந்தது) என்பதும் ஓரிடத்தில் வசித்ததற்கான வாடகை. குடிக்காணம் என்பது வீட்டு வரி. குடிக்காசு என்பது கிராம வரியும், குடிக்காவல் (பாடிகாவல் என்றும் சொல்லப்படுவது) ஊர்க்காவலையும் குறிக்கும்.

குடியானவன் என்ற சொல் வெள்ளாளர் (விவசாயி) என்றும் பிரஜை என்றும் ஓரிடத்தில் நின்று வாழ்பவன் என்ற பொருளிலும் வழங்கப்பட்டு வந்துள்ளது.

குடியானவன், குடி என்ற சொற்களின் மேன்மையும், தொன்மையும் விளங்கியிருக்கும்.



மேலே கண்ட இலக்கிய மேற்கோள்கள் மூலமே, ஜாதி-ஊர்-விவசாயம்-வசிப்பிடம் போன்றவற்றின் இடையே உள்ள ஒற்றுமை ஓரளவு விளங்கியிருக்க வேண்டும். ஆதியில் மனிதன் உணவு சேகரிப்பவனாகவும், ஓரிடத்தில் நிலைபெறாது இடப்பெயர்ச்சிக்கு ஆட்பட்டவனாக, நாடோடியாக இருந்தான். அடிப்படைத் தேவைகள், வாழ்விடம் எதுவும் உறுதியில்லை என்ற நிலையற்ற வாழ்க்கைச் சூழலால் அவனது வாழ்க்கை முறை இப்படித்தான் என்று வரையறுத்துக் கொள்ள இயலவில்லை.

ஓரிடத்தில் நின்று வாழ அடிப்படைத் தேவைகளாக உணவும் நீரும் வேண்டும். உணவை உற்பத்தி செய்யவும், நீரை முறையாக தேக்கி பயன்படுத்தும் பாசன முறைகளும் வெள்ளாளர்கள் கைத்திறன் ஆதலால், ஊர் அமைப்பை நிறுவி நின்று வாழும் முறையை கொண்டு வந்தவன் விவசாயியான வெள்ளாளன். ஊர் அமைப்பு உருவான பின்னர்தான் நிலையான வாழ்க்கை முறை, பிற தேவைகளுக்கான ஜாதிகளை (18 கட்டுக்கண்ணி சாதிகள்) சேர்த்தது, ஒருவருக்கொருவர் பின்பற்றவேண்டிய சட்டம், சமூக கொள்கைகள், வாழ்க்கைமுறையின் அடிப்படையில் பண்பாடுகள், வழக்கங்கள் அனைத்தும் தோன்றின. சமூகங்கள் இப்படித்தான் உருவாயின. இப்படி நின்ருவாழும் சாதிய சமூக வட்டத்துக்குள் வராதவர்கள், சமூக வாழ்க்கைக்கு விரோதமாக செயல்பட்டு விலக்கப்பட்டவர்கள், OutCaste ஆவர்.

ஆக, குடியானவன் என்றால் சமூக வாழ்க்கைமுறைக்கு வந்தவன் என்றும், ஓரிடத்தில் நின்று வாழ்பவன் என்றும், இந்த பண்பட்ட வாழ்க்கைமுறைக்கு தேவையான அடிப்படைகளை அனைத்து சாதிகளுக்கும் உருவாக்க காரணமான வெள்ளாளர் குடியானவர் என்றும் முதன்மையாக அழைக்கப்பட்டார்.


பின்னர்தான் இந்த பெயரின் பெருமையை எண்ணி, இதே சமூக வாழ்க்கை முறைக்கு வந்த பிற சாதிகளும் பின்பற்ற துவங்கின. ஆனால் இன்றளவும் குடியானவர் என்றால் விவசாயம் செய்பவர் வெள்ளாளர் என்ற பொருளே அனைவர் மனதிலும் தோன்றும்.

ஓரிடத்தில் நின்று வாழ்வது சாதாரணமான காரியம் அல்ல. நாடோடி வாழ்க்கையில் உணவு சேகரிப்போடு வேலை முடிந்தது; ஆனால் குடியான வாழ்க்கையில் உற்பத்தியும் செய்து, சேகரித்து, பாதுகாத்து, உற்பத்திக்கான துணை சாதிகளையும் ஆதரித்து, சமூக சட்டங்களை காத்து, ஒருங்கிணைத்து செல்லவேண்டும். அதனால் தான் குடியானவர் என்றாலே, அதிக பொறுப்போடு இருக்க வேண்டியவர், கடினமாக உழைக்கக் கூடியவர், ஒழுக்கமாக இருக்க வேண்டியவர் என்று சொல்கிறார்கள்.


சிறிது நேரம் அதிகமாக தூங்கினாலும்கூட,

"குடியான பையன் இந்நேரம் வரைக்கும் தூங்கறதா??" 

என்பார்கள். இந்த வார்த்தையை கேட்காத கவுண்டன் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி இல்லை என்று சொல்பவன் நிச்சயம் கவுண்டராக இருக்க வாய்ப்பு குறைவு.

அரசர, பிராமணர், வியாபாரிகள் என்று சமுதாயத்தில் யாருக்கு என்ன தேவை என்றாலும் பாதிப்பு, நஷ்டம் என்றாலும் அதை இறுதியாக தாங்குவது குடியானவர்களே. இதை கம்பரும் தனது ஏர் எழுபது நூலில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அதே கருத்து, மிக எளிமையாக ஒரு பழமொழியாகவும் உண்டு,

"செட்டி நட்டம் குடியானவன் தலையில்"

அதாவது ஒரு செட்டியார் தனது வியாபாரத்தில் நொடிந்தாலும் அதை குடியானவரிடம் விலை குறைக்கச் சொல்லி பேரம் பேசித்தான் சமன்செய்து கொள்ளவேண்டும்.

குடியான பொறுப்புணர்ச்சிக்கு உதாரணமாக,
"குடியான பிள்ள வெளையாட போனாலும் ஒரு கத்த வெறகோட வரும்"

என்ற பழமொழி சொல்வார்கள்.

கேலிக்குகூட ஏதாவது முறையற்ற பேச்சுக்கள் பேசினாலும்,

"குடியானவன் பேசற பேச்சா இது?" 


குடியானவர் நீதியுணர்ச்சிக்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு வேண்டாம். இது கொங்குப் பகுதியில் சேலம் வட்டத்தில் உலவும் சேகரிக்கப்பட்ட பழமொழி.
"தாய் தந்தை செத்தா பொழைக்கலாம் 
நாணயம் செத்தா பொழைக்கலாமா?"

இன்றும் பெரும்பாலான பகுதிகளில் கவுண்டர்கள் அல்லது பிற வெள்ளாள ஜாதியினர் வாழும் பகுதிகளை குடித்தெரு, குடியான தெரு என்று சொல்வார்கள்.

வெள்ளாளர் அனைவரது ஆதி பாட்டனான மரபாளன் தனது பல பேர்கள் பற்றி வெள்ளாளர்களின் ஆதி குருவான ஸ்ரீ போதாயன மகரிஷியிடம் கேட்டபோது, போதாயனர் குடியானவன் என்பது மரபாளனின் பெயர் என்று கூறி, குடியானவன் என்பதற்கு விளக்கம் கொடுத்தது கீழே,






அண்ணமார் சாமிகள் கதையில் நல்லதங்காள் தங்கள் குடும்பத்தை குடியானவர் என்று சோழப் பிரதானியிடம் சொல்லும் வாசகம்,

"உத்தமியாள் நல்லதங்கை ஏது சொல்வாள் அந்நேரம்
நாங்கள் பட்டிக்காட்டு குடியானவர் எங்களுக்கு பல கறியும் சிக்காது
ஐந்தாறு கறி நினைத்து அண்ணா உண்ணுமினிச் சாதமென்று"



ஆக குடியானவர் என்பது ஒரு சமூகவியல் சொல்லாகும். இந்த சமூகவியல் சொல்லோடு கொத்துக்காரர், மணியக்காரர், பட்டக்காரர் போன்ற நிர்வாகவியலைக் கலந்து குழப்பிக் கொள்வது தகாது. அந்த நிர்வாகப் பதவிப் பேர்கள் குடும்ப உறவுகளுக்குள் புகுந்த கொங்குப்பகுதிகளில், அன்று முதல் இன்றளவும் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. இதுபோன்ற குழப்பங்கள் கொங்கில் வேறு எங்கும் காணவியலாது. குடியானவர் என்பது வெள்ளாளர், காராளர், குவளைமார்பன், கங்கா குலத்தோர் என்பதுபோல வெள்ளாளர்களுக்கான பெருமைமிகு பொதுப்பேராகும்.

சிவார்ப்பணம் 

5 comments:

  1. குடியான பெண்களின் வீரமனம் பல சமயம் மிரளச் செய்யும்.. என் ஆயா வயது எழுபது இருக்கும்.. நடுங்கும் கையோடு என் கையை பிடித்துக் கொண்டு ஒரு நாள் சொல்லியது..

    "பொன்னு.. தவலாறுனு வந்துவுட்டா, மொத ஈடு நம்புளுதா இருக்கோணும்.. ஒரே இறுக்குல ஆள உலுக்காட்டிப்புடனும்; அடுத்த அடிக்கு ஆளு எந்திரிக்க கூடாது, சாமி சாமி உட்டுருங்க னு கால புடுச்சரோனும்.. நம்பள எதுத்து பேசறக்கே ரோசன பன்னோணும்.. உங்க ஐயன் எப்பவும் அப்பிடித்தா இருப்பாரு.. அதுக்குதான், 'காத்திருக்கறப்பவே தூத்திக்கோணும்; ஆளிருக்கரப்பவே அடிச்சரோனும்' னு சொல்றது.. உட்டுட்டு அப்பறம் வெறும் பலம பேசி என்னத்துக்கு ஆவுது?"

    ReplyDelete
  2. ரொம்ப நாட்களாக இருக்கும் நட்புகளுக்கு புரியும்.... சில விசயங்கள் ஆழமாய் இதயத்தில் பதிந்துவிடும் அதனை அப்படியே உளறிவிடுவேன் அப்படித்தான் இதுவும்...
    சரியாக தைப்பூசம் நாளிலிருந்து ஐந்தாம் நாள் தரிசனம் சென்னிமலையில் கலைகட்டும். காலையில் முதல்வண்டிக்கு பயணமாகி சென்றதும் தேர்சுற்றி சுப்பிரமணியாண்டவரை வழிபட்டு அண்ணமார் தியேட்டரில் படம்பாத்து கடைவீதி சுற்றி ராட்டினம்ஆடி தண்ணிதுப்பாக்கி வாங்கி மாலை அருக்காணி ஓட்டலில் ரெண்டு புரோட்டாவோடு முடித்துகொண்டு அஞ்சரைமணி கேஏழு கவர்மென்ட் பஸ்ஸை பிடித்து மாடு பால்கரவைக்கு வந்தாகிவிடும்...

    சரியாக பதினைந்து வருடத்திற்கு மேலாக இருக்கும். நான் அக்கா அப்பா குடும்பம் சகிதகமாக தேர்தரிசனத்திற்கு சென்றிருந்தோம்.. அப்பாவிற்கு அவ்வளவாக வியாக்கானம் பத்தாதுனு அப்பவே அக்காதான் நிதிமந்திரி. ஒவ்வொரு செலவுகள் முடிந்தபின்னும் இன்னும் இவ்வளவுதான் இருக்கும்னு நிதி அறிக்கை வந்துகொண்டே இருக்கும். அந்தவருடம் நாங்கள் மூன்றுபேருக்கும் சேந்து கொண்டுபோன மொத்தபணம் இருநூற்றைம்பது. காலையில் பத்தரை மணிக்கு அண்ணமார் தியேட்டரில் நாட்டாமை படம் பார்த்தாகிவிட்டு வழக்கம்போல் கடைசுற்றிவருகையில் இன்னும் இருபது ரூவாதான் இருக்கிறது என்று நிதி அறிக்கை வந்துவிட்டது. சரி என்று இந்த வருடம் அருக்கானி ஓட்டல் பரோட்டோவை கான்சல் செய்துவிட்டு பேருந்துக்கு செல்ல ஆரம்பித்தோம்...

    அப்பவே ஐயா கொஞ்சம் கணக்குல புலி மூனுபேரும் ஊருபோவ தலைக்கு ரண்டிருவது மொத்தம் ஏழு ரூவா.... மீதி இருக்கிற பதிமூனு ரூவாய்க்கு என்னத்த வாங்கி தரச்சொல்லலாம்னு கடைகடையா நோட்டம் போட்டுக்கொண்டே வந்தேன்...

    அந்த ஆசையில் மண்ண அள்ளிப்போடவே வந்தான் ஒருத்தன். அழுக்கு சட்டை அழுக்கு வேட்டியோடு வந்தவன் என் தந்தையிடம் "மூனுநாளா இங்கதா கெடக்கறனுங்க பெரி கவுண்டரே ஊருபோவ சிலுவானமிருந்தா கொடுங்க சாமி " என்று தலையை சொரிந்துகொண்டே கேட்டான்.....

    எதையும் தொலைநோக்கு பார்வையோடு பார்க்கும் சக்தி அப்பவே நமக்கு இருந்ததால் "டே மோகா சுதாரிச்சுக்க உனக்கு ஆப்படிக்க ஒருத்த வந்துட்டானு " அடிமனதில் அலாரம் அடிக்க.. அவன் பேசும்போதே அக்காவை பார்த்து வேண்டாம் வேண்டாம்னு சைகை போட்டேன்...

    அதற்குள் என் தந்தையார் "பாப்பு அந்த காசை குடு "

    நான்-பஸ்ஸிக்கு மட்டும் அளவா கொடு அக்கா

    தந்தை- ரண்டு நாள் சோறுதண்ணி இல்லாத கெடப்பானாட்ட இருக்குது குடுத்துடு நாம ஆராச்சிகிட்ட வாங்கினா போவுது...

    நான்- ஆருகிட்ட வாங்குவிங்க நெசவுக்கு வார மாமன்லாம் இன்னிக்கி வரமாட்டங்க லீவு

    தந்தை-குடு பாப்பு (அதட்ட அக்காள் கொடுத்துவிடுகிறாள்)

    அதன்பின் யாருகிட்ட போயி தேரன்னிக்கி காசு கேக்கறது பஸ்சு வந்ததும் ஏறீருங்க கண்டக்டர் சாமிநாத மாப்ளதா வருவாரு சொல்லி டிக்கட்ட வாங்கிட்டு நாளைக்கு சந்தைக்கி காங்கியம் போறப்ப கொடுத்தா கெடக்குது... அப்படினு சொல்ல... வண்டி வந்த்தும் அதேபோல் கடன்சொல்லி சன்னல் சீட்டிக்கு சண்டை கட்டி ஊருவந்து சேந்தோம்.....

    மூன்றுநாளாக குடித்து கும்மாளம் போட்டவனை வீட்டுக்கு அனுப்பிவிட தன் சொந்த பிள்ளைகளை பட்டினியோடு அழைத்து வந்தவர் என் தந்தை. அன்று நான் தந்தையிடம் எதற்கு அவனுக்கு பணம் கொடுத்திங்கனு கேட்டதிற்கு "நமக்கு ஆருகிட்ட கேட்டாலும் பணம் வாங்கீருலாம் அவனுக்காரும் தரமாட்டாங்க சோத்த உண்ணுட்டு ஊடு போவுட்டும் தம்பி" அப்படினார் ஆனால் இன்று ஒருவரின் இயலாமையை எப்படிலாம் இழிவு செய்கிறார்கள்...... எப்படி எல்லாம் கேவலப்படுத்துகிறார்கள்.....

    ‪‎பணமும்‬ வசதியும் பெருகிய இந்த காலத்தில் மனிதம் சுருங்கிவிட்டது... ஒருவருக்கு உதவ மனமில்லாமல் பெருமைக்கு சம்பாதிக்கும் வெறும் பணத்தை வைத்து ‎பகட்டும்‬ ‎திமிறும்‬ ‪‎கொழுப்பும்‬ ஊறிக் கிடக்கும் ஜந்துக்கள் எல்லாம் நம்மை விமர்சனம் செய்யும்போதுதான் நம் குடும்பத்தின் வளர்ப்பின் பெருமை நமக்கு புரிகிறது.

    ReplyDelete
  3. சின்ன வெங்காயத்துக்கு 'ஈரங்காயம்'னு பேரு எப்படி வந்துச்சு தெரியுமா? (ஈர வெங்காயம் தான்இப்படியாச்சு!)

    அது ஏன்னா....அப்பல்லாம் வாரச் சந்தைலதான் எல்லாம்! மாட்டு வண்டில தான் பாரப்போக்குவரத்து நடக்கும்... எங்காளுங்கள எதுக்க பாத்துட்டா
    'ஆய்'னு கைய,மண்டைய ஆட்டிட்டு போயிட முடியாது.. சோட்டுக்கு சோடு வயசா இருந்தாலும் "வாங்க மாப்ள"ன்னு பெருசா ஒரு கும்பிடு போட்டுட்டு மொதல்ல மழைமாரில ஆரம்பிச்சு அப்புறமா பண்டம்பாடிக்கு(கால் நடை) வந்து பட்டி நாய் போட்ட குட்டி நாய் வரைக்கும் வெசாரிச்சுட்டு
    தான் கடைசியா போச்சாது போங்கற மாதிரி மனுஷ ஜீவனுங்களுக்கு வருவாங்க... அவங்களுக்கு மண்ணு, பண்டம் பாடி தான்உயிர் நாடி.. வீட்டு மனுசங்களுக்கு கை வைத்தியம் பாத்தாலும் பண்டம் பாடிக்கு ஒண்ணுன்னா ஓடிப் போயி மாட்டு டாக்டர (கால் நடை வைத்தியர்)கையோட கூட்டிட்டு வந்து பண்டுதம் (வைத்தியம் )பாத்து அவர் கேக்கற காசக் குடுப்பாங்க ...

    சொன்னா நம்ப மாட்டீங்க.. எரும மாடுன்னு இல்ல..ஒரு ஆடு போட்ட குட்டி செத்துட்டா கூட போதும்.. ஊட்டு மனுசன் மண்டையப் போட்டா துக்கம் விசாரிக்க வர்ற மாதிரி ஒரம்பரை வந்த
    வண்ணமா இருக்க காபி அடுப்பு எரிஞ்ச வண்ணமா இருக்கும்...சொந்த பந்தம் மட்டுமில்ல... பழகுன பலவட்டற ஜாதியும் வரும்...வர்றவங்க சும்மா கைய வீசிட்டு வர மாட்டாங்க...ரெண்டு சீப்பு வாழப்
    பழம், வளத்திப் பன்னு,கொளந்தைங்க இருந்தா பிரிட்டானியா பிஸ்கட்டு,மிக்சரோ பூந்தியோ எல்லாங் கலந்து ஒரு ஒயர் கூடை நெறைய வரும் .. ஆட்டு குட்டிய பறி குடுத்து மாபெரும் துக்கத்துல இருக்கற இவங்க சின்ன ஆளுங்களா? ஒயர் கூடைய வாங்கிட்டுப் போயி உள்ள இருக்கறத எடுத்து வச்சுட்டு ஒரம்பரை கிட்ட பேசிட்டே ஒரு காரியம் பண்ணுவாங்க பாருங்க.. அந்த கூடைக்குள்ள அவங்க தோட்டங் காட்டுல என்னென்ன வெளஞ்சுதோ அத்தனையும் கொஞ்சங் கொஞ்சம் எடுத்து வச்சுடுவாங்க... கடலைக்காய், தேங்காய், பாவக்காய்,அவரைக்காய்.... எல்லாத்துலயும் சிலதப் போட்டு சந்தில்லாம அமுக்கி திணிச்சு கொண்டு வந்து வெக்கைல ஊட்டுக் கவுண்டன் தம் பங்குக்கு ஒரு குண்டப் போடுவான்பாருங்க "அட.... கொழுந்தியாளுக்கு கொட்டமுத்து கொஞ்சம்
    குடுத்து உடு" (கொட்டமுத்து-ஆமணக்கு) பைல தான் எடமே இல்லியேன்னு நீங்க சந்தோசப்பட்டுட முடியாது.. அங்க இங்க தொழாவி கெடைக்கலன்னா
    பக்கத்து ஊட்ல போயி குறியாப்பா(கைமாத்து)
    ஒரு மஞ்சப் பைய வாங்கிட்டு வந்து கொட்டி அமுக்கி யையோட காத இழுத்து முடிஞ்சும் குடுத்துடுவாங்க.. கவுண்டன் சொன்ன கொஞ்சம் கொட்டமுத்து ரெண்டு கிலோவுக்குக்கொறையாது... நாம வாங்கிட்டுப்போனது அஞ்சு கிலோன்னா திரும்ப வரைல பத்துக் கிலோவச் சொமந்து தோள் பட்ட கழண்டுடும்.. அத என்ன 'ம'னாவுக்கு
    அப்படிச் சொமக்கணும்? ..வேண்டாம்னுட்டு வர வேண்டியது தானன்னு புத்திசாலித்தனம் காட்டப் படாது ...கேவலமாயிடும் ... வெள்ளாளனுக்கு தன் வெளச்சல மத்தவங்களுக்குக் குடுக்கறதுல ஒரு சந்தோசம்.. அத மறுக்க முடியாது... கூடாது ... அது ஒரு மொறமை.. சாங்கியம் !நாமளும்
    வெறுங்கைய வீசிட்டுப் போகக் கூடாது ...
    அவங்களும் வெறுங் கையா நம்மள அனுப்ப மாட்டாங்க...

    ReplyDelete
  4. உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்... வர்றவங்க அத்தன பேரும் வாங்கிட்டு வர்ற பண்டங்க அத்தனையும் ஒரு மினி ஆட்டோவுக்கே லோடாகுமே...அத என்ன பண்ணுவாங்க... அதானே?மேட்டைச் சரிச்சு பள்ளத்தைச் நெறைக்கறது வெள்ளாளன் டெக்னிக்... இல்லாதப் பட்டவங்களும் வருவாங்களே? அன்னாட கூலிங்க...பண்ணை ஆளுங்க.. அவங்களும் அந்த மாபெரும் துக்கம்
    வெசாரிச்சு காபித் தண்ணி குடிச்சுட்டு கெளம்பும் போது பெரிய கவுண்டர் தொண்டையக் கனச்சு கவுண்டச்சிக்கு சிக்னல் குடுக்க காத்திருந்த மாதிரி பெரிய கவுண்டச்சி ஒரு பையோட வருவாங்க... எல்லாத்துலயும் கொஞ்சங் கொஞ்சம் அதுல இருக்கும்.. பை நிறைய!குடுக்கும் போது சிரிச்சுக்கிட்டே இப்படி சொல்வாங்க..

    "கொழந்தைங்களுக்குக் குடு" (கொடுத்தல் கர்வமற்றிருப்பின் பெறுதலும் உறுத்தலற்றுப் போகும் ) இங்க ஆட்டுக் குட்டி சாவு ஒரு சாக்கு...
    ஏன்னா... பண்ணையம்கறது எட்டு மணி நேர ஆபீஸ் டூட்டியோ, ஊன்னு சங்கூதுனா அங்கராக்க(சட்டை) மாட்டற மில்லு வேலையோ இல்ல..எந் நேரமும் மண்ணுலயே,,, அதையே தாவிக் கட்டிப் புடிச்சு அதோடயே பொரண்டுக்கிட்டு கெடக்கணும்.. மூணு பீஸ் கரண்ட் பகவான் நட்ட நடு ராத்திரில கண்ணு தொறப்பார்... ஒரு கைல பேட்டரி லைட்டு, இன்னொரு கைல மமுட்டியோட... பேய் கூட தூங்கலாமான்னு யோசிக்கற நேரத்துல தண்ணி கட்டப் போகணும் .. நாளைக்குப் பாத்துக்கலாம்னு குளுருக்கு பொண்டாட்டிய அணைஞ்சு படுத்துட
    முடியாது.. (அறுத்துப் போடுவா அம்மிணியே!)...
    வெடிஞ்சா தண்ணி மொறை அடுத்த பங்குக் காரனுக்குப் போயிடும்.. பாம்பு,பல்லிய யோசிக்காம போய்த் தான் ஆகணும்.. நடுக் காட்டுக்குள்ள விரியன் பாம்பு புடுங்குனா ஊடு வர்றதுக்குள்ள கண்ணு நட்டுக்கும்... பாடை கட்ட வேண்டியது தான்.. பண்ணையம்கறது 24மணி நேரம் பத்தாதுங்கற விசயம்... சும்மா இந்த ஞாயித்துக்கெழம இந்த ஒரம்பரை ஊடு அடுத்த ஞாயித்துக் கிழம அந்த ஒரம்பரை ஊடுன்னுபோக முடியாது..அதனால இப்படி ஆடு மாடு செத்தா அத சாக்கா வெச்சு ஒரு ரவுண்ட் வர்றது..



    ReplyDelete
  5. அடடா....விசயத்த உட்டுப்போட்டு எங்கியோ
    போயிட்டேன்.. மழை மாரி, பண்டம் பாடி. ஊட்டு
    மனுசங்கள வெசாரிச்சுட்டு கடேசீல தான் "சந்தைக்கு என்ன கொண்டு வந்தீங்க?"ன்னு வருவாங்க... சரி வயசுக்காரங்க கிட்ட சாதாரணமா, 'வெங்காயமுங்க மாப்ள'ன்னு சொல்லலாம்..அவங்களும் தப்பா
    எடுத்துக்க மாட்டாங்க... ஆனா,பெரியவங்க கிட்ட?
    பெரியவங்க எதுக்க வந்தா வலசலுங்க பம்மற பம்மு இருக்கே?காணக் கண் கோடி வேண்டும்.. படார்னு தலத் துண்டு தோளுக்கு வரும்(பெருசுங்க முன்னால தலைல துண்டக் கட்டிக்கிட்டு பேச மாட்டோம்) மடிச்சுக் கட்டியிருக்கிற வேட்டி கீழ எறங்கும்.."வாங்க மாமா"ன்னு பெரிய கும்பிடும் போடணும்.. அங்கயும் பெருசு, சிறுசு பாகுபாடு
    பாக்காம "வாங்க மாப்ள"யும் கும்பிடும் வரும்.. அப்புறமென்ன?அதே கதை தான்...மழை மாரி... பண்டம் பாடி... கடேசியா அந்தக் கேள்வி வரும்
    "வண்டிப் பாரம் என்ன மாப்ள?" இது மாப்ள காதுல சரியா உளுவலைன்னா பம்மிகிட்டே கேப்பாரு பாருங்க "தென்ன கேட்டீங் மாமாங்?"

    மரியாதை ஒவ்வொரு வார்த்தைலயும்கொஞ்சத்த முளுங்கிடும்... மாப்ள கேட்டதுக்கு அர்த்தம் இதான்
    "என்ன மாமா கேட்டீங்க?"

    சிரிச்சுக்கிட்டே மாமங் கேப்பார் இப்படி "அட.. அரணாக் கவுறு கூட இல்லாம அம்மணத்தோட பொறந்த மாப்ள.. சந்தைக்கு என்னய்யா கொண்டு
    வந்தீங்க?"

    இது எங்க பக்கத்து நக்கலுக்கு சின்ன சாம்பிள்... மாப்ளக்கு சங்கடம் தான்... கிண்டல் பண்ணத் தெரியாம இல்ல... மூணு தலக் கட்டா குடுத்து எடுக்கற மாமன். அவர் அக்காவ இவங்கப்பன் கட்ட...
    இவனோட அக்காவ மாமங் கட்ட... மாமன் புள்ளய இவனுக்குன்னு வளப்பாங்க... அவரக் கிண்டல் பண்ண முடியுமா? அதுக்காக கிண்டலக் கேட்டுகிட்டு சிரிச்சுக்கிட்டும் போயிட முடியாது.. அத மாமனே ரசிக்கமாட்டார்.. கிண்டலும் இருக்கணும்..மரி
    யாதையும் கொறையப் படாது...கூட சிரிச்சுக்கிட்டே பதில் வரும் இப்படி... "அண்டர் வேரும் அங்கராக்கும் போட்டுக்கிட்டுப் பொறந்த மாமனுக்கு தெரியாதுங்களா? ஈரங்காயமுங்க" வெங்காயம் எங்களுக்கு ஈரங்காயமான கதை இது தான்!
    ---------------------------------------------------------
    பி.கு....

    1)இத கிலோ கணக்குல மொட்டாட்டம்
    தொலிக்கற நம் பெண்தெய்வங்களை வணங்குகிறேன்

    2)எங்க மதிலியங் காட்டுக்குப் போயிருந்தேன்.. எம்பதத் தாண்டுன எங்க பெரியப்பா பழனிச்சாமி கவுண்டர் தென்ன மரத்துக்கு தண்ணி கட்டிக்கிட்டிருந்தார்... ஒரு மகன் ரிக் ஓனர்...இன்னொருத்தன் வெளி தேசத்துல வேல...கை நிறைய சம்பாதிக்கறாங்க..அவரு ஆசப் பட்டா காருல போய் எறங்கலாம்...இன்னும்
    எம்பத்திச் சொச்ச வயசுல றாலி சைக்கிள் தான்... ஒருக்கா பேசிக்கிட்டிருக்கறப்ப கேட்டேன்
    "ஏம் பெரியப்பா இன்னுஞ் சீரழிஞ்சுகிட்டு...?ஜாலியா ரெஸ்ட் எடுக்கலாமே?" மடிப்பைல இருந்து வெத்தலய எடுத்துக்கிட்டே சிரிச்சுட்டுச் சொன்னார்
    "ரெஸ்டா அப்புனு....? மமுட்டி புடிச்சு
    மண்ணக் கொத்தறவனுக்கு மண்ணுக்குள்ள போற வரைக்கும் ரெஸ்ட்டேது ? நாலாளுக்கு மேலாளாப் போறது தான் ஒரே ரெஸ்ட்டு" (பாடை மேல போறத அவரு பாணில சொல்றார்!)

    3)தோட்டத்து வீட்டுக்கு பின்னால நின்னுகிட்டு பீடி
    ஒண்ணப் பத்திக்கிட்டே ரெண்டு மைலுக்கு அக்கட்ட இருக்கற சிப்காட் பக்கம் பாக்கறேன்... மானத்த தொடற ராட்சச பொகைக் கொழாய்ங்க...அதையும் தாண்டி நிக்கற செல் போன் டவர்...2500 ஏக்கர்
    பரப்பளவுள்ள பரந்து விரிந்த சிப்காட் பத்தி முன்னொரு காலத்துல பெருமை இருந்துச்சு... இப்ப நெஞ்சு முழுக்க இனம் காண முடியாத கசப்பு... அந்தக் கசப்பா... பீடி பொகை கசப்பான்னு தெரியல... வாந்தி வர்ற மாதிரி தொண்டைல கசப்பு ஓங்கரிச்சு வர காறித் துப்பறேன் சிப்காட் பக்கம்....
    "த்தூ"

    ReplyDelete

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates