Trending

Monday 31 December 2012

எட்கர் தர்ஸ்டன் சொல்வதெல்லாம் நிஜமா?

தான்தோன்றித்தனமான எட்கர் தர்ஸ்டன் நூல் பல்வேறு சாதிகளைப் பற்றி பல தவறான தகவல்களைக் கொண்டுள்ளது. அந்த நூலில் சொல்லப்படும் செய்திகள் எந்த அளவு உண்மையானது, சமூக ரீதியாகவும் சட்டரீதியாகவும் எப்படி ஏற்றுக் கொள்ளக்கூடியது என்பதற்கு ஒரு உதாரண வழக்கு.

நன்றி வழக்கறிஞர் திரு சொக்கலிங்கம் அவர்கள்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு விசித்திர வழக்கு விசாரணைக்கு வந்தது. பாலுசாமி ரெட்டியார் - எதிர் - பாலகிருஷ்ணா - AIR 1957 Mad 97. திருநெல்வேலி ஜில்லாவை சேர்ந்த இராமசாமி என்பவர் நான்கு திருமணங்கள் செய்து கொண்டார். அவருடைய முதல் மனைவி ஆவுடைய அம்மாள். அவர் இறந்துவிட்டார். முதல் மனைவியின் மகள் வயிற்று பேத்தி எல்லம்மாள். இரண்டாவது மனனவி வள்ளியம்மாள், இவருக்கு எந்த வாரிசும் கிடையாது. மூன்றாவது மனைவி சுப்பம்மாள். சுப்பம்மாள் இறந்துவிட்டார், ஆனால் அவருக்கு ஒரு மகன் இருந்தார். நான்காவது மனைவி வேறு யாருமில்லை முதல் மனைவியின் மூலம் தோன்றிய பேத்தியான எல்லம்மாள் தான் நான்காவது மனைவி. நான்காவது மனைவியின் மூலம் இராமசாமிக்கு மூன்று ஆண் வாரிசு, மூன்று பெண் வாரிசு. இராமசாமி எல்லம்மாளை திருமணம் செய்து கொள்ளும்பொழுது அவருக்கு வயது 70, எல்லம்மாளுக்கு வயது 12. சில வருடங்களுக்குப் பிறகு, வயதான இராமசாமி இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர், அவர் தன் வாரிசுகளுக்குகாக ஒரு பாகப்பிரிவினை பாத்யதையை ஏற்படுத்தினார். அந்த பாகப்பிரிவினை பத்திரத்தில் தன்னுடைய நான்காவது மனைவிக்கும் அவருடைய வாரிசுகளுக்கும் எந்த சொத்தையும் ஒதுக்கவில்லை.

இதை தெரிந்துகொண்ட நான்காவது மனைவியும் அவரது வாரிசுகளும் மற்றவர்களின் மீது வழக்கு தொடுத்தனர். மேற்சொன்ன பாகப்பிரிவினை பத்திரம் போலியானது என்றும், இராமசாமியின் சொத்தில் தங்களுக்கும் உரிமை இருக்கிறது என்றும், எனவே தங்களுக்கும் பங்கு வேண்டும் என்றும் வாதிட்டனர். இரண்டாவது மனைவியும், மூன்றாவது மனைவியின் மகனும் அதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர்களுடைய வாதம், பாகப்பிரிவினை பத்திரம் போலியானது அல்ல; இராமசாமிக்கும் எல்லம்மாளுக்கும் நடைபெற்ற திருமணம் செல்லாது; எப்படி ஒரு தாத்தா தன் பேத்தியை திருமணம் செய்து கொள்ளமுடியும் என்றும் எதிர்வாதம் வைத்தனர். அதற்கு எல்லம்மாளின் வாரிசுகள், தாத்தா பேத்தியை திருமணம் செய்து கொள்வது தங்கள் ரெட்டி ஜாதியின் சம்பிரதாயம் என்று வாதிட்டனர். மேலும் இதற்கு சான்றாக சில நபர்களை நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வைத்தனர். வாதிகளின் சார்பாக ஐந்து பேர் திருநெல்வேலி ரெட்டி சமூகத்தில் தாத்தா பேத்தியை திருமணம் செய்து கொள்வது சம்பிரதாயம் என்று சாட்சியம் அளித்தனர். முதலில் சாட்சியம் அளித்த 70 வயதான காமக்கம்மாள் குறிப்பிட்டதாவது, தான் தன்னுடைய தாய்வழி பாட்டனார் சென்னப்ப ரெட்டியாரை திருமணம் செய்துகொண்டதாகவும், இந்த திருமணத்தின் மூலம் தனக்கு குமராண்டி ரெட்டியார் என்ற மகன் இருப்பதாகவும் தெரிவித்தார். அடுத்து சாட்சியமளித்த ஒரு நபர் தன்னுடைய இரண்டாவது மனைவி தன்னுடைய மகளான லேக்கம்மாள் என்பவரது பேத்தி என்றும். தங்களுக்கு திருமணம் நடந்து 20 அல்லது 25 வருடங்கள் ஆகியிருக்கும் என்று தெரிவித்தார். ஆனால் அந்த சாட்சியத்தை குறுக்கு விசாரணை செய்ததில், அவர் திருநெல்வேலி ஜில்லாவில் குறிப்பிட்ட கிராமத்தில் ரெட்டி சமூகத்தை சேர்ந்த 70 குடும்பத்தினர் இருக்கின்றனர் என்றும் ஆனால் இந்த வழக்கைப் போல் தாத்தா, பேத்தியை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு மற்ற குடும்பங்களில் நடக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் அவர் தன்னுடைய சாட்சியத்தில் இம்மாதிரி சம்பவங்கள் வெவ்வேறு கிராமங்களில் இங்கொன்றும், அங்கொன்றுமாக நடந்ததாகத்தான் தெரிவித்தார். வாதி எல்லம்மாளும் தனக்கும் தன்னுடைய தாத்தாவிற்கும் நடந்த திருமணத்தைப் பற்றி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

மேலும் வாதி தரப்பில் தங்களது கூற்றுக்கு ஆதாரமாக “Castes and Tribes in Southern Indian" என்ற புத்தகத்தை ஆதாரமாக காண்பித்தனர். இந்த புத்தகத்தை எழுதியவர் சென்னை அருங்காட்சியகத்தின் மேற்பார்வையாளர் மற்றும் மருத்துவராக இருந்த எட்கர் தர்ஸ்டன் என்பவர். பிரிட்டிஷ் அரசாங்கம் தென்னிந்தியாவில் உள்ள மனித இனங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய சொல்லி எட்கர் தர்ஸ்டனை பணித்திருந்தது. தன்னுடைய ஆராய்ச்சியின் விளைவாக, எட்கர் தர்ஸ்டன் “Caste and Tribes in Southern India" என்ற ஏழு வால்யூம் கொண்ட புத்தகத்தை எழுதி பதிப்பித்தார். அதில் டாக்டர் ஷோரடர் என்பவரை மேற்கோள் காட்டி “திருநெல்வேலி ரெட்டி சமூகத்தில் 16 முதல் 20 வயது உள்ள பெண்களை ஐந்து அல்லது ஆறு வயது உள்ள பாலகர்களுக்கு திருமணம் செய்து வைப்பர். ஆனால் திருமணமான அந்தப் பெண்கள் தங்களுடைய தாய்வழி பாட்டனார் வீட்டில் குடித்தனம் நடத்துவர், அல்லது சில சமயங்களில் கணவனின் தந்தை வீட்டில் இருப்பர். இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள், அந்த பாலகக் கணவனின் வாரிசுகளாகக் கருதப்படுவர்” என்று குறிப்பிட்டிருந்தார் எட்கர் தர்ஸ்டன். இதை மேற்கோள் காட்டிய வாதிகள், தாத்தா பேத்தியை திருமணம் செய்துகொள்வது தங்களுடைய தொன்றுதொட்ட பழக்கம் என்று வாதிட்டனர். இவர்களுடைய வாதத்தை ஏற்றுக்கொண்ட கீழ் நீதிபதி வாதிகளுக்கு சார்பாக தீர்ப்பளித்தார்.
எதிர்தரப்பினர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மேல்முறையீடு வழக்கு ஜி.மேனன் மற்றும் பி.ஏ. சயீத் நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் பின்வரும் தீர்ப்பினை வெளியிட்டனர்.

திருநெல்வேலி ஜில்லாவில் அந்தக் குறிப்பிட்ட கிராமத்தில் ரெட்டி சமூகத்தை சேர்ந்த 70 குடும்பத்தினர் இருக்கின்றனர். ஆனால் இந்த வழக்கைப் போல் தாத்தா, பேத்தியை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு மற்ற குடும்பங்களில் நடக்கவில்லை. இம்மாதிரி சம்பவங்கள் நடைபெற்றதாக சாட்சியம் அளித்தவர்களும் வெவ்வேறு கிராமங்களில் இங்கொன்றும், அங்கொன்றும் நடந்ததாகத்தான் சாட்சியம் அளித்திருக்கிறார்கள்.

“Caste and Tribes in Southern India" என்ற புத்தகத்தில் டாக்டர் ஷோரடர் என்பவரை மேற்கோள் காட்டி சொல்லப்பட்ட சம்பவத்திற்கு நம்பும்படியான ஆதாரங்கள் இல்லை. டாக்டர் ஷோரடர் எங்கே, எப்பொழுது யாரை விசாரித்து இந்த மாதிரி பொதுவான முடிவுக்கு வந்தார் என்று தெரியவில்லை. இருப்பினும் இம்மாதிரி சம்பவங்கள் நடைபெறவில்லை என்று சொல்லுவதற்கில்லை, ஆனால் அதற்காக இதற்கு அங்கீகாரம் வழங்கமுடியுமா என்றால் முடியாது. ஒரு சம்பிரதாயம் சட்டத்தின் படி அங்கீகாரம் பெறவேண்டும் என்றால் அது நியாயமாக இருக்கவேண்டும், அனைவராலும் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கவேண்டும், பொது கொள்கைக்கு எதிராக இருக்கக்கூடாது, ஒளிவு, மறைவு இல்லாமல் வெளிப்படையாக பின்பற்றப்பட்டிருக்கவேண்டும், பன்னெடுங்காலமாக, தொடர்ச்சியாக மக்களால் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். ஒரு சம்பிரதாயத்தில் இவைகள் இல்லாத போது அதை சட்டமும், நீதிமன்றமும் அங்கீகரிக்க முடியாது. தாத்தா பேத்தியை திருமணம் செய்துகொள்ளலாம் என்று ஏற்றுக்கொண்டால் பேரன் பாட்டியை திருமணம் செய்துகொள்ளலாம் என்ற வாதமும் முன்வைக்கப்படலாம். எனவே இம்மாதிரி சம்பிரதாயங்களெல்லாம் பொது கொள்கைகளுக்கு விரோதமானது, ஏற்புடையதாகாது. தாத்தா பேத்தியின் திருமணத்தை இதுவரை எந்த நீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை. எனவே இராமசாமி தன்னுடைய பேத்தியான எல்லம்மாளை திருமணாம் செய்துகொண்டது செல்லுபடியாகது. ஆகவே வாதிகளின் வழக்கு நிலைக்கதக்கதல்ல. எதிர்வாதிகளின் மேல் முறையீடு அனுமதிக்கப்படுகிறது. வாதிகளின் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது.

No comments:

Post a Comment

All Time Best

Popular Posts

Popular Posts This week

Designed By Blogger Templates